Saturday 25 February 2017

”குறையும் மேய்ச்சல் நிலம்” இறக்குமதி 

  செய்யும் ஆபத்தில் இந்தியா..!



இந்தியா முழுவதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலப்பரப்பு குறைந்து வருவதால், நாட்டிலுள்ள 299 மில்லியன் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் பால் தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மறுபுறம் விளைச்சில் நிலம் குறைந்துவருகிறது. இதே நிலை நீடித்தால்,இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்தியா பாலை இறக்குமதி செய்யக் கூடிய சூழல் ஏற்படலாம். இது பால் தேவைக்கு மட்டுமல்ல , எதிர்காலத்தில் எல்லா தேவைகளுக்கும் இறக்குமதியை நாடியே இருக்கவேண்டிய கட்டாயமும் இருக்கலாம்.
நம் நாட்டில் கடந்த சில வருடங்களில் தனி மனித வருமானம் அதிகரித்துள்ள காரணத்தினால், இந்திய மக்களின் உணவுப் பழக்கத்தில் பால் கட்டாயமாக இடம் பெற்று வருகிறது.இதன் காரணமாக வரும் 2021-22 காலகட்டத்தில்,இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை 210 மில்லியன் டன்னை அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது. அரசின் கணக்கீட்டின் படி,கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும்,இந்தியாவின் பால் தேவை 36 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தேவையை பூர்த்தி செய்ய,ஆண்டுதோறும் பால் உற்பத்தியானது 5.5 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.கடந்த 2014-15 மற்றும் 2015-16 காலகட்டங்களில் பால் உற்பத்தியானது முறையே 6.2 சதவீதம் மற்றும் 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டுமென்றால்,வரும் 2020-ஆம் ஆண்டிற்குள் கால்நடைகளுக்கு தேவையான 1,764 டன் தீவனத்தை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் நாம் தற்போது ஆண்டுதோறும் 900 டன் தீவனத்தை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறோம்.இது 49 சதவீத பற்றாக்குறையாகும்.
தனியார் கொள்முதல் செய்யும் கால்நடை தீவனங்களின் அளவு,கடந்த 1998-2005 காலகட்டத்தில் 5 சதவீதமும்,2005-2012 காலகட்டத்தில் 8.5 சதவீதமும் அதிகரித்துள்ளது.கால்நடை தீவனங்கள் உற்பத்தியில் இருக்கும் இந்த இடைவெளியானது ,ஒவ்வொரு ஆண்டும் பாலின் விலை 16 சதவீதம் அளவு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பால் உற்பத்தி 92 மில்லியன் டன்னிலிருந்து 146 மில்லியன் டன்னாக(59%)அதிகரித்துள்ளது.ஆனால் கால்நடை தீவனத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை,இந்த உற்பத்தில் அளவில் சரிவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(தற்போது உலக பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 17%)
கால்நடை தீவனங்களின் தரம்,பாலின் தரம் மற்றும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
இந்திய பால் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள ராஜஸ்தான்,ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்,அவர்கள் உள்ளூரில் உற்பத்தி செய்வதை விட 10 சதவீத அளவுக்கு தீவன பற்றாக்குறை நிலவுகிறது.
தற்போதைய சூழலில் பசுந் தீவனங்கள் (புல்)63 சதவீத அளவிலும்,உலர் தீவனங்களில்(வைக்கோல்) 24 சதவீத அளவிலும்,அடர் தீவனங்களில் 76 சதவீத அளவிலும் பற்றாக்குறை நிலவுகிறது.இந்தியாவில் உள்ள மொத்த விவசாய நிலங்களில் 4 சதவீதம் மட்டுமே,கால்நடை தீவனங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.இந்த தேக்கமானது கடந்த 40 ஆண்டுகளாகவே நிலவி வருகிறது.
எனவே தற்போது இருக்கக்கூடிய பால் தேவையை பூர்த்தி செய்ய,தற்போது கால்நடை தீவனங்களுக்காக பயன்படுத்தப்படும் நிலத்தின் அளவானது இரண்டு மடங்காக உயர்த்தப்பட வேண்டும்.தீவனத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையானது,கால்நடை வளர்ப்பவர்களை நாட்டின் பல பகுதிகளிலிருந்து தீவனங்களை வாங்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.”தீவனங்களின் தரம் என்பது மிகவும் முக்கியம்.எனவே தற்போது நாங்கள் வாரணாசியிலிருந்து தீவனங்களை வர வைக்கிறோம்.”என ராஞ்சியில் பால் பண்ணை நடத்தி வரும் சுதிர் மிஷ்ரா தெரிவிக்கிறார். தமிழகத்திலும் மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்தும் புல்லின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறு டாடா ஏஸ் வண்டியில் கொடுக்கப்படும் புல்லுக்கு ரூ.7500 கொடுத்து வாங்கப்படுகிறது.
மறுபுறம் மேய்ச்சல் நிலங்களில் பெரும்பகுதி குறைந்துள்ளது என்பதன் காரணத்தினை தேடும்போது அவை விற்பனை செய்யப்பட்டுள்ளன அல்லது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.உணவு மற்றும் பணப்பயிர்களை பயிரிடுவதற்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே,அதன் கழிவுகள் மூலம் கிடைக்கும் தீவனங்களின் அளவு கணிசமாக உயரும்.
பால் உற்பத்தியில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை காணவிட்டால்,உலகச் சந்தையிலிருந்து பாலை நாம் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.இதனால் பால் பொருட்கள் நுகர்வு அதிகரித்து வரும் இந்தியாவில்,பாலுக்கான விலை திடீரென கணிசமாக அதிகரிக்கக் கூடும். இதன் தாக்கம் சிறிதளவாவது ஜிடிபியில் இருக்கும்.
பால் பண்ணைகளின் உற்பத்திச் செலவில் 60 முதல் 70 சதவீதம் வரை தீவனத்திற்கே செலவிடப்படுகிறது. இந்தியாவில் மொத்த பால் உற்பத்தியில் 70 சதவீதம் ,உள்ளூர் தீவனங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை நம்பியுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் பங்களிப்பு ஆகும்.இவர்களால் பெரிய முதலாளிகளைப் போல,வேறு மாநிலங்களிலிருந்து தீவனங்களை வாங்க முடியாது.
எடுத்துக்காடுக்கு கர்நாடாகவில் உள்ள தண்டப்பா என்ற விவசாயியின் கதையை பார்க்கலாம்..!
வட கர்நாடகத்தில் உள்ள பெலகாவியைச் சேர்ந்த தண்டப்பா என்பவர்,பால் பண்ணை துவங்குவதற்காக கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 35,000 ரூபாய் வங்கிக் கடனாக வாங்கியுள்ளார்.வேலையில்லா இளைஞர்கள் திட்டத்தின் கீழ் தண்டப்பா பயன்பெற்றதால்,தண்டப்பாவுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில் பெரிய சிக்கல் இருக்கவில்லை.
இதற்கிடையில் பால் பண்ணை தொழில் குறித்து பயிற்சிப் படிப்பையும் தண்டப்பா படித்துள்ளார்.பணம் கிடைத்த ஒரு மாதத்திற்குள் 4 எருமை மாடுகளைக் கொண்டு,தனது பால் பண்ணையை தண்டப்பா துவங்கியுள்ளார்.தனது கால்நடைகளின் மூலம் உள்ளூர் கூட்டுறவு பால் பண்ணையில்,தினமும் குறைந்தது 20 லிட்டர் பால் அளிக்க வேண்டும் என தண்டப்பா முடிவெடுத்தார்.ஆனால் அவர் வாங்கிய எருமைகளிடம்,ஒரு நாளுக்கு 2 லிட்டருக்கும் குறைவான பால் மட்டுமே கறக்க முடிந்தது.
”அதன் பின்னர் தான் நல்ல எருமைகளை வாங்கினால் மட்டும் போதாது.அவற்றுக்கு தரமான,அதிக அளவிலான தீவனத்தை அளித்தால் மட்டுமே அதிகமாக பால் கறக்க முடியும் என புரிந்து கொண்டேன்.பால் உற்பத்தி செய்பவர்கள்,தீவனத்திற்காக அதிக நேரத்தையும்,பணத்தையும் செலவிட தயாராக இருக்க வேண்டும்.” என தண்டப்பா கூறுகிறார்.
வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்,மலை மேல் உள்ள பொது மேய்ச்சல் நிலத்தை தானும் மற்ற கிராமத்து மக்களும் கால்நடை மேய்ச்சலுக்காக பயன்படுத்தி வந்ததாகவும்,ஆனால் அங்கு கிடைக்கும் தீவனம் அனைத்து கால்நடைகளுக்கும் போதுமானதாக இல்லை எனவும் அதே பெலகாவி பகுதியைச் சேர்ந்த பாட்டீல் தெரிவிக்கிறார்.பற்றாக்குறை காரணமாக வேறு வழியில்லாமல் பணம் கொடுத்து பாட்டீல் தீவனம் வாங்கியுள்ளார்.இதனால் இவரால் பால் வியாபாரத்தில் லாபம் பார்க்க முடியவில்லை.
நிலமில்லாத,குறு விவசாயிகளின் வருமானத்தில் 20 முதல் 50 சதவீதம் கால்நடைகளினால் கிடைக்கிறது.மேலும் விவசாயம் போல் அல்லாமல்,ஆண்டின் அனைத்து நாட்களிலும் அவர்களுக்கு வருமானத்தை அளிக்கக்கூடிய தொழிலாக பால் உற்பத்தி இருக்கிறது.இதன் மூலம்தான் விவசாயத்தினால் நஷ்டத்தை அடையக் கூடிய விவசாயிகள்,தங்கள் அன்றாட செலவுகளை சமாளித்து வருகின்றனர்.
ஆனால் தீவனத்தையும் விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டதால்,பாட்டீல் பால் உற்பத்தியில் நஷ்டத்தையே சந்தித்து வந்தார்.எனவே ஒரு ஆண்டுக்கு பிறகு தனது எருமைகளை விற்று,தனது வங்கிக் கடனில் பாதியை மட்டுமே பாட்டீல் திரும்பச் செலுத்தியுள்ளார்.தற்போது அவர் பெலகாவி நகரத்தில்,கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்.
இது தற்போது தமிழகத்திலும் பல விவசாயிகள் இந்தப் பிரச்னையை அனுபவத்துக்கொண்டிருக்கலாம். எனவே அனைவரும் சேர்ந்து விவசாயம் சார்ந்த பிரச்னைக்கான தீர்வுகளை காணவேண்டும். இல்லையேல் நிச்சயம் நாம் அந்நிய நாட்டிடம் கையேந்தும் நிலை வரலாம்

No comments: