அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 1996-ம் ஆண்டில், சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் பேரில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நான்கு பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
இதையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து பல மாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சசிகலா வரும் ஒன்பதாம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நன்றி
விகடன்
Last updated : 17:40
Last updated : 17:40
No comments:
Post a Comment