Thursday 23 February 2017

அண்ணா ஆன்மாவும் எம்.ஜி.ஆர் ஆன்மாவும் பேசிக் கொண்டால்..? #MarinaChat #VikatanExclusive

"அம்மாவின் ஆன்மா எங்கிட்டதான் பேசுச்சு!'' என ஓ.பி.எஸ்ஸும் சசிகலாவும் குந்தாங்கூறாக அரசியல் குட்டையைக் குழப்பினாலும் அதே மெரினா கடற்கரையில் துயில் கொண்டு மக்கள் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும்  முன்னாள் முதல்வர்கள் அண்ணாவின் ஆன்மாவும் எம்.ஜி.ஆரின் ஆன்மாவும் வாக்கிங் போய்விட்டு சமாதிக்குத் திரும்பி வரும்போது என்ன பேசிக் கொண்டிருந்திருக்கும் எனச் சின்னதாய் ஒரு கற்பனை...
அண்ணா
அண்ணா: தம்பி! நடக்கும் கொடுமைகளைப் பார்த்தாயா? 
எம்.ஜி.ஆர்: நாட்டில் பல கொடுமைகள் நடக்கிறது அண்ணா! எந்தக் கொடுமையைச் சொல்கிறீர்கள் அண்ணா..?  சட்டப் பேரவையில் சட்டைக் கிழிப்பு, மேசை உடைப்பு என மாண்புகள் மாண்டுவிட்ட கொடுமையை நல்லவேளை நீங்கள் பார்க்கவில்லை!
அண்ணா: ஐயகோ கொடுமை..! ஆனால், நான் அதைச் சொல்லவில்லையடா தம்பி.  முணுக்கென்றால் நாளொன்றுக்கு மூணுமுறை மெரினாவுக்கு ஓடி வந்துவிடும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கண்மணிகள் என்னைச் சீந்துவதே இல்லை. கட்சியின் பெயரில் மட்டுமே நான் வாழ்வதை அவமானமாக நினைக்கிறேனடா என் இதயக்கனி! 

எம்.ஜி.ஆர்: ஐய்யோ அண்ணா..! நீங்கள் வேதனைப்படுவதைப் பார்க்கும்போது என் இதயத்தைக் கீறிய வலியை உணர்கிறேன் அண்ணா. என் நூற்றாண்டு விழாவிலும்  என் படத்தைக்கூட எங்கும் வைக்கவில்லை. ஆட்டோக்காரர்களும், அழிந்தே போன ரிக்‌ஷாக்காரர்களாலும் தான்  அண்ணா நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! நல்லவேளை மிமிக்ரி என்ற அளவிலாவது சில கலைஞர்கள் என்னை இளைய தலைமுறையினருக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

அண்ணா: அந்த விஷயத்தில்கூட நான் கொடுத்து வைக்கவில்லையடா தம்பி. என் கரகரத்த குரலைக்  கல்லக்குடி வென்ற என் தம்பி கருணாநிதி இரவலாகப்பெற்றுவிட்ட காரணத்தால் என் குரல் எப்படி இருக்கும் என்றுகூட இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாமலே போய்விட்டது.  ஆனால், ஒன்று... எந்தத் தலைமுறையினருக்கு என்னைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லையோ அதே தலைமுறையினர் கல்வி பயிலும் பெருங்கல்விக் கூடமாம் பொறியியல் பல்கலைக் கழகத்திற்கு அண்ணா பல்கலைக் கழகம் என வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடக்கூட முடியவில்லை.  தமிழகத்தில் இருக்கும் பொறியியல் மாணவர்கள் தங்கள் தேர்வின் முடிவுகள் வரும்போதெல்லாம் மிகக் கடுமையான வார்த்தைகளால் என்னையும் சேர்த்து சபிக்கிறார்களடா..! 
எம்.ஜி.ஆர்: நல்லவேளை நான் தப்பித்தேன் அண்ணா! என் பெயரை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் வைத்து விட்டார்கள். (ஏதோ ஞாபகம் வந்தவராய்..) அதிருக்கட்டும் அண்ணா... உங்கள் முகம் ஏன் இன்று இவ்வளவு வாட்டமாக இருக்கிறது? 
எம்.ஜி.ஆர்
அண்ணா: தமிழ்நாடு என பெயரிலேயே தமிழை வைத்து தனிப்பெரும் மாநிலமாக ஆக்கியவன் நான். ஆட்சி செய்தது இரண்டே வருடங்கள் தான் என்றாலும் மக்கள் மனதில் இன்றும் குடி கொண்டிருக்கிறேன்.  `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று சொன்னவன் நான். ஆனால், இன்றைய அரசியல் சூழலில் `ஒன்றே கட்சி ஒவ்வொருவனும் தலைவன்' என்கிற ரீதியில் ஆகிவிட்டதடா தம்பி. `கடமை கண்ணியம் கட்டுப்பாடு'  என்ற என் கொள்கையை  தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் மறந்தே விட்டதடா ராமச்சந்திரா! சட்டப்பேரவையில்கூட கடமையை மறந்து கட்டுப்பாடே இல்லாமல் சண்டை போடுகிறார்கள். 
எம்.ஜி.ஆர்: சண்டை என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. நான் 'குலேபகாவலி' காலத்திலிருந்து சுத்திச் சுத்திக் கத்திச் சண்டை போட்டிருக்கிறேன். என் ஆடை கிழிந்ததே இல்லை. நண்பர் கருணாநிதியின் மகனார் ஸ்டாலினாருக்கு சட்டைப் பாக்கெட் கிழிந்ததைப் பார்த்தேன். காலம் எவ்வளவு கொடூரமாய் மாறிவிட்டது பார்த்தீர்களா அண்ணா..? `கத்தியின்றி ரத்தமின்றி சட்டையொன்று கிழியுது' என்று பாட்டுப்பாடவல்லவா தோன்றுகிறது?!
அண்ணா: ஆமாம்... உன்னிடம் ஒன்றைக் கேட்க மறந்துவிட்டேன். பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் நிலநடுக்கம் வந்ததை நீ உணர்ந்தாயா..? மூன்றுமுறை நிலநடுக்கத்தை உணர்ந்து நான் மிகவும் கவலைப்பட்டேனடா தம்பி. உன்னை அன்று அழைத்தேன். ஆனால், நீதான் என்னைக் கவனிக்கவில்லை!
எம்.ஜி.ஆர்: (சிரிக்கிறார்) அண்ணா என் அண்ணா... அது நிலநடுக்கம் அல்ல. சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்குப் பாதகமாகத் தீர்ப்பு வந்த கடுப்பில் ஜெயலலிதாவின் சமாதியில் சசிகலா கோபமாக அடித்த அடிகள் அவை. எனது கைக்கடிகாரம் ஓடுகிறதா என என் சமாதியில் அப்பாவி மக்கள் காது வைத்துக் கேட்ட வண்ணம் இருப்பதால் நான் நன்றாகத் தூங்கி பல வருடங்கள் ஆயிற்று. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் எல்லோரின் கவனமும் அந்தப் பக்கம் இருந்ததால் சமீப நாட்களாகக் கொஞ்சம் தூங்க முடிந்தது. அன்று அந்த மூன்று அடியில் பக்கத்து சமாதியில் இருந்த நானே எழுந்து விட்டேன். பாவம் ஜெயலலிதா... இன்னும் எழுந்திருக்கவில்லை. 'என்னடா இது சோதனை' என நினைத்த எனக்குத் தாமதமாகத்தான் தெரிந்தது அது `சத்திய' சோதனை என்று! 

No comments: