Monday 27 February 2017

48 ஆண்டுகள் அணையாமல் எரியும் தீ கிணறும்... மீத்தேன் என்ற கொள்ளிவாய்ப் பிசாசும்!


மீத்தேன்

ரு இடத்தில் நெருப்பு பற்ற வைத்தால், அதன் ஜூவாலையானது சில நிமிடம் அல்லது சில மணி நேரம் வரை எரியும். ஆனால் பல நாட்களாக, பல வருடங்களாக எரிந்து வரும் ஒரு தீ ஜூவாலை பற்றித் தெரியுமா? சுமார் 48 ஆண்டுகள் எந்தவொரு மழையிலும், எத்தகைய பருவநிலை மாறுபாட்டாலும் அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கும் தீ கிணறு பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதுதான் துர்க்மெனிஸ்தானில் உள்ள 'நரகத்தின் நுழைவு வாயில்'.
தர்வாஷ் பகுதியில் புவியின் மேற்பரப்பில் கிணறு போன்று எரியும் பகுதியை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் 1971-ம் ஆண்டு கண்டுபிடித்தனர். 70 மீட்டர் அகலமும், 20 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த நெருப்புக் கிணறு எப்போதும் எரிந்து கொண்டேதான் இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து எரிந்து வருவதற்கான காரணத்தை அறியாத மக்கள், தீ ஜூவாலையைக் கண்டு மிகுந்த பயத்தில் ஆழ்ந்தனர். கொடிய சாத்தானின் செயலால்தான் இந்த தீ கிணறு உருவாகியுள்ளது என்று மக்கள் நம்பத் தொடங்கினார்கள். அதனால், இப்பகுதிக்கு மக்கள் 'நரகத்தின் நுழைவு வாயில்' என பெயரிட்டு அழைத்தனர். 
கனடா நாட்டு ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் கவுரினுஸ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்துக்குச் சென்று, அங்குள்ள மண் மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சி செய்தார். அதில், அப்பகுதியில் எரிவாயு அதிகளவில் இருப்பது தெரிய வந்தது. அதாவது, எரிவாயுவானது ஆக்சிஜனுடன் கலந்து வேதிவினை மாற்றத்தினால் தீப்பற்றி இருக்கலாம். தொடர்ந்து எரிவாயு வெளியேறிக் கொண்டிருப்பதால், எரிந்து கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர் தெரிவித்தார். '1971-ம் ஆண்டு இப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டபோதே  தீப்பற்றி எரிந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. எப்போது எரியத் தொடங்கியது என்பது சரிவரத் தெரியவில்லை. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சாகசப் பயணம் மேற்கொள்வோரின் மிகச்சிறந்த சாய்ஸாக இருந்த இந்த இடம், தற்போது துர்க்மெனிஸ்தான் அரசின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பகுதியாக மாறி இருக்கிறது. இந்தப் பகுதியிலிருந்து எரிவாயு எடுக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. அதெல்லாம் சரி, ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் கவுரினுஸ் கண்டறிந்த எரிவாயுவின் பெயர் என்ன தெரியுமா?  "மீத்தேன்". ஆம்! தமிழ்நாட்டை சுடுகாடாக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசால் திட்டமிடப்பட்ட அதே மீத்தேன் தான்.
மீத்தேன் கிணறு
மீத்தேன் ஒரு 'கொள்ளிவாய் பிசாசு':
'கொள்ளிவாய்ப் பிசாசு' பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையில் கொள்ளிவாய்ப் பிசாசு என்றால் என்ன என்பதை அறிவீர்களா? விலங்குகள் இறந்த பின்னரும், தாவரங்கள் அழிந்த பின்னும் அவை புதைக்கப்படும் இடங்களில் அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு, வேதியியல் மாற்றங்களினால் தனிமங்களும், வாயுக்களும் உற்பத்தியாகின்றன. இந்த வாயுக்களில் ஒன்றுதான் உயிரி வாயுனான மீத்தேன். பூமிக்கு அடியில் அழுத்தத்தில் இருக்கும் மீத்தேன் வாயுவானது தரைப்பரப்புகளில் எங்கேனும் விரிசல் ஏற்பட்டால் அதிவேகத்தில் வெளியேறும். அப்படி வெளியேறும்போது, காற்றில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது ஆக்சிஜனுடன் வினைபுரிந்து அது தீப்பற்றி எரிய ஆரம்பிக்கிறது. இதைப் பார்ப்பவர்கள் 'கொள்ளிவாய்ப் பிசாசு' என்று கூறுகின்றனர். 'மீத்தேன்' என்றால் என்னவென்று அறியாத காலத்திலேயே, அதற்கு நம் முன்னோர்கள் 'கொள்ளிவாய்ப் பிசாசு' எனும் அடைமொழியை வைத்துள்ளனர். தற்போது, அதே 'கொள்ளிவாய்ப் பிசாசு' தான் நம்மை அழிக்க வந்திருக்கிறது. சிறு அளவு மீத்தேன் வாயுவே காற்றில் கலந்து பற்றி எரியும் திறன்கொண்டது என்னும்போது, குழாய்களில் இருந்து பெருமளவு மீத்தேன் வெளிப்பட்டால், அது, எந்தளவுக்கு கடுமையான ஜூவாலையுடன் எரியும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மீத்தேன் திட்டம்
நிலத்துக்கு அடியில், பாறை இடுக்குகளில் அழுத்தப்பட்ட நிலையில் இருக்கும் மீத்தேன் வாயுவானது, பூமியில் ஏற்படும் ஒரு சிறு விரிசலால் வெளிவரும். அப்படி வெளியாகி பல ஆண்டுகளாக ஜூவாலையாக எரிந்து கொண்டிருப்பதுதான், துர்க்மெனிஸ்தானில் உள்ள 'நரகத்தின் நுழைவு வாயில்' என்றால், தமிழ்நாட்டில் அதுபோன்ற எரிவாயுவை விவசாய நிலங்களில் துளையிட்டு எடுத்தால் என்னவாகும்? தமிழகம் 'உண்மையான நரகமாக மாறிவிடும்'. இந்த திட்டத்தால் தமிழ்நாடு நரக பூமியாக மாற வேண்டுமா? அல்லது தொடர்ந்து சொர்க்கபூமியாக திகழ வேண்டுமா? என்பதை எட்டு கோடி தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

No comments: