கோவைக்காய் வறுவல்
தேவையானவை: கோவைக்காய் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப, சீரகக்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி… மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறி வேப்பிலை சேர்த்துப் பிசிறி 5 நிமிடம் வைக்கவும். அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.
இதை தயிர்சாதம், சாம்பார்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட… சுவை சூப்பராக இருக்கும்.
வெஜ் குருமா
தேவையானவை: கேரட் – 2, உருளைக்கிழங்கு, நூக்கல் - தலா ஒன்று, பீன்ஸ் – 10 பச்சைப் பட்டாணி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 5 பல், ஏலக்காய் – 3, பட்டை, பிரிஞ்சி இலை – தலா ஒன்று, லவங்கம் – 5, தேங்காய் – அரை மூடி, முந்திரி – 10, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா, பொட்டுக்கடலை - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட், உருளைக்கிழங்கு, நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைக்கவும். ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்யவும். தேங்காயுடன் முந்திரி, தனியா, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆகும் சமயம் பச்சை மிளகாய் – இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை சிறு தீயில் வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, பொடி செய்த மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறி, பச்சைப் பட்டாணி சேர்த்து மறுபடியும் வதக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் (உப்பு போதவில்லை என்றால் சிறிது போட்டுக் கொள்ளவும்). கொதி வந்தவுடன் குக்கரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இட்லி, சப்பாத்தி, புரோட்டாவுக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சிறந்தது இந்த குருமா.
பீட்ரூட் பொரியல்
தேவையானவை: பெரிய சைஸ் பீட்ரூட், பெரிய வெங்காயம் – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2 சர்க்கரை – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பீட்ரூட், பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து குக்கரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் வேக வைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரை சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் விட்டு, மறுபடியும் கெட்டியாகும் வரை வதக்கி இறக்கவும்.
இந்தப் பொரியல்… சாதம், வெரைட்டி ரைஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.
வாழைக்காய் சிப்ஸ்
தேவையானவை: வாழைக்காய் – 2 (தோல் சீவி வைக்கவும்), மஞ்சள்தூள் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தோல் சீவிய வாழைக்காயை நேரடியாக கடாயில் சிப்ஸ்களாக சீவவும். இவ்வாறு செய்வதால் சிப்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வெள்ளையாக… அதே சமயம், மொறுமொறுப்பாகவும் இருக்கும். வாழைக்காயை சீவும்போது அடுப்பை சிறு தீயிலும், பின்பு அதிகமாவும் வைத்து வறுத்தெடுக்க வேண்டும். ஒரு கப்பில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கி வைக்கவும் (விருப்பப்பட்டால் சிறிதளவு கறுப்பு உப்பு, சாட் மசாலாவை சேர்க்கலாம்). ஒவ்வொரு முறை சிப்ஸ் வறுத்தெடுக்கும்போதும் இந்தப் பொடியை தூவவும். கடைசியாக கறிவேப்பிலை வறுத்துப் போட்டு பரிமாறவும்.
இது வெரைட்டி ரைஸ்களுக்கு தொட்டுக்கொள்ள சிறந்தது.
குடமிளகாய் சட்னி
தேவையானவை: குடமிளகாய் பெரியது – ஒன்று, சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), தக்காளி சிறியது – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு சிறிய குழிக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குடமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான கடாயை வைத்து நல்லெண்ªணய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு, அதன்பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் குடமிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, பின்னர் புளிக் கரைசலை சேர்த்து… எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.
இதை உப்புமா, பொங்கல், தயிர் சாதம், வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.
முட்டைகோஸ் சட்னி
தேவையானவை: முட்டைகோஸ் – கால் கிலோ, காய்ந்த மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி – சிறிய நெல்லிக்காய் அளவு அல்லது தக்காளி – 3, சின்ன வெங்காயம் – 10, உளுத்தம்பருப்பு – – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி உளுத்தம்பருப்பை சேர்க்கவும். அது பொன்னிறம் ஆகும் சமயம் நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும். முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்… புளி,உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத் தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்). பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனு டன் சேர்த்துக் கலக்கவும்.
இந்த சட்னியை சப்பாத்தி, இட்லியுடன் பரிமாறலாம்.
No comments:
Post a Comment