'ஜெயிச்சுட்டான் என் கொம்பன்..!' முதன்முறையாக நேரில் ஜல்லிக்கட்டு பார்த்த அனுபவம்
"நீங்க பார்த்திருக்கீங்களா?"
"இல்ல..."
"போலாமா..."
"போலாம்."
இந்தக் கேள்வியும், பதிலும் அந்தப் பயணத்தைத் தொடங்கியது. இருக்கும் வேலைகளை பரபரவென முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு புறப்படத் தயாரானோம். நண்பர்கள் பலரும் வருவதாய் சொல்லியிருந்தனர். "ஒரு கார் பத்தாது" என்பதில் தொடங்கி, கடைசியில் "இதுக்கு பைக்கே போதும்" என்ற எண்ணிக்கையில் கிளம்பினோம். ஜல்லிக்கட்டு!!!
ஜல்லிக்கட்டு ஞாபகங்கள் என்று பயணத்தில் அசை போட எனக்கு ஏதும் இருக்கவில்லை. காரணம், இதுவரை நான் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால், ஜல்லிக்கட்டு சம்பந்தமாக அசைபோட எனக்கு மெரினா, தோழர்கள், நடுக்குப்பம், மீன் கடைகள், லத்திகள், ரத்தம், நெருப்பு, கண்ணீர், சசிகலா, ஓபிஎஸ், மிக்சர், ஹிப்ஹாப் ஆதி, இரண்டுக் குழந்தைகளோடு வந்த அந்தக் கன்னியாகுமரி அக்கா, போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்த அந்தக் கறுப்பு நிற ஜீன்ஸ், சர்ட் போட்ட மாற்றுத் திறனாளி என பல விஷயங்கள் இருந்தன. ஹைவே டிராபிக்கைக் கடந்து விழுப்புரம் அருகே வண்டி வேகம் எடுத்தது. உடன் வந்தவர்கள் உறங்கிப் போனார்கள். வேகமுள் நூறைக் காட்டிக் கொண்டிருக்க, வண்டியை ஓட்டியபடியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
விடியற்காலை நேரம். மதுரை நெருங்கிவிட்டிருந்தது. கொஞ்சம் தூக்கக் கலக்கமாயிருந்தது. அப்போது வரிசையாக ஐந்து மினி ட்ரக்குகளில் காளைகள் கொண்டு செல்லப்பட்டதைப் பார்த்ததும் உற்சாகம் பற்றிக் கொண்டது. காலை மணி சரியாக 4.30 அவனியாபுரம் சென்றடைந்தோம். அதிகாலையிலேயே அத்தனை பரபரப்பாக இருந்தது. ஒரு போலீஸ் கூட்டம் பேரிகேடுகளை வைத்துக் கொண்டிருந்தது. ஒரு கூட்டத்துக்கு இன்ஸ்பெக்டர் ஒருவர் மீட்டிங் நடத்திக் கொண்டிருந்தார்.
காரை ஓர் இடத்தில் பார்க் செய்துவிட்டு வேகமாக நடந்து போனோம். அவ்வளவு கூட்டம். கூட்டத்தில் உடன் வந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாய் பிரிந்து போனோம். வட்டமான ஒரு கேலரி. சுற்றிலும் மக்கள் கூட்டம்; ஒரேயொரு காளை வரும்; ஹீரோ அதோடு சண்டைபோட்டு மண்டியிட வைப்பார் போன்ற எந்த சினிமா சாத்தியங்களுக்கும் இடமில்லாமல், வேறு மாதிரியான அமைப்பில் இருந்தது ஜல்லிக்கட்டு ஏரியா.
கொஞ்சம் நீளமான, விசாலமான தெரு. இரு பக்கங்களிலும் பேரிகேடுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்குள் நின்றபடி தான் ஜல்லிக்கட்டைக் காண வேண்டும். வாடிவாசலுக்கு அருகே ஒரு வீட்டின் முன் இருந்த பேரிகேடில் தாவி ஏறினேன். என் ஜீன்ஸ் கிழிந்தது. அதை சரி செய்து கொண்டிருக்கும் போதே, அந்த வீட்டுக்காரர் வந்தார்.
"ஏலே... யாரு நீ... இங்கெல்லாம் நிக்கக் கூடாது. நீங்கெல்லாம் இங்கன வந்தா, நாங்க எங்குட்டுப் போய் நிக்கிறது. கிளம்பு, கிளம்பு" என்று முதலில் பொறிந்தவர், கொஞ்ச நேரத்திலேயே சமாதானமாகிவிட்டார். கூட்டமும் நெருக்கியடித்தது. ஜல்லிக்கட்டு விதிமுறைகளை அவரிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன்.
கொஞ்ச நேரத்தியிலேயே, "ஏப்பா, தண்ணி வேணும்னா கேட்டு வாங்கிங்க. இங்கன குடத்த வச்சிருக்கேன். சாப்பாடு கூட இருக்கு. பசிச்சா சாப்பிடுங்க..." என்று அத்தனை பாசமாக சொன்னார். ஏழரை மணி. கிட்டத்தட்ட 150 மாடுபிடி வீரர்கள் மஞ்சள், பச்சை பனியனுடன் களத்தில் நின்று கொண்டிருந்தனர்.
"ஏப்பா... வர்றது கோயில் மாடு. யாரும் தொடக் கூடாது... ஒத்து, ஒத்து ... ஒத்தி நில்லு. இது நம்ம அவனியாபுரம் பஞ்சாயத்து தலைவர் மாடு. ஜல்லிக்கட்டு குழு சார்பா அதுக்கு மரியாதை செய்யுறோம்... அந்தத் துண்ட போடுங்கப்பா" என்று ஒரு துண்டை காளையின் மீது போட்டார்கள். அந்தக் காளையை கொண்டுவந்தவர், முட்டி போட்டு அதனை அவ்வளவு அழகாக முத்தமிட்டார். மொத்தக் கூட்டமும் கைதட்டி, விசிலடித்து கரகொலி எழுப்பியது. மாடுபிடி வீரர்கள். கலெக்டரின் தலைமையில் பாதுகாப்பான ஜல்லிக்கட்டுக்கான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
"மெரினாவில் தொடங்கி... உலகம் முழுக்க ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா போராடுன நம்ம தமிழ் சொந்தங்களுக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு சார்பா நன்றிகள தெரிவிச்சிக்குறோம். இதோ... உலகமே எதிர்பார்த்திட்டிருக்கும் ஜல்லிக்கட்டு தொடங்க இருக்கு. ஏப்பா, காளை ரெடியா? இதோ வருது ‛அவனியாபுரம் ராமு காளை’, புடிச்சா ‛சில்வர் அண்டா’ பரிசு. வாடிவாசல மறிச்சு நிக்காதீங்க... ஏப்பா, தள்ளி நில்லு நீ... இந்தா புடிச்சுக்கோ..." என்று மைக்கில் அவர் சொல்ல, சீறிப் பாய்ந்து வந்தது அந்தக் காளை. இரண்டு, மூன்று பேர் அதைத் தழுவி திமிலைப் பிடிக்க முயல, உடலை சிலுப்பி, அவர்களைத் தள்ளி, ரோட்டில் போடப்பட்டிருந்த தேங்காய் நார்களைக் கலைத்து கொஞ்சம் தூரம் போய் நின்றது அந்தக் காளை.
"ஏ... பிடி மாடு இல்ல, இது பிடி மாடில்ல... மாட்டுக்காரரு வந்து பரிச வாங்கிக்க. ஏப்பா, ஒருத்தர் தான் மாட்ட பிடிக்கணும்னு தெரியாதா? அடுத்த காளை..." என்று அவர் சொல்வதும், காளைகள் வருவதும், அதைத் தழுவுவதும் என அற்புதமாக நகர்ந்தன அந்தக் காட்சிகள் . மாட்டை அடக்கிவிட்டால் அதை "பிடி மாடு" என்று குறிப்பிடுகிறார்கள்.
திண்டுக்கல் காளை ஒன்று வந்தது. வெள்ளை நிறம், சற்றே சிறிய உருவம் என பார்க்க அத்தனை சாதுவாகத் தெரிந்தது. ஆனால், கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு வீரர்களை நெருங்கவே விடாமல் இருக்கச் செய்தது. ஆனா, அதையும் இறுதியாக ஒருவர் அணைத்து நீல நிற பீரோவை பரிசாகப் பெற்றார்.
"ஏப்பா... அடுத்து வர இருக்குறது. நம்ம பி.ஆர். ஐயா காளை. இது சுத்துக் காளையா... தெரியும்ல? புடிச்சு மூணு முறை சுத்துற வரைக்கும் தாக்குப் பிடிக்கணும்; சைக்கிள் பரிசுப்பா. இந்தா வருது பாரு..." என்று அவர் சொன்னது தான் தாமதம், பல வீரர்கள் பயந்து பேரிகேடுகளில் தாவி ஏறிக் கொண்டனர். பேரிகேடுகள் உடைந்திடக் கூடாது என்று போலீசார் அவர்களை கீழே இறங்கச் சொல்ல... ‛‛இருங்க சார்... சுத்துக் காளை... சும்மாவா... தெறிக்கவிட்ரும்" என்றார் ஒரு இளைஞர். அதுபோலவே புயல் வேகத்தில் வாடிவாசலில் இருந்து பல அடி தூரத்திற்கு தாவி குதித்து வந்தது அந்தக் கறுப்புக் காளை. யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை.
பல காளைகளை வீரர்கள் தழுவினார்கள். சில காளைகளிடம் நெருங்கக் கூட முடியவில்லை. அன்று தொள்ளாயிரத்துக்கும் அதிகமான காளைகள் போட்டியில் பங்கு பெற்றன. எழுநூற்றுக்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்துக்கு 150 பேர் என களம் கண்டனர். ஒரு கட்டத்தில் களத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள், நகராமல் நீண்ட நேரம் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் எத்தனை சொல்லியும் வெளிவேறவில்லை. போலீஸ் முயன்றும் கூட அவர்கள் நகரவில்லை.
"ஏப்பா... என் சிங்கங்களா... கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. நீங்க வெளிய போனாத்தான், மத்தவய்ங்க உள்ள வர முடியும். இதப்பாரு, நமக்காக எத்தனை பேரு போராடியிருக்காங்க. இன்னிக்கு உலகமே இதப் பார்த்திட்டிருக்கு. தமிழர்களப் பத்தி அவங்க ஏதும் தப்பா நினைச்சுக்கக் கூடாதில்ல. அந்தப் போராட்டக்காரங்களுக்கு மதிப்பு கொடுத்து கிளம்புங்க" என்று சொன்ன உடன் அத்தனை பேரும் அமைதியாக களத்திலிருந்து வெளியேறினர்.
நுங்கு, பதநீர், குச்சி ஐஸ், முறுக்கு, வடை, காரசேவ், பஞ்சு மிட்டாய் என பலகாரங்கள் அத்தனை இருந்தன. கடக்கும் அத்தனை முகங்களில் அழகான சிரிப்பு. தேவையற்ற சலசலப்பு, சண்டைகள் பெரிதாக ஏதுமில்லை. மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. கிளம்பத் தயாரானோம்.
கறுப்பும், பழுப்பும் அதன் நிறம். அத்தனை உறுதியாய் இருந்தது. அப்போது தான் ஓடி முடித்திருந்ததால், "புஸ்...புஸ்..." என்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அதன் வாயில் எச்சில் வழிந்துக் கொண்டிருந்தது. தன் கையால் அதை சுத்தமாக துடைத்துவிட்டு, கட்டியணைத்து அந்தக் காளையின் நெற்றியில் முத்தமிட்டார் அவர். நான் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து,
"ஜெயிச்சாட்டான் என் கொம்பன். அதான் சந்தோஷம் தாலல..." என்று சொன்னபடியே, காளையின் கயிற்றைப் பிடித்துக் கொண்டவரை நோக்கி, கையிலிருந்த சீலிங் ஃபேனைக் காட்டினார்.
‛‛மருது... கொம்பன் ஷெட்ல இந்த ஃபேன மாட்டிரணும்டா... தம்பி களைப்பா இருப்பான். நீ போயி பின்னாடி தண்ணி, சாப்பாடெல்லாம் ரெடி பண்ணிரு" என்று அத்தனை மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
இதுபோன்ற காட்சிகளைப் பார்த்தபடியே காரைக் கிளப்பினேன். ஜல்லிக்கட்டுக்கும் எனக்கும் புது உறவு ஏற்பட்ட உணர்வு. காளைகள் எனக்கு இனி "தோழர்கள்". குளிரான அந்த இரவுப் பயணத்தில் அசைபோட எனக்கு ஜல்லிக்கட்டு கதைகள் நிறைய இருந்தன..
நன்றி
விகடன்.
No comments:
Post a Comment