Tuesday 28 February 2017

நெடுவாசலுக்கு ஆதரவாக, 100 கிராமத்தினர், ஆதார், ரேசன், வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்க முடிவு..


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன்  இயற்கை எரிவாயு  எடுக்க கர்நாடக தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை ரத்துசெய்ய வேண்டும்.
இதனை வலியுறுத்தி 12 வது நாளான நேற்று நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் 100 கிராமங்கள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்களின் கருத்துகள் கேட்கப்பட்ட பிறகு பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெடுவாசலில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் 50 கி.மீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தி அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தைச்  சேர்ந்த அனைத்து எம்.பி களும்  எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் காவிரி பாசன பகுதிகளை  ஒருங்கிணைந்த வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எரிவாயு திட்டத்துக்கு எதிராக  பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர வேண்டும்.
நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் உள்ள வீடுகளில்  ஒரே நாளில் மின்விளக்குகளுக்குப் பதிலாக அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும்.
நெடுவாசலைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள  வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்வது.
நெடுவாசலில், சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியின் சார்பிலும் ஒவ்வொரு நாளில் போராட்டம் நடத்துவது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஒரே நாளில்  சிறப்பு கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி  இதில் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென  தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு  அனுப்புவது.
இறுதியாக திட்டத்தை ரத்து செய்யக்கோரி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர், ஆதார் ரேசன் கார்டு  உள்ளிட்ட அடையாள அட்டைகளை  அரசிடம் திரும்ப ஒப்படைத்து போராட்டம் நடத்துவது. என்பன உள்ளிட்ட  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments: