Saturday, 4 February 2017

500 வருடங்களாக இயங்கிவரும் 'மகளிர் மட்டும்' மார்க்கெட்!

மகளிர்

பொதுவாக, மார்கெட்டில் இருக்கும் கடைகளில் பெரும்பாலும் ஆண்களைத்தான் பார்க்க முடியும். அங்கும் இங்குமாக அமர்ந்திருக்கும் சில பெண்களும் காணக் கிடைக்கலாம். ஆனால் ஒரு மார்க்கெட்டை 500 வருடங்களுக்கும் மேலாக முழுக்க முழுக்க மகளிர் மட்டுமே நடத்தி வருகிறார்கள் என்றால் ஆச்சர்யம்தானே?!
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் அமைந்திருக்கிறது அந்த 'ஒன் அண்ட் ஒன்லி பெண்கள்' நடத்தும் மார்க்கெட். இங்கு வெயில், குளிர் என்று பாராமல் கடுமையாக உழைத்து தங்கள் குடும்பங்களை காப்பாற்றிவருகிறார்கள் அந்த பெண் வியாபாரிகள்.
'இமா கெயித்தேல் (Ima keithel)'... இதுதான் மார்க்கெட்டின் பெயர். 'இமா' என்றால் அம்மா. 'கெயித்தேல்' என்றால் பஜார். உப்பு, மிளகாய் முதற்கொண்டு பருப்பு வகைகள், பழங்கள், மீன்கள், துணிமணிகள், கைவினைப் பொருட்கள் என சகல பொருட்களையும் இங்கு பெண்கள் விற்பனை செய்கிறார்கள். பூதக்கண்ணாடி கொண்டு தேடினாலும் விற்பனை செய்யும் ஓர் ஆணைக்கூட கண்ணில் பார்க்கமுடியாது.
மணிபூரின் 'மைத்தி' சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் நடத்தும் இந்த மார்க்கெட், ஆசியாவிலேயே மிகப் பெரிய பெண்கள் மார்க்கெட். பரம்பரை பாரம்பர்யமாக கடைகளை நடத்திவரும் இவர்களுக்கு பின் உள்ள கதையை அறிய, நாம் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
16-ம் நூற்றாண்டு முதல் இருந்தே இந்த மார்க்கெட் நடத்தப்பட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தில் 'மைத்தி' பிரிவைச் சேர்ந்த ஆண்கள், மன்னர்களிடமே பணியில் இருந்ததாலும், பெரும்பாலும் சீனா, பர்மா உடனான போர்களில் ஈடுபட்டு வந்ததாலும் வீட்டுக்கு வருவது அரிதாகிவிட்டது. அதனால் குடும்ப பாரத்தைப் பெண்களே சுமக்க நேரிட்டது.
குடும்பத்தைக் காப்பாற்ற விவசாயம் செய்த 'மைத்தி' பெண்கள், விளைந்த அரிசி, காய்கறிகளையும் தாங்களே சந்தைக்குச் சென்று விற்க ஆரம்பித்தார்கள். அப்படி அவர்கள் தங்களுக்கு மட்டுமேயான வியாபாரத் தளமாக ஒரு சந்தையை உருவாக்கினார்கள். வியாபார நுட்பம், ஒற்றுமை, கடின உழைப்பு என அவர்கள் உருவாக்கியதுதான் இந்த மார்க்கெட்.
இப்போது இந்த மார்க்கெட்டில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. கடையை நடத்தும் பெண்களுக்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்பது இவர்களின் நிபந்தனை. அவரவர் குடும்ப வம்சாவழிகள் தவிர, வேற்று வியாபாரிகள் யாருக்கும் இங்கு கடை வைக்க பெரும்பாலும் அனுமதி வழங்கப்படுவதில்லை. 90% 'மைத்தி' இனப் பெண்களும், 10% இதர இனப் பெண்களும் இங்கு கடை வைத்திருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன் இந்த மார்க்கெட்டை அரசாங்கம் காலி செய்தது. தங்களுக்கென்று ஓர் இடம் வேண்டும் என்று இந்தப் பெண்கள் ஒற்றுமையுடனும் வலிமையுடனும்  போராட, அரசாங்கமே இவர்களுக்காக புதிய கட்டடம் கட்டித்தந்தது. தற்போது இந்தப் புதுக் கட்டடத்தில்தான் 'இமா கெயித்தேல்' மார்க்கெட் இருக்கிறது.
'எங்கள் வாழ்வாதாரம் நிறைவாக இருக்கிறது. எந்த ஒரு பிரச்னை வந்தாலும் நாங்கள் ஒற்றுமையாகத்தான் போராடுவோம்' என்று யுடியூப் வீடியோக்களில் பேசுகிறார்கள் இந்த மார்க்கெட் பெண்கள். 'சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் இந்த மார்க்கெட்டை வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள் என்றால் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையே காரணம்' என்று இவர்களைப் புகழ்கிறார்கள் மணிப்பூர்வாசிகள்.
இது மகளிர் மட்டும் வெற்றி!

No comments: