Tuesday 24 January 2017

மேக்அப் கவனம்!

டாய்லெட் சீட்டைவிட அதிக அளவு கிருமிகள் மேக்அப் பையில் இருக்கிறது. அழகுசாதனப் பொருட்கள் வைத்திருக்கும் பை, இடம் எல்லாம் கூட பாக்டீரியா உற்பத்தியாகக் கூடிய மிகப்பெரிய களமாக இருக்கின்றன. ஆனால், பயப்படத் தேவையில்லை. வாங்கி பல நாட்கள் ஆன அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பழயது வேண்டாம்!
பணத்தைக் காட்டிலும், சருமம் மிக முக்கியம். அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டோம் என்பதற்காக கண்ட கிரீம்களையும் அழகுசாதனப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. வாங்கி பல நாள் ஆன, மிகவும் உலர்ந்துபோய், ரசாயன நாற்றம் சற்று அதிகமாக இருக்கும் அல்லது நிறம் மாறிய அழகுசாதனப் பொருட்களைத் தூக்கி எறிவது நல்லது. 

எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்?
பவுண்டேஷன், கிளென்சர், பவுடர், ஐ ஷேடோ, மாய்ஸ்ச்சரைசர், சன்ஸ்கிரீன் உள்ளிட்டவற்றை இரண்டு ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். லிப் பென்சில், ஐ பென்சில் உள்ளிட்டவற்றை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுக்குள் பயன்படுத்த வேண்டும். மஸ்கரா, கண் அருகில் போடக்கூடிய கிரீம் உள்ளிட்டவற்றை ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
பகிர்தல் வேண்டாம்!
அனைத்திலும் முக்கியமானது, உங்கள் அழகுசாதனப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சிலர் லிப்ஸ் பிரஷ்ஷை கண் பகுதிக்கு பயன்படுத்துவது உண்டு. இப்படி, மாற்றி மாற்றி பயன்படுத்தக் கூடிய பொருட்களும் அல்ல, இடமும் அல்ல என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.

ரசாயனம் அபாயம்!
ஆய்வகத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிக அளவில், ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் நம்முடைய அழகுசாதனப் பொருட்களில் இருக்கின்றன. எனவே, இந்தப் பொருட்களை தேர்வு செய்யும்போது அதிக கவனம் தேவை. முடிந்தவரை ஆர்கானிக் அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துவது நல்லது.

No comments: