Thursday 23 February 2017

ரூ.20,000 பணமாக கடன் கொடுத்தீங்களா? வருது வருமானவரி, அபராதம்!!

நாடுமுழுவதும் கறுப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்க பழைய ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.1,000 செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து, புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, பழைய நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறவிக்கப்பட்டிருந்தது. இதனால் வங்கிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் நின்று டெபாசிட் செய்து வந்தனர் மக்கள்.
அவ்வாறு டெபாசிட் செய்யப்பட்ட வங்கிக்கணக்குகளை ‘ஆபரேஷன் கிளீன் மணி’ திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின்படி, சுமார் 18 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இவர்களில், கடன் தொகையை ரொக்கமாக செலுத்தியவர்கள் விவரங்களையும் வருமான வரித்துறை திரட்டி வருகிறது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறையினர் தெரிவிக்கையில்,  சந்தேகத்துக்கிடமான 18 லட்சம் வங்கிக் கணக்குகளை படிப்படியாக ஆராய வேண்டும். குறிப்பாக, பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு, கடன் தொகை ரொக்கமாக செலுத்தியிருந்தால் அதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக, அதாவது ரூ.20,000 மேல் ரொக்கமாக செலுத்தி கடன் அடைக்கப்பட்டிருந்தாலோ, பகுதி கடன் தொகையாக செலுத்தியிருந்தாலோ அதற்கு வருமான வரி சட்ட விதிகளின் படி அதே அளவு அபராதம் விதிக்கலாம்.
ரூ.20,000 அல்லது அதற்கு மேல் கடன் தொகை ரொக்கமாக செலுத்தியிருந்தால், அதற்கான ஆதாரங்கள் கேட்டு விசாரணை நடத்த வேண்டும். இதில், விவசாய வருவாய் போன்ற இதர வருவாயிலிருந்து கடன் தொகை ரொக்கமாக செலுத்துதல் போன்ற சிலவற்றிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments: