Monday 30 January 2017

சாப்பிட கூடியதும்… கூடாததும்!

இன்று பெரும்பாலும் அரிசியும், கோதுமையும் பாலீஷ் செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகிறது. வெளியிடங்களில் அரிசி உணவு சாப்பிடுகிறீர் எனில், அத்துடன் கீரை, காய்கறிகளை நன்கு பிசைந்துமென்று சாப்பிட வேண்டும். சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தை, கீரையின் நார்கள் மெதுவாக்கிவிடுகிறது. சர்க்கரை நோயாளிகள், சாப்பிட வேண்டிய மற்றும் வேண்டாத உணவுகள் எவை?
தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, உருளையும், பீட்ரூட்டும் அறவே தவிர்க்க வேண்டும். இனிப்பு குறைவாகவும், துவர்ப்பு அதிகமாகவும் உள்ள பழங்களை தினமும் சாப்பிடுவது அவசியம். மாம்பழம், சப்போட்டா, வாழை தவிர, மற்ற பழங்களை மருத்துவர் அறிவுரையின்படி உண்பது நல்லது.
தோலுடன் கூடிய ஆப்பிள், துவர்ப்பு சுவையில் இளம்பழுப்பு நிறத்தில் கொய்யா, நாவற்பழம், துவர்ப்புள்ள மாதுளை நல்லது. காலையில் முருங்கைக்கீரை வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்தமல்லி, வெந்தயம் சேர்ந்த குடிநீரை குடிக்கலாம். வெட்டி வேர் போட்ட பானை நீர், சீரகத்தண்ணீர் தினசரி பயன்பாட்டுக்கு நல்லது.
இரவு தினை ரவா உப்புமா, கேழ்வரகு அடை ஆகியவற்றை பாசிப்பயறு கூட்டுடன் பயன்படுத்தலாம். காலை, பஜ்ரா ரொட்டி எனப்படும் கம்பு அடை, சிவப்பரிசி அவல் உப்புமா, கைக்குத்தல் அரிசிப் பொங்கல் என, அளவாக சாப்பிடலாம். மேலும், நம்ம ஊர் நவதானியத்தில் அல்லது சிறு தானியங்களில் செய்த உப்புமா, அடை சிறந்தவை.

No comments: