Wednesday 22 February 2017

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணைக்கு முதல் கையெழுத்து போடுவேன்- திருச்சியில் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திருச்சியில் நடக்கும் உண்ணாவிரதப்போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இதற்காக கடந்த இரண்டு நாளில், திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடந்தது. ஒரே நாளில் பெரிய மைதனத்தில் பெரிய பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த போராட்டத்துக்காக நேற்று நள்ளிரவு திருச்சி வந்த ஸ்டாலின் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தவர், இன்று காலை 8.40 மணிக்கு திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானம் அருகே அமைக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்துவிட்டார்.
சரியாக 9 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் துவங்கிய உண்ணாவிரதப்போராட்டத்தில் ஸ்டாலினுடன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சரும் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர்.சி.பாபு, வீரமுத்திரயர் பேரவை நிறுவனர் செல்வகுமார், திமுக எம்.எல்.ஏக்கள் லால்குடி சவுந்தர்ராஜன், துறையூர் ஸ்டாலின் குமார், திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாநகரச் செயலாளர் அன்பழகன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கத் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இறுதியாக சிறப்புரையாற்றிய ஸ்டாலின்,
‘தமிழகத்தைக் காப்பாற்றுவது திமுகவின் கடமை. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமையத்தான் மக்கள் வாக்களித்தனர். தற்போதுள்ள ஆட்சி மக்களுக்குப் பிடிக்கவில்லை. இந்த போராட்டத்தில் திமுகவின் சுயநலம் இல்லை. மற்ற கட்சியினரும் போராட்டத்தில் பங்குபெற்றுள்ளனர். ஜெயலலிதா மறைந்த பிறகு திமுக நினைத்திருந்தால் ஆட்சியைக் கலைத்திருக்க முடியும். ஆனால் மக்கள் தேர்தெடுத்த ஆட்சியைத் தான் திமுக நடத்தும். இந்த ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோல் பெங்களூரு சிறையில் உள்ளது. ஒருபோதும் இந்த பினாமி ஆட்சியை ஏற்க மாட்டோம். திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம்.
ஜெயலலிதா மரணத்தில் பல முரண்பாடுகள் உள்ளது. ஓ.பி.எஸ் சொன்னதைப்போல ஜெ மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றால் இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரித்து இருக்கனும், இல்லை இதை ஓ.பி.எஸ் முன்னமே அறிவித்திருக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி தில் இருந்தால் திராணி இருந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த முடியுமா. அப்படி நடத்தினால் பெங்களூரு சிறையில் உள்ளவர்கள் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்..
இந்த ஆட்சி நீடித்து நிலைக்காது. விரைவில் மக்கள் உங்களைத் தூக்கி வீசுவார்கள். அப்படி தூக்கி எறிந்ததும் திமுக ஆட்சி அமைந்தால் எங்கள் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணத்தின் மீதான நீதிவிசாரணை நடத்தப்படும். இது உறுதி’ என்றார்.

No comments: