Tuesday 24 January 2017

ஜல்லிக்கட்டு விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முக்கிய தகவல்


ஜல்லிக்கட்டு தொடர்பாக 2011, 2016ல் வெளியிட்ட அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த இனி தடை ஏதும் இருக்காது என்று தெரிகிறது.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ஏற்காத மாணவர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினர் கடும் முயற்சியால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான இரண்டு அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. இதேபோல் 2016-ம் ஆண்டு கலாசார நிகழ்வாக ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த இரண்டு அறிவிக்கையையும் திரும்ப பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. அறிவிக்கைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நாளை மத்திய அரசு மனுத் தாக்கல் செய்ய உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு நடத்த இனி தடை ஏதும் இருக்காது என்று தெரிகிறது.

No comments: