Friday 27 January 2017

சில மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்



சளியைக் குணமாக்கும் மூலிகைகள்
சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும்போது ஆடாதொடை இலை, தூதுவளை இலை, துளசி இலை, கண்டங்கத்திரி ஆகியவற்றில் கிடைக்கும் இலைகளில் கைப்பிடியளவு எடுத்து குடிநீர்ப் பொடியோடு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். உடல்வலி அதிகமாக இருந்தால், கைப்பிடியளவு குறுந்தொட்டி வேர் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் குடிநீர்ப் பொடியோடு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம்.
காய்ச்சலுடன் அதிகமாக உடல்வலி, தலைவலி இருந்தால் நொச்சி இலை, எலுமிச்சை இலை, மஞ்சள் பொடி, கல் உப்பு ஆகியவற்றைக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். இதை ‘வேதுபிடித்தல்’ என்பார்கள். உடல் முழுவதும் வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் வரை ஒரு மணி நேரத்துக்கொரு முறை தொடர்ந்து ஆவி பிடிக்க வேண்டும்.
கஷாயம் !
குடிநீர் அல்லது கஷாயம் என்பது சித்த மருத்துவ உள்மருந்து வடிவங்களில் ஒன்று. இது காபி, டீ போன்று கொதிக்க வைத்து இறக்குவது அல்ல. மருந்துப் பொருட்களுடன் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒன்றாக, எட்டில் ஒன்றாக, பதினாறில் ஒன்றாக, முப்பத்திரண்டில் ஒன்றாக வற்ற வைத்து வடிகட்டி எடுப்பதுதான் கஷாயம். இதை மூன்று மணிநேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என்பதால், தேவைக்குத்தான் தயாரிக்க வேண்டும். ஃப்ளாஸ்கில் சூடாக பராமரித்தால் 12 மணிநேரம் வரை வைத்திருக்கலாம். கஷாயம் தயாரிக்க மண்பானையும், விறகு அடுப்பும் சிறந்தவை. கஷாயத்துக்கான மருந்துப் பொடி, மிகவும் நுண்ணியதாக இருக்கக்கூடாது.
அன்னப்பால் கஞ்சி (புனர்பாகம்)
50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இது அனைவருக்கும் தெரிந்த மருந்து உணவுதான். சிறிது அரிசியுடன், இரண்டு மிளகு, ஒரு ஏலக்காய் ஆகியவற்றை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். அதனுடன் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கினால் அன்னப்பால் கஞ்சி தயார். இதுவே சித்த மருத்துவ நூல்களில் ‘புனர்பாகம்’ என்று அழைக்கப்படுகிறது. இதை இளஞ்சூட்டில் ஒரு மணி நேரத்துக்கொரு முறை குடித்து வந்தால் அயற்சி, சோர்வு, மயக்கம் முதலியன உடனே நீங்கும்.
நன்றி
பசுமை விகடன்

No comments: