Sunday 26 February 2017

வேடனுக்கு மோட்சம் வழங்கிய சிவபெருமான் – ஆன்மிக சிந்தனை!


திருவைக்காவூர் வில்வவனேஸ்வரர் கோவில் சிவராத்திரி பிறந்த தலமாகும். இது ஒரு முக்கியமாக இடமாக கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் தவநிதி என்ற முனிவர் இந்த கோவிலில் தங்கி இறைவனை வழிபட்டு வந்தார் என்ற கூற்றும் உண்டு. ஒருநாள் வேடன் ஒருவன் மானை வேட்டையாட துரத்திக் கொண்டு வந்தான். மான், கோவிலுக்குள் புகுந்து முனிவரை தஞ்சமடைந்தது. முனிவர் அதற்கு பாதுகாப்பு அளித்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த வேடன், முனிவரை தாக்க ஆயத்தமானான். உடனே சிவபெருமான் புலி வடிவமெடுத்து வேடனை கடுமையாக துரத்தினார். பயந்து போன வேடன் அருகில் இருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியில் நின்றது. வேடன் வேறு வழியின்றி மரத்திலேயே தங்கியிருந்தான். பசியும், பயமும் அவனை வாட்டின.
இரவும் வந்தது. தூங்கி விடாமல் இருப்பதற்காக வேடன் ஒவ்வொரு இலையாக பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவில் இருந்த சிவன் மீது விழுந்து கொண்டிருந்தன. அன்று மகா சிவராத்திரியாகும். உண்ணாமலும் உறங்காமலும் சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனை அறியாமலேயே கிட்டியது. இறைவன் அவன் முன் காட்சியளித்து அவனுக்கு மோட்சம் அளித்தார்.
அன்று அதிகாலை அவன் ஆயுள் முடிவதாக இருந்தது. அவன் உயிரை கவர்வதற்காக எமன் கோவிலுக்குள் நுழைந்தான். நந்திதேவர் எமனை தடுக்கவில்லை. எமனைக்கண்ட சிவபெருமான் தன் அடியாரின் உயிரைக் கவர வந்த எமனை தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றி கையில் கோலேந்தி விரட்டினார், எமன் ஓடினான்.
சிவபெருமான் எமனை கோவிலுக்குள் அனுமதித்ததற்காக நந்தி தேவர் மீது கோபம் கொண்டார். நந்திதேவர் பயந்து வாசல் நோக்கி திரும்பி எமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட்டார். பின்னர் எமன் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் கட்டளைப்படி எமன் விடுவிக்கப்பட்டான்.
கும்பகோணத்தில் இருந்து வடமேற்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இக்கோவில், மரண பயம் போக்கும் தலமாகவும் விளங்குகிறது.

No comments: