Saturday 28 January 2017

ஜோதிடம் கற்றுக் கொள்ளலாமா ? ( பாடம் - 01 )


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihrrZMBurMd1bP4AkADhGVjeg3b3gck6j_ELD7RlDBajwfd0LjvgbOqhReFHMtsz0DeYibDYYNQiU2A3hkzq6_1Q4UcpM3CicUO21MV2pnELX1KUAINx5Kkh8ixQC6bLUgNF78vjx9emmb/s320/Ganesh.jpg


கணபதி வழிபாடு

ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

ஓம் என்கிற பிரணவப் பொருளினுள் உள் அடங்கிய , எல்லாம் வல்ல இறைவனை வணங்கி , சித்தர்களின் தலைவனாம் அகத்திய மக ரிஷியை , மனதில் தியானித்து ...  ஜோதிடப் பாடத்தை தொடங்குகிறேன்.


ஜோதிடக் கலையை எப்பாடு பட்டேனும் காப்பாற்றுவேன் , என்று சூளுரை செய்து தொடங்கப்படும் முயற்சி அல்ல இது. ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களை திருத்தி , அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதும் என் நோக்கமல்ல. யாரும் யாரையும் மாற்ற முடியாது. தானே உணர்ந்து , தன்னை மாற்றிக் கொண்டால் தவிர எந்த மாற்றமும் நிரந்தரம் ஆகாது. 

எனக்கு தெரிந்த ஜோதிட ஞானத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே  இனி வரவிருக்கும் தொடர் கட்டுரைகள்.  இதில் உங்களுக்கு ஏற்படும்  நிறைகள் அனைத்திற்கும் காரணம் என் குருவருள். ஏதேனும் பிழைகள் இருப்பின், அவை முழுக்க முழுக்க அடியேனுடையது. பொறுத்துக் கொள்ளவும். திருத்திக் கொள்கிறேன். .

எந்த கலையிலும் யாரும் பெரிய கொம்பன் கிடையாது. மனிதர்களாய்  பிறந்த ஒவ்வொருவரும் , இன்னும் கற்க, கற்றுத் தெளிய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அந்த அருணாச்சலமும் , என் குருவின் அருளும் எனக்கு தேவையான ஞானம் தந்து, தவறான கருத்துக்களை கூறாமல் இருந்து காக்கும் என்று நம்புகிறேன். 

ஜோதிடம் பற்றி ஒன்றுமே தெரியாத பாமரருக்கும் புரியும் வகையில் , முடிந்தவரை எளிமையான நடையில் தர முயற்ச்சிக்கிறேன். சரி.... இனி நேரடியாக பாடத்திற்கு செல்வோமா..?

ஜாதகம் : 

பூமியில் பிறக்கும் எந்த ஒரு ஜாதகருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே , 9 கிரகங்களாகவும், அவை அமரும் வீடுகளையும் தீர்மானிக்கிறது. 

மொத்தம் ஒன்பது நவக்கிரகங்கள் :  சூரியன், சந்திரன், செவ்வாய் , புதன், குரு, சுக்கிரன் , சனி, ராகு , கேது


எந்த ஒரு ஜாதக கட்டத்திலும் - 12 கட்டங்கள் இருக்கும். இவை 12 வீடுகள் என்பர். 12 ராசிகள்என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலிருந்து இடதுகைப் பக்கத்திலிருந்து - இரண்டாம் கட்டத்தை பாருங்கள். அதை முதல் வீடு என்று கொள்ளுங்கள். இப்போது கடிகாரச் சுற்றுப்படி 1 , 2 , 3 என்று  குறியுங்கள். மொத்தம் 12 வீடுகள் வரும். ஒவ்வொரு வீட்டிற்கும் 30 டிகிரி . மொத்தம் 360 டிகிரி. இதனுடன் ஒரு சுற்று முடியும். 


மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் - 4 பாதங்கள் உள்ளன.  ஆக மொத்தம் 27 x 4 = 108 நட்சத்திர பாதங்கள் . ஒவ்வொரு வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என , 108 நட்சத்திரக் கால்கள் - 12 வீட்டில் அமர்ந்திருக்கும்.  

முதல் வீடான - மேஷத்தில் - அஸ்வினி ( 4 பாதங்கள் ) , பரணி ( 4 பாதங்கள் ), கார்த்திகை (1 பாதம் மட்டும் ) , ஆக மொத்தம் - 9 பாதங்கள் இருக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் ,  மீதி 3 பாதங்கள்  - ரிஷபத்தில் இருக்கும். ரோஹிணி ( 4 பாதங்கள் ) , மிருக சீரிஷத்தில் 2 பாதங்கள் மட்டும் வரும்.
மிருக சீரிஷத்தில் வரும் மீதி 2 பாதங்கள் - அடுத்த ராசியான மிதுனத்தில் வரும். இதைப் போல - மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களையும் - வகைப் படுத்த வேண்டும்.. 




ராசிகள்       நட்சத்திரங்கள்

மேஷம்           - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்           - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் 
                              பாதம் முடிய
மிதுனம்         - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 
                             3-ஆம் பாதம் முடிய
கடகம்            - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்           - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி             - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் 
                             முடிய
துலாம்            - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் 
                              முடிய
விருச்சிகம்    - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு             - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்            - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் 
                            பாதம் முடிய
கும்பம்          - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் 
                            முடிய
மீனம்            - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய


நட்சத்திர அதிபதிகள் : 


மேலே கூறிய படி , 27 நட்சத்திரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக எழுதுங்கள்.
ஒவ்வொரு வரிசைக்கும், ஒவ்வொரு நவகிரகம் அதிபதியாக இருப்பார்.


ராசி அதிபதிகள் : 

ஒவ்வொரு ராசியும், ஒரு நவகிரகத்தின் வீடு. ஒரு சிலருக்கு இரண்டு வீடு. நிழல் கிரகம் எனப்படும் ராகு, கேதுக்கு சொந்த வீடு இல்லை.

இதைப் பற்றி அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

இப்போ நீங்க செய்ய வேண்டியது என்ன னு கேட்டால்...  மேலே சொன்ன படி , ஒன்பது கிரகம், 12 ராசி ,  27 நட்சத்திரம், எந்த நட்சத்திரத்துக்கு எந்த ராசி ? - இதை எல்லாம் , நல்லா மனசிலே உள்ள பதியுங்க.. அப்போ தான் , நமக்கு பின்னாலே வர்ற பாடங்கள் நல்லா புரியும் ..

நல்ல நினைவாற்றல் , எந்த ஒரு சோதிடருக்கும் முக்கியம். அதுக்காக பார்க்கிற ஜாதகம் எல்லாம் மனசிலே பதிய வைக்காதீங்க ... உங்க ஜாதகம் தவிர வேற எந்த ஜாதகமும் உங்களுக்கு ஞாபகம் இருக்கக் கூடாது.. 

சரியா..?  ??

No comments: