Wednesday 22 February 2017

பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி 60 மூட்டை அறுவடை!

              மந்தாரக்குப்பம் அருகே விவசாயி ஒருவர் தனது நிலத்தில் பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி செய்து, ஏக்கருக்கு 60 மூட்டை அறுவடை செய்து அசத்தி வருகிறார்.மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணியை சேர்ந்தவர் சீத்தாராமன். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி.இவர் தனது நிலத்தில், ஆண்டுதோறும் என்.எல்.சி., உபரி தண்ணீர் மூலம் பாசனம் செய்து, நெல் சாகுபடி செய்து வருகிறார். அவர், ஏக்கருக்கு 60 மூட்டை வரை அறுவடை செய்து, அசத்தி வருகிறார். தற்போது, சம்பா பட்டத்தில் ஆந்திரா பொன்னி (பி.பி.டி) சாகுபடி செய்துள்ளார்.அவர் கூறியதாவது:
  • என்.எல்.சி., தண்ணீர் மூலம் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்து வருகின்றேன். கடந்த குறுவை பட்டத்தில் டீலக்ஸ் பொன்னி சாகுபடி செய்து, 60 மூட்டை வரை அறுவடை செய்தேன்.

  • தற்போது, சம்பா பட்டத்தில் ஆந்திர பொன்னி (பி.பி.டி) சாகுபடி செய்துள்ளேன். நாற்று விட்ட 15 நாட்களுக்குள் நடவு செய்து விடுவேன். அதேபோன்று, தற்போது 15 நாட்களில் வரிசை முறையில் நடவு செய்துள்ளேன்.

  • குத்து பயிருக்கு 40 கதிர்கள் வரை வந்துள்ளன. அதற்கு பூச்சி மருந்து தெளிப்பதில்லை. நோய் தாக்குதல் இருந்தால் வேப்ப எண்ணெய் மட்டுமே தெளிப்பேன். அதே போல், இரவில் யூரியாவுடன் வேப்பம் புண்ணாக்கை கலந்து வைத்து, காலையில் பொட்டாஷூடன் கலந்து தெளிப்பேன். இது போன்று 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பேன்.

  • மேலும், வயல்களில் ‘டி’ வடிவ குச்சிகள் அல்லது தென்னை மட்டையின் அடிப்பகுதியை தலை கீழாக நட்டு, அதில் ஆந்தை மற்றும் பறவைகளை அமர செய்து எலிகளை கட்டுபடுத்துவதன் மூலம் பயிர்கள் சேதமின்றி காக்கப்படுகிறது.

  • இதனால் வயல்களில் பயிர் செழிப்பாக உள்ளது. வரும் டிசம்பர் மாத இறுதியில் அறுவடை செய்வேன். மேலும், வேளாண் அதிகாரிகள் அவ்வப்போது வயலை வந்து பார்வையிட்டு ஆலோசனை வழங்குவர். அவர்களது ஆலோசனைப்படி சாகுபடி செய்து, அதிக மகசூல் பெறுவேன்’ என்றார்.
நன்றி:தினமலர்

No comments: