Thursday 26 January 2017

பித்ரு தோஷம் நீக்கும் தை அமாவாசை திருத்தலங்கள்!

திதிகளில் சிறப்பானதாக அமாவாசை திதி போற்றப்படுகிறது. அமாவாசை – சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் அடையும். ஆனால், அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால், சிறப்பான பலனைத் தரும். மேலும் மூதாதையர்களின் ஆசியும் கிடைக்கும்.
முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த திதி
அமாவாசை திதி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான பிரத்யேகமான திதி. மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
அமாவாசைதோறும் திதி கொடுக்க இயலாதவர்கள்கூட வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் திதி கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.
மூன்று அமாவாசைகள்!
வருடத்துக்கு இரண்டு அயனங்கள். ஆடி மாதம்  முதல் மார்கழி முடிய உள்ளது தட்சிணாயனம். இது சூரியனின் தென்திசை நோக்கிய பயணத்தைக் குறிக்கும். தை முதல் ஆனி வரை உள்ளது உத்தராயனம். இது சூரியனின் வடதிசை நோக்கிய பயணத்தைக் குறிக்கும். இந்த அயனங்களில் உத்தராயனத்தில் பகல் பொழுதும், தட்சிணாயனத்தில் இரவுப் பொழுதும் அதிகமாக இருக்கும்.
இவற்றில், தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மைப் பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர். கருடப் புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை நாளில் பித்ருக்கள் அனைவரும் பூமியில் ஒன்று சேருவதாக ஐதீகம். அன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடையச்செய்து, அவர்களுடைய ஆசிகளைப் பெற வேண்டும். தை அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்கள் பித்ருலோகத்துக்குத் திரும்பிச் செல்கின்றனர். அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பும்விதமாக தை அமாவாசையன்று நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
பொதுவாக, ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பதுதான் மிகச் சிறந்தது. இயலாதவர்கள் கண்டிப்பாக இந்த மூன்று அமாவாசைகளிலாவது தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், பித்ரு தோஷம் உண்டாகும்.
பித்ரு தோஷம் என்றால் என்ன?
முன்னோர்களின் வருத்தத்தாலும், சாபத்தாலும் ஏற்படுவது பித்ரு தோஷம். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு  அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம் என்பதை அறியலாம். மேலும் ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பதும் பித்ரு தோஷத்தைக் குறிக்கும். லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5-ம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5-ம் இடம், 9-ம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும். இதற்கு உரிய பரிகாரம் செய்வது மிக அவசியம்.
பித்ரு வழிபாட்டின் அவசியம்…
பூமியில் பிறந்தவர்கள் யாருமே பாவ புண்ணியத்திலிருந்து தப்ப முடியாது. பாவங்களில் மகா பாவமாக சொல்லப்படுவது, நம்மைப் பெற்றவர்களையும் நம்முடைய முன்னோர்களையும் அன்புடனும் பொறுப்புடனும் கவனிக்காமல் இருப்பதுதான். அவர்கள் உயிருடன் இருக்கும்போது கவனிக்காமல் இருப்பது மகா பாவம் என்றால், அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுத்து,  பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பது மகா மகா பாவம் ஆகும். 
இத்தகைய பாவங்களுக்கு ஆளாகும் அன்பர்கள், பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடைய சந்ததியினரும் பல வகையான துன்பங்களை அடைகின்றனர்.
எனவே, நம் முன்னோர்களுக்கு வருடாந்திர சிராத்தம் செய்வதுடன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
இயலாத நிலையில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளிலும் புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள நீர்நிலைகளில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது எப்படி?
அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், யமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதிய வேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களைச் சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்து, மறைந்த முன்னோர்களின் படத்தைச் சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்குப் பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளைப் படைக்க வேண்டும். தலை வாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.
செய்யக்கூடாதவை…
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும்தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும்.
காகத்துக்கு  சாதம் படைப்பது ஏன்?
அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை.
துயர் போக்கும் துளசி
பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.
முன்னோர் ஆராதனைக்கு ஏற்ற திருத்தலங்கள்!
மாதம்தோறும் வரும் அமாவாசையன்று நாம் நம்முடைய வீட்டிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அல்லது அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்கலாம். ஆனால், ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாள்களில் புண்ணிய தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால், அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதுடன், அவர்களுடைய ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!
ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவெண்காடு, திருவாரூர், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில், கருங்குளம், அகரம், பவானி கூடுதுறை, திருப்புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணபுரம் என்று பல தலங்கள் இருக்கின்றன. முன்னோர் ஆராதனைக்காக மட்டுமின்றி, தை அமாவாசையன்று விசேஷமாக தரிசிக்க வேண்டிய தலங்களும் உள்ளன. இப்படி, தை அமாவாசையில் முன்னோர் ஆராதனைக்கும், சிறப்பு வழிபாட்டுக்கும் உகந்த சில திருத்தலங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.
ராமேஸ்வரம்
இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் ஒன்று. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி, ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தங்களில் அக்னி தீர்த்தம், பித்ரு தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது. இந்த அக்னி தீர்த்தத்துக்குப் பெயர் வந்தது பற்றி ஒரு புராண வரலாறு சொல்லப்படுகிறது.
ராமபிரானின் உத்தரவின்படி சீதாபிராட்டி அக்னி பிரவேசம் செய்தபோது, பிராட்டியை தீண்டிய தோஷம் நீங்க அக்னி பகவான் இங்குள்ள கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றதால், இந்தத் தீர்த்தத்துக்கு அக்னி தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது, பிராட்டியின் கற்பின் வெப்பம் அக்னிபகவானைத் தகித்ததாகவும், அக்னி பகவான் இங்குள்ள கடலில் நீராடி வெம்மையைப் போக்கிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
ராமேஸ்வரம் தீவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியின் கிழக்குக் கடற்கரைப் பகுதியே அக்னி தீர்த்தமாக புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் தனுஷ்கோடி கடல் சீற்றத்துக்கு ஆளாகப்போவதை தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த ஸ்ரீஆதிசங்கரர், அந்த அக்னி தீர்த்தத்தை எடுத்து இப்போது ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படுகிறது.
இங்கே ஆடி, புரட்டாசி, தை அமாவாசை மட்டுமல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர் வழிபாடு செய்து, பித்ரு தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.
திலதர்ப்பணபுரி
திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம். இங்குதான் சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணபுரி. தற்போது திலதைப்பதி என்றும், செதலப்பதி என்றும் அழைக்கப்பெறுகிறது. இந்தத் தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக் காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த தலங்களில் ஒன்று.

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய எண்ணி இந்தத் தலத்துக்கு வந்த ராமபிரான், இங்கே பித்ரு தர்ப்பணம் செய்தார். ராமபிரான் எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால், இந்தத் தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்று பெயர் ஏற்பட்டது. ராமர் தர்ப்பணம் செய்தபோது பிடித்து வைத்த நான்கு பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. அந்த நான்கு லிங்கங்களையும் கருவறையின் பின்புறத்தில் தரிசிக்கலாம். இந்த லிங்கங்களுக்கு அருகில் வலக் காலை மண்டியிட்டு வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் கோலத்தில் ராமபிரானை தரிசிக்கலாம். இந்த வடிவத்தில் ராமபிரானை எங்கும் தரிசிக்க முடியாது. நாம் தர்ப்பணம் கொடுக்கும் முன்னோர்களுக்கு இறைவன் முக்தியைத் தருவதால், முக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இந்தத் தலத்தில் சூரியனும் சந்திரனும் அருகருகில் இருப்பதால், நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு.
காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதுபோல் இங்கே காவிரியின் துணை நதியான அரசலாறு, வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுகிறது.
திருப்புல்லாணி
ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தலம். இந்தத் தலத்தில் உள்ள ஆதிஜகந்நாத பெருமாள், தசரதருக்கு புத்திர பாக்கியம் அருளியதால், பெரிய பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இலங்கைக்கு பாலம் அமைக்க அருகில் இருந்த சேதுக்கரையில் முகாம் இட்டிருந்த ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து சயனக்கோலத்தில் திருக்காட்சி அருள்கிறார்.
ராமன் இங்கு தங்கியிருந்த காலத்தில், சீதாதேவி ராவணனால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். லட்சுமணனோ, ராமர் சயனம் கொள்ள ஆதிசேஷனாகவும் மாறிவிட்டபடியால், சீதை மற்றும் லட்சுமணரை இந்தக் கோயிலில் நாம் தரிசிக்க முடியாது.
இந்தத் தலத்தில் சேதுக்கரையில் உள்ள தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்!
திருச்செந்தூர்
அழகு முருகன் சூரனை சம்ஹாரம் செய்து வாகனமாகவும் கொடியாகவும் கொண்ட திருத்தலம் திருச்செந்தூர். முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரே தலம் திருச்செந்தூர்.  எனவே ஆடி, தை மற்றும் மஹாளய அமாவாசை புண்ணிய தினங்களில், இங்கு வந்து பித்ரு ஆராதனை செய்வது சிறப்பு என்பது ஐதீகம்.
காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளும் இந்தத் தலத்தில் தீர்த்தங்களாகித் திகழ்வதாகக்  கூறப்படுகிறது. இவற்றில் பலவும் மணல் மூடி தூர்ந்துவிட்டனவாம். தற்போது, சமுத்திரத்திலும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றிலும் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.
திருச்செந்தூரில் இருந்த 24 தீர்த்தங்களில் தென்புலத்தார் தீர்த்தமும் ஒன்று என்றும், அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி, பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுப்பதால், பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன், அவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவெண்காடு
சீர்காழி – பூம்புகார் சாலையில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ.தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது. நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் திருவெண்காடு. காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும் 6 சிவ க்ஷேத்திரங்களில் திருவெண்காடும் ஒன்று.
இந்தக் கோயிலில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன. சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில் ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின் அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும்.
பவானி கூடுதுறை
வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்… பவானி கூடுதுறை (ஈரோடு மாவட்டம்). இந்த கூடுதுறையில் கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீசங்கமேஸ்வரர்.
பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்திமிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம்.
இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு.
திருவிளமர்
திருவாரூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்தத் தலம் தற்போது விளமல் என்று அழைக்கப்படுகிறது. பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.
சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். இவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்தத் தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்துக்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்படுகிறது.
இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீப ஜோதியாக தெரிவதை காணலாம்.
அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி, பின்னர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, விளமல் பதஞ்சலி மனோகரரை வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.
திருக்கண்ணபுரம்
திருவாரூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம்.
பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றான இந்தத் தலத்தில் பெருமாள் ஸ்ரீநீலமேகப் பெருமாள் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள்.
ஒன்பது படித்துறைகளுடன் திகழும் இந்தத் தலத்தின் நித்ய புஷ்கரணியும் விசேஷமானது. இதன் படித்துறைகள் ஒன்பதும் நவகிரகங்களைக் குறிப்பதாக ஐதீகம். இந்த புஷ்கரணியில் நீராடிவிட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், முன்னோரின் ஆசிகள் கிட்டும் என்பது ஐதீகம்.
அப்படிச் செய்ய இயலாதவர்கள், நித்ய புஷ்கரணியில் எள்ளைத் தெளித்துப் பிரார்த்தித்தாலே போதும்; முன்னோரின் ஆசியும், பெருமாளின் அனுக்கிரகமும் கிடைக்கும்.
கருங்குளம்
திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது கருங்குளம். மார்த்தாண்டேஸ்வரன் என்ற மன்னர், தாமிரபரணிக் கரையில் இருந்த கருங்குளம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தார். தினமும் சிவபூஜை செய்ய விரும்பிய மன்னரின் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘தாமிரபரணிக் கரையில் ஆலயம் அமைத்து வழிபடுவாயாக’ என்று கூறினார். மன்னரும் அப்படியே ஆலயம் அமைத்து வழிபட்டார்.
இந்த நிலையில், பக்கத்து நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னர் சிங்கநாதன், தீராத வயிற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். எந்த வைத்தியராலும் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் மன்னரைச் சந்தித்த முனிவர் ஒருவர், ‘முன் ஜன்மத்தில் நீ யாரோ ஒரு மகரிஷியின் சாபத்துக்கு ஆளாகி, இன்றுவரை அதற்கான பலனை அனுபவித்து வருகிறாய். கருங்குளத்து ஈசனை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், சாபம் நீங்கப் பெறுவாய்’ என்றார். அதன்படி இங்கு வந்த மன்னர், சிவபெருமானை தரிசித்துப் பிரார்த்தித்தார். சாபம் நீங்கப் பெற்று, வயிற்றுவலியில் இருந்து மீண்டார் என்கிறது தல வரலாறு.
மலையடிவாரத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமார்த்தாண்டேஸ்வரர். அம்பாளின் திருநாமம் – ஸ்ரீகுலசேகரநாயகி. 
முன் ஜன்ம சாபம் நீக்கிய தலம் என்பதால், தை அமாவாசை நாளில் பித்ருக்கள் கடன் செய்வதற்கு உகந்த தலம் இது. தை அமாவாசை நாளில் இங்கு வந்து, தாமிரபரணியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால், பித்ரு தோஷங்களும் தீராத நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
அகரம்
தாமிரபரணி மஹாத்மியத்தில், வியாசரால் போற்றப்படும் இந்தத் தலத்தில்… காசி தலத்தைப் போலவே, ஸ்வாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். எனவே இதை, ‘தட்சிண காசி’ என்று ஞான நூல்கள் சிறப்பிக்கின்றன. இங்கே வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் தாமிரபரணியை, `தட்சிண கங்கை’ என்று போற்றுகின்றனர். இது, பித்ரு சாப விமோசன தீர்த்தமாகத் திகழ்கிறது.
ஆடி மற்றும் தை மாத அமாவாசைகளிலும், புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை திருநாளிலும் இங்கே வந்து, தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடன் ஸ்ரீகாசிவிஸ்வநாதருக்கு வில்வ மாலையும் ஸ்ரீவிசாலாட்சிக்கு செவ்வரளி மாலையும் சார்த்தி வழிபட வேண்டும். அத்துடன், பசுநெய் ஊற்றி 21 தீபங்கள் ஏற்றி வைத்தோ, தில ஹோமம் (எள்ளினால் செய்யப்படும் ஹோமம்) செய்தோ வழிபட, ஈசனின் அருளும் கிட்டும்; பித்ருக்களும் ஆசீர்வதிப்பர்!
இதுவரை பித்ரு தர்ப்பணம் செய்யத் தவறியவர்கள், அரிசி மற்றும் காய்கறிகளைத் தானம் அளித்து, (வசதி இருந்தால் கோ தானமும் செய்யலாம்) இறைவனை வழிபட, பித்ரு தோஷம் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்!
திருபுவனம்
தந்தையின் ஈமக்கடன்களைச் செய்து முடிப்பதற்காகக் காசிக்குச் செல்ல விரும்பினார் மைந்தன். ஆனால் பாவம்… வழிச் செலவுக்குக்கூட அவரிடம் காசில்லை. ஆனாலும், காசிக்குச் செல்வதில் உறுதியாக இருந்தார் அவர்.
அன்றிரவு அவரின் கனவில் தோன்றிய ஈசன், ‘’காசிக்குச் செல்ல முடியவில்லையே என்று வருந்தாதே! இங்கேயுள்ள ஆலயத்துக்கு வந்து, அருகில் ஓடும் நதியில் உன் தந்தையின் அஸ்தியைக் கரைத்து, பித்ரு காரியத்தை நிறைவேற்று. காசிக்குச் சென்று காரியம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இங்கேயே கிடைக்கும்’’ என அருளி மறைந்தார்.
கனவால் மெய்சிலிர்த்துக் கண் விழித்தவர், தென்னாடுடைய ஈசனின் பெருங்கருணையை எண்ணி மகிழ்ந்தார். விடிந்ததும், அருகில் உள்ள நதிக்கரைக்குச் சென்று, பித்ரு காரியங்களை நிறைவேற்றினார். இறுதியாக, அஸ்தியைக் கரைக்க நீரில் இறங்கினார். அப்போது, அஸ்தியானது (சாம்பல்) நறுமணம் கமழும் பூக்களாக மாறியது. இறைவனும் அருளை அள்ளி வழங்க, முன்னோரின் ஆசீர்வாதமும் அந்த மைந்தருக்குக் கிடைத்தது என்கிறது ஸ்தல புராணம்.
‘காசிக்கு நிகரான பலன் தரும்’ என்று இறைவனே குறிப்பிட்ட அந்தத் தலம் திருபுவனம்; நதி – வைகை. அஸ்தி சாம்பலைப் பூவாக மாற்றியதால், இங்குள்ள இறைவனுக்கு ஸ்ரீபூவனநாதர், ஸ்ரீபுஷ்பவனநாதர் எனத் திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்வர். அம்பாளின் திருப்பெயர்- ஸ்ரீசௌந்தரநாயகி.
இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது, வடகிழக்காக அமைந்திருக்கும் ஆலயம் இது. எனவே, அமாவாசை என்றில்லாமல் எல்லா நாளுமே இங்கே பித்ரு காரியம் செய்வதற்கு ஏற்ற நாளாகக் கருதுகின்றனர் பக்தர்கள்!
தீர்த்தாண்டதானம்
‘‘முன்னோர் ஆராதனை என்பது மிகவும் முக்கியமான வழிபாடு. முன்னோர் ஆராதனை செய்யச் செய்ய, வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்’’ என்று ராமபிரானுக்கு அகத்தியர் அருளினார். அதன்படி, ஓர் அமாவாசை நாளில் பித்ருக்களுக்கான கடனைச் செய்து, சிவபெருமானின் பேரருளைப் பெற்றார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தாண்டதானம். இங்கே ஈசனின் திருநாமம் – ஸ்ரீசர்வதீர்த்தேஸ்வரர்.
ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசைப் புனித நாளில், இந்தத் தலத்தில் திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும் என்பர்.
தொகுப்பு: எஸ்.கண்ணன்கோபாலன்

No comments: