வாழைக்காய் சட்னி
தேவையானவை: வாழைக்காய் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 8, பெரிய வெங்காயம் – ஒன்று, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – ஒரு பல், தக்காளி – 2, புளி – சிறிதளவு, சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோலுரித்து, கட்டியில்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, சோம்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த மசாலா விழுது, மசித்த வாழைக்காய் போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் தெளிந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
இதை… இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.
உருளைக்கிழங்கு மசாலா
தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, தேங்காய் துருவல் – ஒரு கப் (பால் எடுக்கவும்), காய்ந்த மிளகாய் – 5, தனியா – 2 டீஸ்பூன், முந்திரி – 10, வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, குக்கரில் வேக வைத்து, தோலுரித்து நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, முந்திரியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து… கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
கடாய் பனீர்
தேவையானவை: பனீர் – கால் கிலோ, குடமிளகாய், வெங்காயம், தக்காளி – தலா 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
மசாலா பொடி தயாரிக்க: காய்ந்த மிளகாய் – 5, தனியா – 2 டீஸ்பூன், லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: மசாலா பொடி தயாரிக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய ஒரு வெங்காயம், நறுக்கிய 2 குடமிளகாய், பனீரை தனித்தனியே வதக்கி எடுத்து கொள்ளவும். பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து… பொடியாக நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை நன்கு வதக்கி, இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, நறுக்கிய தக்காளி, மசாலா பொடியை போட்டு வதக்கி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அதனுடன் வதக்கி வைத்திருக்கும் பனீர், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கி… எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
இது… சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
பப்பாளி சாலட்
தேவையானவை: பப்பாளி – ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு – 50 கிராம், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, கொத்தமல்லி – சிறிதளவு, தேன் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பப்பாளியை ‘கட்’ செய்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் முளைகட் டிய பச்சைப் பயறையும் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நீளமாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக் கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்துக் கிளறி, அப்படியே பரிமாறவும்.
சேப்பங்கிழங்கு சாப்ஸ்
தேவையானவை: சேப்பங்கிழங்கு – அரை கிலோ, வெங்காயம், பச்சை மிளகாய் – தலா 2, கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு, கசகசா – 3 டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், முந்திரி – 10, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோலுரித்து நீளமாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் எண்ணெயை காய வைத்து நறுக்கிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து எடுத்து, அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். கடாயில் கசகசா, சோம்பு, முந்திரி போட்டு வறுத்து, மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
கடாயில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு வதக்கி, அதனுடன் ஒன்றன் பின் ஒன்றாக இஞ்சி – பூண்டு விழுது, கசகசா பொடி, கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் சேர்த்து நன்கு வதக்கி (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்), வறுத்த சேப்பங்கிழங்கை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதனை புலாவ், சாம்பார் சாதத்துடன் சாப்பிட… சுவை அசத்தலோ அசத்தல்!
தயிர் வெண்டைக்காய்
தேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, தக்காளி – ஒன்று, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு கப், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: வெண்டைக்காயை கழுவி துடைக் கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும். தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த கலவையை கீறிய வெண்டைக் காயில் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிறகு, வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து… தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை நன்கு அடித்து இதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவவும்.
இதை சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
பீர்க்கங்காய் கொத்சு
தேவையானவை: பீர்க்கங்காய் – அரை கிலோ, புளி – நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 10, கடுகு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுதூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி…. சாதத்துடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment