Friday 24 February 2017

விவசாயியின் நண்பன் மண்புழு

உழவனின் நண்பன் மண்புழு என்பர். விளை நிலங்களில் ஓர் அரிய உயிரினமாக மாறி விட்டதால் மண்வளம் குறைந்து, மகசூல், விளை பொருள் தரம் குறைய வழிவகுத்து விட்டது.
இதைத் தவிர்க்க ‘மண்புழு உரம்’ புதிய தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது. வேளாண் விளை பொருட்களில் மனிதன், கால்நடைகளுக்கு தேவைப்படும் விதை, காய், கனி, கிழங்குகள் ஆகியவை தவிர மிஞ்சும் அனைத்து விவசாய கழிவுகளால் மண்புழு உரம் தயாரிக்க இயலும். இவற்றில் உள்ள கல், கண்ணாடி துகள், பாலிதீன் கவர்களை பிரித்து எடுத்து விட்டு மிஞ்சும் அனைத்தையும் மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
Courtesy: Dinamalar

மண்புழு உரப்பண்ணை
தேவையான நீள, அகலத்துடன் கொண்ட தொட்டிகளை அமைக்க வேண்டும். அதன் அடிப்பாகத்தில் செங்கல், ஜல்லி, வண்டல் மண் ஆகியவற்றை பரப்பி, அதன் மேல் இரண்டே கால் அடி உயரத்திற்கு வேளாண் கழிவுகள் மற்றும் சாணத்தை மாறி, மாறி நிரப்ப வேண்டும்.
தொட்டியில் கழிவுகளை போடும் முன் ஓரிடத்தில் குவியலாக குவித்து அதன் மேல் மாட்டுச்சாணியை கரைத்து தெளித்து 15 நாட்கள் வைத்தால் மொத்த கொள்ளளவு மூன்றில் ஒரு பங்காக குறைந்து விடும். அதன் பின் தொட்டியில் போட வேண்டும்.
பின் 1 கிலோ (சுமார் 1000 எண்கள்) மண் புழுக்களை தொட்டியில் விட வேண்டும். தொட்டியில் தகுந்த அளவு ஈரப்பதம் உள்ளவாறு நீரினை தெளிக்க வேண்டும்.
தொட்டிக்கு 250 கிலோ உரம்
தொட்டியை நிழல் வலை, மேற்கூரை அமைத்து நேரடி சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும். புழு விட்ட 15 – 20 நாட்களில் இருந்து உரம் கிடைக்கும். 30 – 50 நாட்களில் அனைத்து கழிவுகளும் மட்கி உரமாகிவிடும். புழு விட்ட மூன்று மாதங்களில் புழுக்கள் தங்களுக்குள் பெருக்கமடைந்து பல்கிப் பெருகிவிடும். எலி, எறும்பு, பறவைகளிடம் இருந்து தொட்டியில் உள்ள புழுக்களை பாதுகாக்க வேண்டும்.
ஒரு தொட்டியில் இருந்து 250 கிலோ மண் புழு உரம் கிடைக்கும். இதனை இருட்டான அறையில் 40 சதவிகித ஈரப்பதத்தில் சேமித்து வைக்கலாம். விற்கும் சமயத்தில் மட்டும் பாக்கெட் செய்ய வேண்டும். தொட்டியின் அளவுகளை வசதிக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம். மண்புழு தயாரிப்பிற்கு வெவ்வேறு விதமான கழிவுகளை பயன்படுத்தினால் கிடைக்கும் மண்புழு உரம் பல தரப்பட்ட பயிர்ச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
மண்புழு உரத்தில் கரிமம், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சோடியம், கால்சியம் – மெக்னீசியம், தாமிரசத்து, இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து, கந்தகச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளன. தொட்டியில் ஊற்றப்படும் நீரில், உபரி நீர் கீழே திரவ வடிவமாக வெளிவரும்.
இதுவே ‘வெர்மி வாஷ்’ எனப்படும். இதில் அமில காரத்தன்மை, கரைந்துள்ள ஆக்ஸிஜன், குளோரைடு, சல்பேட் உப்புகள், பாஸ்பேட்டுகள், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்டவை நிரம்பியுள்ளன.
மகசூல் பெருக ஒரே வழி
மண்புழு செறிவூட்டப்பட்ட நீரில் தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் திரவ நிலையில் உள்ளதால், இதனை தெளித்தல் முறையில் பயிர்களுக்கு அளிக்கலாம். வேளாண் கழிவுகளை கொண்டு மண்புழு உரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவதால் சிறு, குறு விவசாயிகளின் நிலம் மேம்படுகிறது. உற்பத்தி திறன் அதிகரிப்பதன் மூலம் வருவாய் உயர்கிறது.
இதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாடும் குறைகிறது. எனவே விவசாயத்தில் மண்புழு உரத்தொழில் நுட்பத்தை பின்பற்றுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
நன்றி: தினமலர்


No comments: