Monday 23 January 2017

ஆஞ்சியோபிளாஸ்ட் : மாரடைப்பை எவ்வாறு தடுக்கிறது…,

ஆஞ்சியோபிளாஸ்ட் : மாரடைப்பை எவ்வாறு தடுக்கிறது…,
பொதுவாக ஒன்று அல்லது இரண்டு இரத்தக் குழாய்கள் அடைத்துக் கொண்டிருந்தால் ‘பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட்’ சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
மூன்று இரத்தக் குழாய்களிலும் அடைப்பிருக்கிறது என்றால், ‘பைபாஸ் அறுவை சிகிச்சை’ மேற்கொள்ளப்படும். பைபாஸ் செய்ய முடியாதவர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டிதான் கைகொடுக்கும்.
‘ஸ்டென்ட்’ என்பது உலோகத்தால் ஆன ஒரு சுருள் வளைகுழல். இது வளையக் கூடியது; விரியக் கூடியது. இதன் நீளம் அதிகபட்சமாக 12 மி.மீ. உள்விட்டம் 3 மி.மீ.
பார்ப்பதற்கு குமிழ்முனைப் பேனாவில் இருக்கும் ‘ஸ்பிரிங்’ மாதிரி இருக்கும். இதைத் தயாரிக்கும் நிறுவனத்தைப் பொறுத்து உலோகக் கலவை அமையும்.
பிளாட்டினமும் குரோமியமும் கலந்த ‘ஸ்டென்ட்’ பிரபலம். இதுதான் கொரோனரி இரத்தக் குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, மாரடைப்பிலிருந்து நோயாளியை விடுவிக்கிறது.
எப்படி ஒரு செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்துவதற்கு தேவைப்படுகிறதோ அப்படியே அடைப்புள்ள இரத்தக் குழாய்க்கு ஸ்டென்ட்டைக் கொண்டு செல்ல ‘பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி’ தேவைப்படுகிறது.
ஆஞ்சியோகிராம் செய்ய உதவும் வளைகுழாய் முனையில் சிறிய பலூன் இருக்கும்.
அத்தோடு, இந்த ஸ்டென்ட்டையும் இணைத்து, தொடை கொரோனரி இரத்தக் குழாய்க்குக் கொண்டுசென்று, அடைப்புள்ள இடத்தை அடைந்ததும், பலூனை விரிப்பார்கள்.
பலூனோடு சேர்ந்து ஸ்டென்டும் விரியும். இதனால் கொழுப்பு நசுக்கப்பட்டு, அடைப்பு விலகிக் கொள்ளும்.
பின்னர் பலூனைச் சுருங்க வைத்து வெளியில் எடுத்து விடுவார்கள். ஸ்டென்ட் மட்டும் தாங்கும் போல்ட் மாதிரி அங்கேயே நிலையாக நிற்கும். ஸ்டென்ட் வழியாக மீண்டும் இரத்தம் பாயும். இது மீண்டும் மாரடைப்பு வராமல் தடுக்கும்.
ஆஞ்சியோகிராம் செய்யும் போதே ஸ்டென்ட்டையும் பொருத்தி விட்டால், சிகிச்சை ஒரு நாளில் முடிந்து விடும். செலவும் குறையும்.
பின்னொரு நாளில் இதைப் பொருத்த வேண்டுமானால், மீண்டும் இதே முறையில்தான் பொருத்த வேண்டும்.
இரட்டிப்புச் செலவு. அதற்குள் நோயாளியின் உயிருக்கு ஆபத்தும் நேரலாம். இதைத் தவிர்க்கத்தான் மருத்துவர்கள் ஸ்டென்ட்டைப் பொருத்துவதற்கு உடனடியாகச் சம்மதம் கேட்பார்கள்.
இதற்கு ‘டிரக் எலூட்டட் ஸ்டென்ட்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. சாதாரண ஸ்டென்ட்டைப் பொருத்திக் கொண்டவர்களில் 10 -இல் ஒருவருக்கு மீண்டும் அதே இடத்தில் 5, 10 ஆண்டுகளில் இரத்த உறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அதைத் தவிர்க்க, அவர்கள் வாழ்நாள் முழுவதும் அஸ்பிரின் மற்றும் சில மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அப்படியும் அவர்களுக்கு ஸ்டென்ட் உள்ள இடத்தில் அடைப்பு ஏற்பட்டு மீண்டும் மாரடைப்பு வந்து விடுகிறது.
இதைத் தவிர்க்கும் ஏற்பாடுதான் மெடிகேட்டட் ஸ்டென்ட். இதில் இரத்த உறைவைத் தடுக்கும் மருந்து சேர்க்கப்பட்டிருக்கும். சிறிது சிறிதாக இது இரத்தத்தில் கரைந்து இரத்த உறைவைத் தடுப்பதால், மீண்டும் மாரடைப்பு வருகிற அபாயம் குறை யும்.

No comments: