Sunday 22 January 2017

மெரினாவில் மாணவர்கள் திரண்டது எப்படி?’ மத்திய அரசை அதிரச் செய்த உளவுத்துறை ரிப்போர்ட்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் எப்படி மாணவர்கள் திரண்டனர் என்ற முழுவிவர அறிக்கையை மத்திய அரசுக்கு மத்திய உளவுத்துறை அனுப்பி உள்ளது. அதிலுள்ள தகவல்கள் மத்திய அரசை உலுக்கியதன் விளைவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
வரலாறாக மாறிய போராட்டம்! 

தமிழர்களின் ஒற்றுமையை ஜல்லிக்கட்டு போராட்டம் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. தலைவனே இல்லாமல் தானாக வந்து சேர்ந்த கூட்டம், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தப் புரட்சி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. வழக்கமாக ஒரு போராட்டம் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிப்பது உளவுத்துறையின் முக்கிய கடமை. ஆனால் தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த தகவல்களை சரியாக உளவுத்துறை போலீஸார் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் சட்டம், ஒழுங்கு போலீஸார். அதற்கு மாநில உளவுத்துறை போலீஸார், ’நாங்கள் ஏற்கெனவே தகவலைச் சொல்லி விட்டோம். ஆனால் உயரதிகாரிகள் அதைக் கண்டுக்கொள்ளவில்லை’ என்று சட்டம், ஒழுங்கு போலீஸாரை சாடுகின்றனர். மாநில உளவுத்துறை மற்றும் சட்டம், ஒழுங்கு போலீஸார் இடையே இந்த பிரச்னை இப்படியிருக்க, மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கே அதிர்ச்சித் தரும் அறிக்கையை அளித்து இருக்கிறது.
தவறான 'ரிப்போர்ட்'! 

இதுகுறித்து பேசிய மத்திய உளவுத்துறை உயரதிகாரி ஒருவர், "மாநில அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வருவதே எங்களது வேலை. ஜல்லிக்கட்டுக்குத் தடை இருப்பதால் வழக்கம் போல இந்த ஆண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றே மத்திய அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருந்தோம். தற்போது எங்கள் ரிப்போர்ட் தவறாகி விட்டது. உடனடியாக போராட்டங்கள் நடக்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று அங்குள்ள நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணித்து ரிப்போர்ட் தயாரித்தோம். அதில், மக்களின் எழுச்சிப் போராட்டம், நிச்சயம் பெரியளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளோம். மேலும், வழக்கமாக ஒரு போராட்டம் என்றால் அதற்கு தலைமை ஒன்று இருக்கும். தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலைமையே இல்லை. இதனால் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதில் சிக்கல் இருப்பதையும் அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கிறோம்.
மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த விமர்சனங்களை அப்படியே சுட்டிக்காட்டி இருக்கிறோம். இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு உடனடியாக சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக பெரியளவில் புரட்சி கூட வெடிக்கலாம். அதன்பிறகு மக்கள் சக்தியை தடை செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முடிவு, மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தோம். எங்களது அறிக்கையின் முழுவிவரத்தை பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதன்பிறகே ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருக்க வேண்டும்!’’ என்றார். 
இளைஞர்கள் பட்டாளம்!  

மாநில உளவுப்பிரிவு போலீஸார் கூறுகையில், "அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடந்தவுடன் உடனடியாக எங்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம். அவர்களும் வழக்கம் போல இந்த போராட்டத்தை பெரியளவில் கண்டுகொள்ளவில்லை. எங்கள் ரிப்போர்ட் குறித்து ஆலோசனை கூட உயரதிகாரிகள் நடத்தவில்லை. ஆனால் அதற்குள் மெரினாவில் இளைஞர்கள் பட்டாளம் குவிந்து விட்டனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்றனர். இந்த தகவலையும் எங்கள் உயரதிகாரிகளுக்கு ரிப்போட்டாக கொடுத்தோம். அதன்பிறகே உயரதிகாரிகள் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த விவகாரத்தில் தலையிட்டனர். இதற்கிடையில் தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. உளவுத்துறை அதிகாரிகள், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக முதல்வருக்கு தகவல் தெரிவித்த போது அங்கிருந்து எந்த பதிலும் உடனடியாக வரவில்லை. 
 
 அமைதி காத்த அரசு! 

'அமைதியாகவும், அறவழியில் போராட்டத்தை நடத்த வழிவகை செய்யுங்கள்' என்ற பதில் மட்டும் அரசிடமிருந்து கிடைத்தது. இதனால் போராட்டத்துக்கு எந்தவித இடையூறு செய்யாமல் பாதுகாவலர்களாக போலீஸார் மாற்றப்பட்டனர். அதற்கு போராட்டக்குழுவிடமிருந்தும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைத்தது. நள்ளிரவில் நிலைமையை எப்படி சமாளிக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது அதையும் சுமூகமாக போராட்டக்குழுவினரே சமாளித்துக் கொண்டனர். இதனால் எங்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்துச் சூழ்நிலைகளும் சாதகமாக இருப்பதால் மெரினா உள்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துபவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக பெண்களும், குழந்தைகள், முதியோர்கள் போராட்டக்களத்தில் இருப்பதால் அவர்களைப் பாதுகாப்பதே எங்களது முக்கிய கடமையாக உள்ளது. ஜல்லிக்கட்டு அனுமதி கிடைத்தவுடன் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் போராட்டக்குழுவினரை வீட்டுக்கு அனுப்பி வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றனர்.
                                                                 நன்றி
                                                            விகடன்

No comments: