Wednesday 25 January 2017

ஜல்லிக்கட்டு வாக்குறுதியில் வெளுத்த அமைச்சர்களின் சாயம்!  என்ன சொல்கிறார்கள் சிவசேனாபதி, ஆதி?


கார்த்திகேய சிவசேனாபதி,பொன்.ராதாகிருஷ்ணன்

ல்லிக்கட்டு விவகாரத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது மத்திய அரசின் நிதி உதவியில் இயங்கும் விலங்குகள் நல வாரியம். ' ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என மத்திய அமைச்சர்கள் வாக்குறுதி அளித்ததாக சிவசேனாபதியும் ஹிப் ஹாப் ஆதியும் பேட்டியளித்தார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?' எனக் கொந்தளிக்கின்றன மாணவர் அமைப்புகள். 
' மத்திய அரசே ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கு; பீட்டாவை தடை செய்' என தமிழகம் முழுவதும் இளைஞர்களும் பொதுமக்களும் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தினர். மெரினாவில் நடந்த மாணவர் புரட்சியை ஏழே நாளில் முடிவுக்குக் கொண்டு வந்தது காவல்துறை. போராட்டத்தின் கடைசி நாட்களில், ஜல்லிக்கட்டு ஆர்வலர் சிவசேனாபதி, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்டவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் அளித்தனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக, அவர்கள் கொடுத்த விளக்கம் இதுதான். " ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக, டெல்லி சென்றோம். எங்களை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்று அழைத்துச் சென்றார். சுற்றுச்சூழல் அமைச்சரை சந்தித்தோம். அவரிடம், ' ஜல்லிக்கட்டுக்குத் தடை கேட்டு விலங்குகள் நல வாரியம் நீதிமன்றத்தை அணுகக் கூடாது. மிருகவதை தடுப்புச் சட்டத்தில் (பி.சி.ஏ) திருத்தம் கொண்டு வர வேண்டும்'  என வேண்டுகோள் வைத்தோம். அவரும், ' விலங்குகள் நல வாரியத்தில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்கிறேன். நீங்கள் சொல்வது போல் எதுவும் நடக்காது' என உறுதியளித்தார். அதன்பின்னர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, ' நாட்டு மாடு உள்பட 13 நாட்டு இனங்களை அழிப்பதில் பீட்டாவின் பங்கு குறித்து உள்துறை அமைச்சகம் விசாரிக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தோம். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டத்துக்கு ஆறு மாத காலம் அவகாசம் இருக்கிறது. அதற்குள் சட்டரீதியான அங்கீகாரம் பெறும் வேலைகள் நடக்கும்" என உறுதியளித்தனர். 
மெரினா போராட்டம்


" மத்திய அமைச்சர்களின் வாக்குறுதிகள் உண்மையா என்ற கேள்வி எழுகிறது. ஒரே வாரத்தில் தன்னுடைய முகத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது விலங்குகள் நல வாரியம் (AWBI). ' ஜல்லிக்கட்டு விவகாரத்தில் 2016-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெறுகிறோம்'  என மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதற்கு விலங்குகள் நல வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படியானால், ஆதியும் சிவசேனாபதியும் கூறிய தகவல்கள் பொய்யானதா?" எனக் கொந்தளிப்போடு பேசத் தொடங்கினார் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம், " போராட்டக் களத்தில் பீட்டா அமைப்புக்கு எதிராக மாணவர்களும் பொதுமக்களும் கொந்தளித்தனர். ஆனால், பீட்டாவை இயக்கும் முக்கிய அமைப்பே விலங்குகள் நல வாரியம்தான். மத்திய அரசின் நிதி உதவியால் இயங்கும் இந்த அமைப்பின் துணைத் தலைவர் ஈரோடு சேஷாயி பேப்பர் மில்லின் உரிமையாளர் நந்திதாவின் கணவர் சின்னி கிருஷ்ணா. இவர்கள் கொடுக்கும் தைரியத்தில்தான் பீட்டா இயங்கி வருகிறது. தொடக்கத்தில் இருந்தே ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கி வருகிறது விலங்குகள் நல வாரியம். 
இந்த அமைப்பில் மத்திய அரசின் அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கும் விலங்குகள் நல வாரியம் தொடர்ந்ததுதான். ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் வந்தபோதும், ' விலங்குகள் நல வாரியம் கோர்ட்டுக்குப் போகாதா?' என பத்திரிகையாளர்கள் சிவசேனாதிபதியிடம் கேட்டபோது, ' டெல்லியில் எங்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ' கடந்த மாதமே அவர்கள் சிலவற்றை மாற்றிக் கொண்டார்கள். நிச்சயம் உச்ச நீதிமன்றம் போக மாட்டார்கள்' என உறுதியளித்தார். போராட்டம் வெற்றி எனக் கொண்டாடலாம்' எனப் பேட்டி அளித்தனர். இன்று காலை, ' ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இரண்டு அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக' மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. ' 2016-ம் ஆண்டு அறிவிக்கையில் ஜல்லிக்கட்டுடன் வேறு சில அம்சங்களும் உள்ளன. இதில் உள்ள மற்ற அம்சங்கள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்' என்று விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. இதில் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு எதிராகவும் விலங்குகள் நல வாரியம் மனுத்தாக்கல் செய்துள்ளது. மத்திய அமைச்சர்களின் வாக்குறுதியை மீறி விலங்குகள் நல வாரியம் களமிறங்கியதா என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை. இதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சிவசேனாதிபதியும் ஆதியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?" என்றார் கொதிப்போடு. 
இதுகுறித்து, ஜல்லிக்கட்டு ஆர்வலர் சிவசேனாபதியிடம் பேசினோம். " உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் என்ன தெரிவித்துள்ளது என்பது பற்றித் தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் சென்றுள்ளது குறித்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினேன். ' சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தில் பேசிவிட்டு வருகிறேன்' எனச் சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விஷயங்களை அறிந்தபிறகு, இதுகுறித்து விரிவாக பேசுகிறேன்" என்றார். அடுத்து, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியைத் தொடர்பு கொண்டோம். ' கோவையில் இருக்கிறார். குடியரசு தினவிழா முடிந்த பிறகு சென்னை வருவார்' என்றார் அவருடைய உதவியாளர். 
மத்திய அரசின் இடைக்கால மனுவை வரும் 30-ம் தேதி விசாரிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம். அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நல வாரியம் உள்பட இதர அமைப்புகள் தொடர்ந்துள்ள வழக்கையும் நீதிமன்றம் விசாரிக்கிறது. அடுத்தகட்ட நீதிமன்றக் காட்சியை பதைபதைப்புடன் கவனித்து வருகிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். 

                                                      நன்றி
                                             ஆனந்த விகடன்    

No comments: