Sunday, 5 February 2017

காளஹஸ்தியில் தீ விபத்து...ஆள்பவருக்கு ஆபத்து!.. பகீர் கிளப்பும் தமிழக ஜோதிடர்!


காளஹஸ்தி

காளஹஸ்தியில் இன்று ராஜகோபுரத்தின் யாகசாலை கொட்டகை இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி திருத்தலம், மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் ஒன்று. சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான வாயுவுக்குரிய தலமும் கூட. இந்தியாவில் ஆன்மிக பக்தர்கள் விஜயம் செய்யும் முக்கிய கோவில்களில் காளஹஸ்தியும் ஒன்று. இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூஜித்ததாகவும் அதனால் தான் இதற்கு திருக்காளத்தி அதாவது காளஹஸ்தி என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.

காளஹஸ்தி பல்வேறு பாவங்களை போக்கும் பரிகாரங்கள் செய்யும் தலமாகவும் இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். முக்கிய நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தொடும்.

இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளஹஸ்தி, சோழ மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனான  இராசேந்திர சோழன் கட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2-ம் தேதிதான் கோவிலின் ராஜகோபுரத்துக்கான கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

வரும் 8-ம் தேதி நடக்கவுள்ள இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கான பணிகள் நாளை முதல் துவங்க உள்ளன. இந்நிலையில் இன்று மாலை 3.46 மணிக்கு எதிர்பாராதவகையில் கோவிலின் ராஜகோபுரத்தினருகே இருந்த ஹோமகுண்டங்கள் வைக்கப்பட்டிருந்த சுமார் 8 கொட்டகைகள் எரிந்து சாம்பலாகின.

பிற்பகலில் (3.46 மணிக்கு) கொட்டகை எரிந்ததை அங்குள்ள சிலர் பார்த்து சத்தமிட பின்னர் தீயை அணைத்துள்ளனர். இருந்தும் முற்றாக எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து ஆந்திர அதிகாரிகள் தரப்பில் விசாரித்ததில், “கடந்த 2-ம் தேதிதான் ராஜகோபுரத்துக்கான கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அதற்காக ஏற்படுத்தப்பட்ட யாகசாலை கொட்டகைகள்தான் எரிந்தவை. கோவிலிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் வெளிப்பகுதியில்தான் யாகசாலை உள்ளது என்பதால் கோவிலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் இல்லையென்றாலும் தென்னிந்தியாவின் மிக முக்கிய கோவிலான இங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அமங்களமானதாக கருதுகிறோம்” என்றார்.

கொட்டகைகள் எரிந்த சமயம், கும்பாபிஷேக பணிகளை பார்வையிட ஆந்திர அறநிலையத்துறை அமைச்சர் வந்திருந்தார். கும்பாபிஷேகத்துக்குச் சில நாட்களே உள்ள நிலையில் தற்சமயம் பாதிக்கப்பட்ட யாகசாலையை சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துபேசிவருவதாக சொல்லப்படுகிறது.

தீ விபத்து குறித்து மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜோதிடர் ரமேஷிடம் கேட்டோம். “கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது. காளஹஸ்தியை காலன், அதாவது எமன், ஹஸ்தி (அஸ்தி) என்பதை சுடுகாட்டு சாம்பல் என்றும் சொல்வார்கள். காளஹஸ்தி இன்று ஆந்திர மாநிலம் என்றாலும் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களும்  விஜயநகரப்பேரரசு காலத்தில் ஒன்றாக இருந்தவை. அதனால் இந்த தீ விபத்து இந்த 3 மாநிலங்களை ஆள்பவர்களுக்கு ஆபத்து என்பதற்கான அறிகுறியாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். தமிழகத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் கடந்த ஆட்சியில் கோபுர கலசம் கீழே விழுந்து நொறுங்கியது. அடுத்து ஜெயலலிதாவே முதல்வராக வந்தும்  ஆட்சியில் அவர் நீடிக்கவில்லை. அதுபோன்ற இந்த சம்பவமும் ஆட்சியாளர்களுக்கு ஆபத்தையோ, நாட்டில் திடீர் பேரழிவையோ ஏற்படுத்தலாம். இதற்கான அறிகுறியாகவே இந்த தீ விபத்தை நாங்கள்  கருதுகிறோம் " என்றார்.
                                                                                 நன்றி
                                                                               விகடன்

No comments: