Tuesday 24 January 2017

7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவால் குறிக்கப்படும் 7-ம் எண்ணின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள்.
மனதுக்கு எட்டாத பொருள்களையும், தெய்விகம் பொருந்தியவற்றையும் நம் முன்னோர் ஏழு பிரிவுகளாகப் பகுத்தனர். வாரநாட்களை ஏழு நாட்களாகவும், இசையை ஏழு ஸ்வரங்களாகவும், ரிஷிகள் சப்த ரிஷிகளாகவும், சமுத்திரங்களை சப்த சாகரங்கள் என்றும், கன்னிகைகளை சப்த கன்னியர் என்றும் உலகங்களை சப்த லோகங்கள் என்றும் பகுத்துள்ளனர். இதிலிருந்து எண் 7-ன் சிறப்பை அறியலாம்.
இந்த எண்ணின் அதிபதி ஞானகாரகனாகிய கேது என்பதால், இந்த எண்ணைச் சேர்ந்த அன்பர்களுக்கு இயல்பிலேயே தெய்வ பக்தியும், ஆன்மிகத்தில் நாட்டமும் இருக்கும். ஆனாலும், இவர்கள் மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால் தவறான சேர்க்கையால் பெயரைக் கெடுத்துக்கொள்ளவும்கூடும்.
7-ம் தேதி பிறந்தவர்கள்:  சாந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருப்பர். புத்தி சாதுர்யம் மிக்கவர்களாகத் திகழ்வார்கள். தெய்வ வழிபாட்டில் முழுமையான நம்பிக்கையுடன் ஈடுபடுவர். குழந்தை உள்ளம் கொண்ட இவர்களின் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் இருந்தபடி இருக்கும்.
16-ம் தேதி பிறந்தவர்கள்: 
7, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை விடவும் விசேஷமான மனோசக்தி உடையவர். இவர்களை சரியானபடி வழிநடத்தினால், இவர்களுடைய அபூர்வ சாமர்த்தியங்களை பிரகாசிக்கச் செய்யலாம். இந்தத் தேதியில் பிறந்தவர்களில் பலர் குழந்தைப் பருவத்திலேயே வித்வான்களாகவும் கவிஞர்களாகவும் கலைஞர்களாகவும் பிரபலம் அடைந்திருக்கின்றனர். 
25-ம் தேதி பிறந்தவர்கள்: 
மதப்பற்று அதிகம் கொண்டவர்கள். தாங்கள் கடைப்பிடிக்கும் வழிபாடுதான் சரியானது என்று பிடிவாதமாக இருப்பார்கள். இவரைப் பலரும் பின்பற்றுவார்கள். இந்தத் தேதியில் பிறந்தவர்கள் சபைத் தலைவர்களாகவும், நீதிபதிகளாகவும் திகழ்வார்கள்; மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். இவர்களுக்கும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கவே செய்யும்.
பொதுவாக இந்த எண்ணில் பிறந்தவர்களின் மண வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் மனச் சஞ்சலம் இருக்கவே செய்யும். மேலும் இந்தத் தேதியில் திருமணம் செய்வதுகூட, மண வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தவே செய்யும். 
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 
முக்கியமான காரியங்களை 2, 11, 20, 29 தேதிகளிலேயே செய்துவர வெற்றிகள் கிடைக்கும்.
தவிர்க்கவேண்டிய தேதிகள்: 8, 17, 26 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டம் இல்லாத தேதிகள் ஆகும். தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டி 8, 7 ஆகிய எண்கள் வரும் தேதிகளும் இவர்களுக்கு ஆகாத தினங்கள் ஆகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: இந்த எண் காரர்களுக்கு வெள்ளையே அதிர்ஷ்டமான நிறமாகும். இருந்தாலும் வெளிர் மஞ்சள், வெளிர் பச்சை போன்ற நிறங்களையும் பயன்படுத்தலாம். அடர்த்தியான நிறங்களை தவிர்க்கவேண்டும்.
குறிப்பாக சிவப்பு மற்றும் கறுப்பு ஆகிய நிறங்கள் இவர்களுக்கு ஆகாது.
அதிர்ஷ்ட ரத்தினம்:    வைடூரியம்
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

வழிபடவேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி

(தொடரும்......)

No comments: