Sunday 29 January 2017

"ஒரு விவசாயி தற்கொலை கூட நிகழவில்லை!" - மார்தட்டுவது எந்த மாநில முதல்வர்?

விவசாயி
தை வாசித்துக் கொண்டிருக்கும் நேரம் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் விவசாயி தற்கொலை செய்வதற்காக 'விஷம்' வாங்கிக் கொண்டிருக்கலாம், அல்லது தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். ஆம், தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டில் 144 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். முப்போகம் விளைந்த காவிரி டெல்டா மண்ணில் இன்று ஒருபோக சாகுபடிக்கே வழியில்லை. காலம் முழுவதும் உணவினை உற்பத்தி செய்து மக்களுக்கு கொடுத்த விவசாயியின் இறப்பினை அவ்வளவு எளிதில் கடந்துபோய்விட முடியாது. இதற்கெல்லாம் காரணம், விவசாயத்திற்கு என தனிக்கொள்கைகள் முறையாக வகுக்கப்படாததே. திரிபுரா மாநிலத்தில் கடந்த ஆண்டில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆம், கடந்த 15-ம் தேதி, கர்நாடகா மாநிலத்தில் 'ராஷ்டிரிய பசாவா கிருஷி புரஸ்கார்' விருது பெற்று பேசிய திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரான மாணிக் சர்க்கார், "விவசாயமும் அதனை சார்ந்த தொழில்களும் பல்வேறு படிகளில் வளர்ச்சி கண்டுள்ளன. இதனால் திரிபுரா மாநிலத்தில் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. விவசாயங்கள் வளர பலபடிகளில் முயற்சி எடுத்து வருகிறது. நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நிலமற்ற ஏழைகளுக்கும் தன் சொந்த நிலத்திலேயே விவசாயத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையும் நாங்கள் உருவாக்கி கொடுத்திருக்கிறோம். விவசாயிகளுக்கு உபகரணங்கள், விதைகள் மற்றும் இடுபொருட்கள் வாங்குவதற்கு அரசே நேரடியான கடன்களை கொடுத்து விவசாயம் வளர ஊக்குவிக்கிறது. அதேபோல உணவு உற்பத்தியும் இரண்டு மடங்காக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 144 விவசாயிகள் வறட்சியால் விஷம் குடித்தும், மாரடைப்பாலும் இறந்துள்ளனர். இதில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமை, காவிரியிலிருந்து வரவேண்டிய போதிய தண்ணீர் வராமல் போனதாலும், பயிர், உபகரணங்கள் ஆகியவற்றுக்கு வாங்கிய கடன்களை கட்டமுடியாமல் போனதாலும் பெரும்பாலும் மரணம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஜூன் 1 முதல் டிசம்பர் 31 வரை காவிரியிலிருந்து 179 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால், 2016-ம் ஆண்டு 66.5 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. பொதுவாக டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி அதிகமாக நடக்கும். இதில் குறுவை சாகுபடி 6 லட்சம் ஏக்கர் வரையிலும், சம்பா சாகுபடி 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடக்கும். குறுவை சாகுபடியை செழிக்க வைக்கும் வடகிழக்குப் பருவமழையும் இந்த ஆண்டு பொய்த்துப் போனதால் சம்பா சாகுபடியும் பொய்த்துப் போயிற்று. இதனை தொடர்ந்து தமிழக அரசு வறட்சி மாநிலமாக அறிவித்தது. டெல்டாவில் கருகுவது பயிர்கள் மட்டுமல்ல தென்னை மரங்களும் சேர்ந்து கருகுகின்றன. இவற்றுடன் விவசாயி வயிறும் சேர்ந்துதான் கருகுகிறது என்பதை அறிந்து விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசிடம் வறட்சி நிவாரணமாக 39,565 கோடி தமிழகத்திற்கு வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டுள்ளது. அதில் 1000 கோடி ரூபாய் உடனடியாக தர வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்திற்கு வந்து ஆய்வு நடத்திய மத்தியக் குழுவினர் தங்களது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்த பின்னரே தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் கிடைக்கும். தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் கிடைத்தாலும் விவசாயிக்கு முழுமையாக போய்ச்சேருமா என்பதில் சந்தேகம்தான். தமிழக அரசின் சார்பில் தேனியில் வறட்சியை பார்வையிட்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசன் "ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்" என சொல்லியிருக்கிறார். இதற்கு "ஒரு நிலத்தை பார்வையிட்டால் எல்லா நிலங்களையும் பார்வையிட்டதாக அர்த்தமாம். இந்த லட்சணத்தில் இருக்கிறது மாநில அரசு. இந்த ஆண்டு இன்னும் கோடைக்காலம் ஆரம்பிக்கவில்லை. இந்த நிலையில் கோடைமழை பெய்தால் மட்டுமே மானாவாரி நிலங்கள் பயன்பெறும். இதற்கெல்லாம் காரணம், முறையாக விவசாயத்தில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாதது மட்டுமே. ஏரி, குளங்கள் மற்றும் அணை ஆகியவற்றை தூர்வாராதது, நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையான தண்ணீருக்காக பக்கத்து மாநிலங்களிடம் வெறும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற செயல்களால்தான் இந்த விவசாயிகள் தற்கொலையானது அரங்கேறியுள்ளது. இதனிடையே கேரளா பவானி ஆற்றின் குறுக்கே தனது அணையை எழுப்ப ஆரம்பித்து விட்டது. தண்ணீருக்காக பக்கத்து மாநிலங்களிடம் கையேந்தும் நாம், உணவுக்கும் கையேந்தும் நிலை ஏற்படலாம். 
சமீபத்தில் தமிழ்நாடு புள்ளியியல் துறை அதிகாரி ஒருவரை சந்தித்தபோது அவர் சொன்ன செய்தி மேலும் அதிர்ச்சியளிக்கும் ரகம்.., "கிராமங்களில் உள்ள நிலங்களில் விவசாய நிலங்கள், கட்டடங்கள் மற்றும் தரிசு நிலங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை வி.ஏ.ஓ அலுவலகங்களில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக அப்டேட் செய்ய வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான வி.ஏ.ஓ அலுவலகங்களில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டால் முழுமையாக அப்டேட் செய்வதில்லை. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மொத்தம் இவ்வளவு டன் மகசூல் கிடைத்துள்ளது என்று வேளாண்மைத்துறை சொல்லும் தகவல்களில் உண்மை இல்லை. குறிப்பிட்ட மகசூல் வருடத்திற்கு இவ்வளவு வரவேண்டும் என இலக்கு வைக்கும் அரசின் அழுத்தம்தான் அனைத்துக்கும் காரணம்" என்றார். தமிழ்நாட்டினை விட திரிபுரா சிறிய மாநிலம்தான், ஆனால் விவசாயத்துக்காக வகுத்துள்ள கொள்கையும், விவசாயிகளின் மேல் அரசு கொண்டுள்ள நலனும்தான் விவசாயம் செழிக்க முக்கிய காரணம். இத்தகைய தெளிவான விவசாயக் கொள்கைகள் தமிழ்நாட்டில் என்பதே நிதர்சனமான உண்மை. ஆட்சிக்காகவும், பதவிக்காகவும் அரசியல்வாதிகள் போராடுகிறார்களே தவிர விவசாயம், இயற்கை வளம், பொருளாதாரக்கொள்கை மற்றும் மக்கள் நலன் என அனைத்து துறைகளும் தமிழ்நாட்டில் முழுமையாக செயல்படுவது கேள்விக்குறிதான். இந்தியாவில் முதல் இயற்கை விவசாய மாநிலமாக மாறிவிட்டது 'சிக்கிம்'. இங்கு இன்னும் ரசாயனங்களை உபயோகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த விவசாயிகள் தற்கொலை தற்போதுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திரிபுரா மாநிலத்தில் விவசாயத்துக்காக செய்த சிலவற்றை சரியாக செய்தாலே போதும், தமிழ்நாட்டில் விவசாயம் செழிப்பது நிச்சயம். 
                                                                                                    நன்றி
                                                                                                  விகடன்

No comments: