Sunday 22 January 2017

மூன்று ஏக்கர்... 52 பாரம்பர்ய நெல் ரகங்கள்!

வியக்க வைக்கும் விதை மீட்பு விவசாயம்!இயற்கைகு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்
யற்கை விவசாயத்துக்கு மாறும் நெல் விவசாயிகள் பலரும் பாரம்பர்ய ரகங்களைத் தேடிப்பிடித்துதான் சாகுபடி செய்வார்கள். சந்தைத் தேவை அறிந்து அதற்கான பாரம்பர்ய வகைகளைத் தேர்ந்தெடுத்து சாகுபடி செய்வதுதான் பெரும்பாலானோரின் வழக்கம். அதே நேரத்தில், பாரம்பர்ய ரகங்களை அழிவிலிருந்து மீட்பதற்காக, பலவித ரகங்களைத் தொடர்ந்து சாகுபடி செய்பவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான், திருவாரூர் மாவட்டம், வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனன்.
ரசகடம், துளசிவாச சீரகச் சம்பா, மிளகுச் சம்பா, பொம்மி, ஒட்டடம், மரத் தொண்டி, கொத்தமல்லிச் சம்பா, தேங்காய்பூச் சம்பா, சிங்கினி கார், செம்பாளை, கொட்டாரச் சம்பா, கண்டசாலி, கல்லுண்டை, ராஜமன்னார், பால்குடவாழை, முற்றினச் சம்பா... எனப் பல அரிய வகையான 52  நெல் ரகங்களை ஆழ்துளைக் கிணற்று நீர் பாசனம் மூலம் மூன்று ஏக்கர் பரப்பில் பயிரிட்டு இருக்கிறார், மயில்வாகனன். 

பொங்கல் சிறப்பிதழ் பேட்டிக்காக ஒரு காலை வேளையில் மயில்வாகனனின் வயலுக்குச் சென்றோம். விதவிதமான உயரங்களில், வண்ணங்களில் தலையாட்டிக் கொண்டிருந்தன, வகை வகையான நெல் ரகங்கள்.  

‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். டிப்ளோமா எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிச்சுட்டு, சென்னையில் ஆறு வருஷம் வேலை பார்த்தேன். குடும்பச் சூழ்நிலை காரணமா, சொந்த ஊருக்கு வந்து, விவசாயத்தைக் கவனிக்க ஆரம்பிச்சேன். எங்களுக்கு 20 ஏக்கர் நிலம் இருக்கு. இது களிமண் பூமி. 2003-ம் வருஷத்துல இருந்து இயற்கை விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். 2004-ம் வருஷம், காவிரி உரிமை மீட்புக்காக, நம்மாழ்வார் ஐயா, எங்க ஊர் பக்கம் நடைப்பயணம் வந்தார். 

அப்போ அவர், பாரம்பர்ய நெல் ரகங்களோட மகத்துவம் குறித்துப் பேசினார். அதைக் கேட்டதுக்கப்புறம்தான் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்” என்று முன்கதை சொன்ன மயில்வாகனன், வயலுக்குள் அழைத்துச் சென்றார். 

“கருஊதா நிறத்துல இருக்கு பாருங்க...இதுதான் சின்னகார். இதோட வயசு 110 நாட்கள். கரும்பச்சை நிறத்துல இருக்குல்ல, அதுதான் மிளகுச் சம்பா. அதோட அரிசி மிளகு வடிவத்துல உருண்டையா இருக்கும்.இதேமாதிரி கொத்தமல்லி சம்பா. அதோட நெல்லை கையில தேய்ச்சா, லேசா கொத்தமல்லி வாசனை வரும். பூப்பூக்கும் தருணத்துல மென்மையா துளசிவாசம் வீசும். அதுதான் துளசிவாச சீரகச் சம்பா” என மிகுந்த ஆர்வத்தோடு அனைத்து நெற்பயிர்களையும் நமக்கு அறிமுகம் செய்தவர் தொடர்ந்தார். 

“முதன்முதலா கவுனி, தூயமல்லி, சீரகச் சம்பா, சம்பா மோசனம் இந்த நாலு ரகத்தையும் சாகுபடி செஞ்சேன். தொடர்ந்து ‘பசுமை விகடன்’ல வர்ற பாரம்பர்ய ரகங்கள் குறித்த செய்திகளைப் படிக்கப் படிக்க என்னோட ஆர்வமும் தேடலும் அதிகமாச்சு. அதனால பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடிப்பிடிச்சு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். போன வருஷம் வரைக்கும் என்கிட்ட 30 நெல் ரகங்கள் இருந்துச்சு. கிடைக்கிற விதையை அப்படியே விதைச்சுடுவேன். இதுக்கு முன்னாடி அதிகபட்சமா ஒரே நேரத்துல 15 ரகங்கள்தான் சாகுபடி செஞ்சிருக்கேன். இந்தத் தடவை விதைநெல் உற்பத்திக்காக, மூணு ஏக்கர் நிலத்துல ஒரே சமயத்துல 52 நெல் ரகங்களைச் சாகுபடி பண்ணியிருக்கேன். 

ஒரு ஏக்கர்ல 17 ரகங்கள், அடுத்த ஒரு ஏக்கர்ல 17 ரகங்கள், அதுக்கடுத்த ஒரு ஏக்கர்ல 18 ரகங்கள் இருக்கு. எல்லா ரகங்களையும் விதைச்சு 70 நாட்கள் ஆகுது. ஒவ்வொரு ரகத்திலேயும் 60 கிலோவில் இருந்து 80 கிலோ வரை நெல் மகசூல் ஆகும்னு எதிர்பார்க்கிறேன். இது லாப நோக்கத்துக்காக இல்லை. முழுக்க முழுக்கப் பாரம்பர்ய ரகங்களைப் பரவலாக்கணுங்கிற நோக்கத்துக்காகத்தான். கிடைக்காத அரிதான ரகங்களைப் பரவலாக்கி மீட்டெடுக்கணும்னு செஞ்சுட்டு இருக்கேன். நான் விதைநெல்லை யாருக்கும் இலவசமாகக் கொடுக்கிறதில்லை. இலவசமாகக் கொடுத்தா அதுக்கு மதிப்பு இருக்காது. அதனால, உற்பத்திச் செலவை ஈடுகட்டுற அளவுக்கு மட்டும் குறைவான விலை வெச்சுக் கொடுத்துட்டு இருக்கேன். அதுவும் இயற்கை விவசாயிகளுக்கு மட்டும்தான். ஆனா, பாரம்பர்ய நெல்லை பரவலாக்குற நோக்கத்தோட கேக்குற விவசாயிகளுக்கு, 1 கிலோ கொடுத்தா அவங்க அறுவடை செஞ்சு 2 கிலோ கொடுக்கணுங்கிற ஒப்பந்தத்துல இலவசமாகவே விதைநெல்லைக் கொடுக்கலாம்னு இருக்கேன். இயந்திரத்துல அறுவடை செஞ்சா, நெல் மணிகள்ல காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கு. அதனால கை அறுவடைதான் செய்யப்போறேன்” என்ற மயில்வாகனன் நிறைவாக, 
“விதைக்காக அறுவடை செய்ற நெல்லை 12 சதவிகித ஈரப்பதத்துக்குக் காய வெச்சு 60 கிலோ விதைநெல்லுக்கு 50 கிராம் வசம்பு, 40 காய்ந்த மிளகாய்னு சேர்த்து சணல் சாக்குல போட்டு வெச்சுடுவோம். இதனால பூச்சிகள் வராது. ரெண்டு மாசம் கழிச்சி அமாவாசை அன்னிக்கு வெயில்ல 2 மணிநேரம் காய வெச்சு எடுத்து வைப்போம். அதுக்கப்புறம் ஒரு மாசம் கழிச்சுதான் விதைநெல்லை விற்பனை செய்வோம். 

அறுவடை செஞ்ச விதைநெல், 90 நாட்கள் வரை விதை உறக்கத்துல இருக்கும். அதனாலதான் மூணு மாசம் கழிச்சு விற்பனை செய்றோம். அப்போதான் முளைப்புத்திறன் நல்லா இருக்கும்” என்று சொல்லிவிட்டுத் தண்ணீர்ப் பாய்ச்சும் வேலையில் மும்முரமானார்.

தொடர்புக்கு, மயில்வாகனன், செல்போன்: 98849 04437

ஒவ்வொரு ரகத்துக்கும் தனித்தனிப் பாத்தி!
நாற்றாங்கல் தயாரிக்கும் முறை குறித்து மயில்வாகனன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

ஒரு ரகத்துக்கு ஒரு சென்ட் எனப் பிரித்து நாற்றாங்கால் அமைக்க வேண்டும். தேர்வு செய்து நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 500 ஆடுகள் என்ற கணக்கில் ஓர் இரவு ஆட்டுக்கிடை அமைக்க வேண்டும். பிறகு, வயலில் தண்ணீர் கட்டி உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, 4 அடி அகலத்தில் வாய்க்கால் அமைத்து 30 அடி நீளம், 15 அடி அகலத்துக்குப் பாத்திகள் அமைக்க வேண்டும். 

பாத்திகளின் நான்கு புறங்களிலும் முக்கால் அடி உயரத்துக்கு வரப்பு அமைக்க வேண்டும். அரை லிட்டர் தண்ணீரில் 75 கிராம் உப்பு கலந்து, 200 கிராம் விதை நெல்லை இட்டு மிதந்து வரக்கூடிய நெல்லை நீக்கிவிட்டு, அடியில் தங்கி இருக்கக்கூடிய நெல்லை மட்டும் எடுத்துத் தண்ணீரில் நன்கு அலச வேண்டும். 400 மில்லி தண்ணீரில் 5 மில்லி பஞ்சகவ்யா கலந்து விதை நெல்லை இட்டு 20 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். 

பிறகு வடிகட்டி, விதைநெல்லை துணிப்பையில் காற்றுப் புகாதவாறு நன்கு கட்டிவைக்க வேண்டும். இதன்மீது சணல் சாக்கு போட்டு மூட வேண்டும். 20 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதேபோல தனித்தனி பாத்திகளில் விதைக்க வேண்டும். விதைத்த மறுநாள் தண்ணீரை வடித்துவிட வேண்டும். மூன்றாம் நாள் தண்ணீர் கட்டி, அடுத்த 3 மணிநேரத்தில் வடிக்க வேண்டும். இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் என 9 முறை தண்ணீர் கட்டி வடிக்க வேண்டும். 11-ம் நாளில் பாசன நீரில் அமுதகரைசலைக் கலந்துவிட வேண்டும். 15-ம் நாள் 1 லிட்டர் பஞ்சகவ்யாவை 150 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். 21-ம் நாளில் நாற்றுகள் 6 அங்குல உயரத்துக்கு வளர்ந்து, நடவுக்குத் தயாராகிவிடும்.

பொங்கலுக்கு ஏற்ற நெல் ரகங்கள்! 

தூயமல்லி, கிச்சிலிச்சம்பா, இலுப்பைப்பூச் சம்பா, சீரகச் சம்பா ஆகிய நெல் ரகங்களின் பச்சரிசி, பொங்கல் செய்வதற்கு மிகவும் ஏற்றது. சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் இரண்டுக்குமே இந்த ரகங்கள் சிறப்பாக இருக்கும். பொங்கல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

ஒற்றை நாற்று நடவு! 

ஒரு ஏக்கர் சாகுபடி வயலில் 500 ஆடுகள் வீதம் ஆட்டுக்கிடை போட்டு 15 நாட்கள் கழித்துச் சேற்றுழவு செய்ய வேண்டும். பிறகு, 15 நாட்கள் கழித்து  தண்ணீர் பாய்ச்சி உழவு செய்து மண்ணைச் சமப்படுத்தி... வரிசைக்கு வரிசை 50 சென்டிமீட்டர், நாற்றுக்கு நாற்று 25 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு ஒரு குத்துக்கு ஒரு நாற்று என நடவு செய்ய வேண்டும். ஒரு ரகத்துக்கும் அடுத்த ரகத்துக்கும் 100 சென்டிமீட்டர் இடைவெளி அவசியம். ஒரே வயதுடைய ரகங்கள் அடுத்தடுத்து இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் ஒரே நேரத்தில் பூ எடுக்கும். அப்போது அயல் மகரந்தச் சேர்க்கையால் கலப்பு ஏற்பட்டுவிடும். அதற்கேற்றவாறு நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 

நடவு செய்த 15-ம் நாள், 100 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவ வேண்டும். 45-ம் நாள், 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 65-ம் நாள் 120 மில்லி மீன் அமினோ அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சித்தாக்குதல் இருந்தால், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம். 

ஒவ்வொரு குத்தில் இருந்தும் 35 முதல் 45 தூர்கள் வெடிக்கும். நாற்று நடவு செய்த 70-ம் நாளில் குறுகிய கால ரகங்கள் நான்கு அடி உயரத்துக்கும், நீண்டகால ரகங்கள் 6 அடி உயரத்துக்கும், மத்திய கால ரகங்கள் 5 அடி உயரத்துக்கும் வளர்ந்திருக்கும்.

காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர்ப் பாசனம் செய்து வந்தாலே போதும். இதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

மயில்வாகனன் சாகுபடி செய்துள்ள 52 வகையான நெல் ரகங்கள்
1. ரசகடம் 

2. துளசிவாச சீரகச்சம்பா 

3. கண்டசாலி
 
4. கைவரச்சம்பா
 
5. குடவாழை
 
6. தேங்காய்பூச் சம்பா 

7. வாலான்
 
8. வாடன் சம்பா 

9. சிங்கினிகார்
 
10. பூங்கார்
 
11. ராஜமன்னார்
 
12. பவானி 

13. சம்பா மோசனம் 

14. செம்பாளை
 
15. கொட்டாரச் சம்பா 

16. மிளகுச் சம்பா 

17. நவரா 

18. கருங்குறுவை 

19. சொர்ண மசூரி 

20. அறுபதாம் குறுவை 

21. மைசூர் மல்லி 

22. காலா நமக் 

23. சின்னார் 

24. கிச்சிலிச் சம்பா 

25. காட்டுயானம்
 
26. பொம்மி 

27. ஒட்டடம் 

28. பால் குடவாழை 

29. சொர்ணவாரி 

30. தூயமல்லி 

31. ஆத்தூர் கிச்சிலிச்சம்பா 

32. தங்கச்சம்பா 

33. ராஜமுடி 

34. குழியடிச்சான் 

35. நீலஞ் சம்பா 

36. குண்டுக்கார் 

37. கொத்தமல்லிச் சம்பா 

38. கவுனி 

39. கல்லுண்டை
 
40. முற்றின சம்பா 

41. கருடன் சம்பா 

42. சேலம் சம்பா 

43. மரத்தொண்டி 

44. கறுப்புக்கவுனி 

45. சிவப்புக்கவுனி 

46. இலுப்பைப் பூச்சம்பா 

47. மாப்பிள்ளைச் சம்பா 

48. திருப்பதி சாரம் 

49. சிவப்புக் குருவிக்கார் 

50. 
சண்டிக்கார்
 
51. பொன்னி 

52. குள்ளக்கார்

No comments: