Saturday 18 February 2017

பிரார்த்தனை இப்படித்தான் இருக்க வேண்டும்! - ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்தநாள் பகிர்வு!

ஒரு கிராமத்தில் ஏழைப்பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்குச் சொந்தமாக  ஒரு பசுமாடு இருந்தது. அவள் அந்தப் பசுமாட்டிலிருந்து பாலைக் கறந்து,  ஊர் மக்களுக்கு விற்றுவந்தாள். அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினாள்.
ராமகிருஷ்ண 

அந்தக் கிராமத்தின் எல்லையில் உள்ள ஆற்றின் மறுகரையில் ஒரு கோயில் அர்ச்சகர் வாழ்ந்து வந்தார்.  தினமும் பூஜைக்கு இந்தப் பெண்ணிடம்தான் அவர் பால் வாங்குவார்.
சில நாட்களாக குறித்த நேரத்தில் அந்தப் பெண்மணியால் பால் கொண்டு வர இயலவில்லை. இதனால் கோபம்கொண்ட  அர்ச்சகர், ஒரு நாள் அவளைக் கூப்பிட்டார். 
``ஏன், அம்மா ... பார்த்தாயா... உன்னுடைய காலதாமத்தால் என்னால் உரிய நேரத்தில் பூஜையை முடிக்க முடியவில்லை’’ என்று கொஞ்சம் கோபமாகவே கடிந்துகொண்டார்.  
``மன்னிக்கவேண்டும் சுவாமி, நான் வீட்டிலிருந்து  முன்னதாகவே கிளம்பிவிடுகிறேன். ஆனால். ஆற்றைக் கடந்து வர வேண்டும் என்பதால், கரையில் படகுக்காக வெகுநேரம் காத்திருக்கவேண்டியிருக்கிறது" என்றாள் பணிவுடன். 
அப்பாவியாக அந்தப் பெண் சொன்ன பதிலைக் கேட்டு மனமிரங்கினார் அர்ச்சகர். 
“என்னது... ஆற்றைக்  கடக்கப் படகுக்கு காத்திருக்கிறாயா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே `கடவுள்’ பெயரைச் சொல்லிக்கொண்டே கடந்துவிடுகிறான்.  நீ என்னடாவென்றால், சிறிய ஆற்றைக் கடப்பதற்கெல்லாம் படகோட்டியை நம்பிக்கொண்டிருக்கிறாயே! இதுதான் கடைசி. இனிமேல் சரியான நேரத்துக்கு வரவில்லை என்றால், எனக்கு நீ பால் கொண்டுவர வேண்டாம்" என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார். 
அவர் இதைக் கொஞ்சம் கேலியாகத்தான் சொன்னார். ஆனால், அதை, அந்த அப்பாவிப் பெண்ணால் உணர முடியவில்லை.
'இந்த ஊரிலேயே அதிகமாக பால் வாங்குபவர் இவர் ஒருவர்தான். இவரும் இப்படிச் சொல்லிவிட்டாரே... என்ன செய்வது?' என வருத்தத்துடன் கிளம்பிச் சென்றாள். 
அதன் பிறகு, சில நாட்களுக்கு அவள் குறித்த நேரத்துக்குள் வந்து விட்டாள். அந்தப் பெரியவருக்கே அது ஆச்சர்யமாக இருந்தது. ஒரு நாள் சந்தேகத்தோடு அவளைக் கூப்பிட்டார்.
"இப்போதெல்லாம் சரியான நேரத்துக்குள் வந்துவிடுகிறாயே... எப்படியம்மா?" என்று கேட்டார்.
"அது ஒன்றும் பெரிய மந்திரம் இல்லை, சுவாமி. நீங்கள் சொன்னது போலத்தான் செய்கிறேன்." 
"என்னது... நான் சொன்னபடியா! ஆற்றின் தண்ணீர் மேல் நடந்தா வந்தாய்..!" என்றார் கேலியுடன். 
"ஆமாம் சுவாமி! அப்படித்தான் நடந்துவந்தேன்" என்றாள் அந்தப் பெண் உறுதியான குரலில்.
`இது எப்படிச் சாத்தியம்?’ அர்ச்சகரின் மனதுக்குள் சந்தேகம் இருந்தாலும், அதை அவர் வெளிகாட்டிக்கொள்ளவில்லை. ''எங்கே... என் கண்முன்னே நடந்துகாட்டுவாயா?" என்று கேட்டார்.
அவள் மறுக்கவில்லை "நிச்சயமாகக் காட்டுகிறேன்!’’ என்றாள்.
இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றனர். 
"நீ முன்னே செல், நான் உன்னைப் பின்தொடர்கிறேன்" என்றார் அர்ச்சகர்.  
ராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தர் 

உடனே அந்தப் பெண்மணி, கை இரண்டையும் கூப்பியபடி, கடவுளின் பெயரைக் கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்தாள். 
கண்முன்னே நடந்ததை நம்ப முடியாமல் பார்த்த அர்ச்சகருக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி... அதை வெளிகாட்ட முடியாமல், நீண்ட தயக்கத்துக்குப் பிறகு அவளைப் பின்தொடர்ந்தார்.  
`ஆற்றின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்று தெரியலையே’ என்று பயத்துடன் நினைத்தபடியே கடவுளின் பெயரைக் கூறியபடி, இறங்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு ஓர் எண்ணம்....`தண்ணீரில் நடக்க முடியுமோ முடியாதோ... ஒருவேளை நீரில் விழவேண்டி இருந்தால், குறைந்த பட்சம் ஆடையாவது நனையாமல் இருக்கட்டுமே...’ என நினத்தவர் தன்னுடைய ஆடையைக்  கைகளால் தூக்கிப் பிடித்துக்கொண்டு  ஆற்றில் இறங்கினார்.
ஆனால், கால் தண்ணீருக்கு உள்ளே சென்றது. அர்ச்சகர் திடுக்கிட்டார்.ஸ்ரீராமகிருஷ்ணர்
வேறு வழி தெரியாமல் திரும்பி, கரையேறினார். 
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண் திரும்பி அவர் இருக்கும் கரைக்கே வந்தாள். 
"என்னை மன்னித்துவிடம்மா! என்னால் உன்னைப் போல் நீரில் நடக்க முடியவில்லை. உண்மையாகவே நீ  நீர் மேல் நடந்து சென்றது எப்படி சாத்தியமானது என்பதை எனக்குச் சொல்லேன்..." என்று கேட்டார் குழைந்த குரலில் அர்ச்சகர்.
அந்தப் பெண் பணிவுடன், “சுவாமி…. உங்கள் உதடுகள்  கடவுள் பெயரைச்  உச்சரித்தாலும், உங்கள் கைகள் இரண்டும் உங்கள் உடைகள் நனையக் கூடாது என்பதற்காக தூக்கிப் பிடித்துக்கொண்டே இருந்தன. அதன் பிறகு நீங்கள் நீரில் இறங்கினீர்கள். கடவுள் மேல் உண்மையாகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், அப்படிச் செய்திருக்க மாட்டீர்கள்" என்ற அந்தப் பெண் சற்றுத் தயங்கிவிட்டுச் சொன்னாள்...
``மேலும், ஆற்றின் ஆழத்தைப் பரீட்சித்து பார்ப்பது, அந்த ஆண்டவனையே ஆழம் பார்ப்பது போன்றது அல்லவா?” என்றாள்.
அந்தப் பெண் இதைச் சாதாரணமாகச் சொன்னாலும், அதை அந்த இறைவனே நேரில் வந்து சொன்னதுபோல இருந்தது அர்ச்சகருக்கு. 
அவர் வெட்கித் தலைகுனிந்தார்.
இறைவன் மீது நம் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க, பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.
பிரார்த்தனை  என்பது அந்தப் பெண்ணின் மனநிலையைப் போலத்தான் இருக்கவேண்டும். அந்த அர்ச்சகரைப்போல இருக்கக் கூடாது என்பதுதான் ஸ்ரீராமகிருஷ்ணர் நமக்கு உணர்த்தும் செய்தி.
இதைத்தான், `உள்ளன்போடு ஒருவன் இறைவனிடத்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும். உள்ளூர ஒரு மனிதன் எதை  விரும்புகிறான் என்பதை இறைவன் நன்கு அறிகிறார். அதனை நிறைவேற்றவும் செய்கிறார்’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். 
இதுபோன்ற ஆன்மிகச் சிந்தனையை உலகெங்கும் விதைத்துச் சென்ற ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்தநாள் இன்று. (மகானின் ஜென்ம நட்சத்திரத்தையொட்டி வருகிற மார்ச் மாதம் 3-ம் தேதியும் அவரின் பிறந்தநாள்  கொண்டாடப்படுகிறது).
                                                                                                               நன்றி
                                                                                                            விகடன்

No comments: