Saturday 28 January 2017

தமிழகம்

தொலைந்துபோன நமது பழைய பாரம்பர்யங்கள்!

பாரம்பர்யங்கள்

ல்லிக்கட்டுக்காக இன்று தமிழகமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தொலைக்க இருந்த ஒரு அடையாளம் திரும்பவும் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்களும் மஞ்சுவிரட்டில் காயம்படுகிறார்கள் என்ற சிக்கல்கள் இருந்தாலும் பாதுகாப்பாக பாரம்பர்யங்கள் தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் குரலாக உள்ளது. இன்று தொலைக்க இருந்த பாரம்பர்யம் போல் நாம் தொலைத்த, மறந்த சிலவற்றை ஞாபகப்படு்த்திப் பார்ப்பாம்.

பாரம்பரிய விளையாட்டு"டேய் என் வண்டிய இடிக்காத, பிச்சுபுடுவேன். இங்க பாரு அது தான் உன் ரோடு. இது என்னோட ரோடு. நீ எதுக்குடா இங்க வர?" எத்தனை பேருக்கு இந்த நொங்கு வண்டு ஓட்டிய ஞாபகம் உண்டு? இன்றும் கிராமத்தில் எங்கேயோ ஒரு நொங்கு வண்டி ஓடிக்கொண்டு தான் இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. இந்த ஒரு வண்டியை மட்டும் நாம் தொலைக்கவில்லை, அதுபோல எத்தனையோ பாரம்பர்ய விஷயங்களை நாம் தொலைத்து இருக்கிறோம்.
  "ஏய் காமாட்சி, அந்த மூணாவது வீட்ல இருக்கால்ல அட, அந்த அம்மணி தான்..." எனத் தொடங்கும் பாட்டிகளின் பேச்சும், "பாப்போமா, யாரு ஜெயிக்கிறான்னு..." என சிறுசுகளின் பாண்டி விளையாட்டும் ," யக்கா கொஞ்சம் தண்ணி தாஞ்சேன்..." என இளைப்பாற்றும் இடமுமாக அனைத்துக்கும் சொந்தம் கொண்டாடியது திண்ணை. ஓலைக்குடிசையின் ஒட்டுத்திண்ணை தொடங்கி மச்சுவீட்டின் வெளித்திண்ணை வரை வீடுகளில் நிறைந்திருந்த திண்ணை இன்று வண்டிகள் நிறுத்தும் இடமாக மாறி தொலைந்தே போய்விட்டது. இன்று இந்த திண்ணைகளை வைத்து வீடுகள் கட்டுவது வெகுவாக குறைந்துவிட்டது.            
  "அதோ அது தான். அந்த மூணாவது கிளைல இருக்குல்ல அந்த மாங்கா. எங்கே முடிஞ்சா அடிச்சுக் காட்டு பார்ப்போம்" என இழுத்து அடித்து குறி தவறும்போது, "சே..."  என கோபப்பட்டு தூக்கி எறிந்தும், ஒருவேளை கைக்கு கிடைத்து விட்டால் "பாத்தியா..." என தண்டோரா போட்டு கத்தும் அளவுக்கு மகிழ்ச்சியை தர வல்லது, உண்டிவில். இன்று எத்தனை குழந்தைகள் இதை பார்க்கிறார்கள்? காலத்தின் சக்கரத்தில் சிக்கி காணாமலே போய் இன்று நாம் கிட்டதட்ட உண்டிவில்லை மறந்தே போய்விட்டோம்.
பாரம்பரிய விளையாட்டு
ஒரு கால் நீட்டியும், ஒரு கால் மடித்தும் உட்கார்ந்து கொண்டு ஒரு கையில் முழுபருப்பை போட்டுக் கொண்டும் இன்னொரு கையில் மரக்கைப்பிடியை லாவகமாக சுற்றிக் கொண்டும் பாட்டிகள் பேசுவதை பார்ப்பது அவ்வளவு அலாதியாக இருக்கும். 'ஆரியக்கல்'. 'திருகை' என்பது அப்போதைய வழக்குப் பெயர். எத்தனை பேருக்கு இந்த பெயர் கூட இப்போது நினைவில் இருக்கும் என்பது தெரியவில்லை. முழு பருப்பை இரண்டாக மூன்றாக உடைக்க பயன்படும் கல் இது. இன்று எங்கோ வீடுகளில் அங்கும் இங்குமாக பயன்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
பாரம்பரிய விளையாட்டு
  "நல்லா இள ஆட்டுக் கறி குழம்பு பிசைஞ்ச சாதத்த ஒரு வெட்டு வெட்டிட்டு, அந்த வேப்பமர நிழலுல, கயித்து கட்டில்ல படுத்தா எங்கேயுமே கிடைக்காத சுகமான தூக்கம்" ஆம், கயிற்றுக் கட்டில். இன்று குஷன் பெட்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் காணாமல் போய்விட்ட கயிற்று கட்டில். கயிற்று கட்டில்களை பின்னுதலே பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். அவ்வளவு நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கும், "படுத்தா கல்லு மாறி இருக்கு, தூக்கமே வரமாட்டேங்குது" என குற்றஞ்சாட்ட முடியாத கயிற்றுக்கட்டில்கள் இன்று பின்னப்படுவதே இல்லை.
பாரம்பரிய விளையாட்டு
  " அஸ்...அஸ்" என மூச்சு வாங்கியபடியே ராகியையும், கம்பையும், சோளத்தையும் குத்திய ஆட்டுரலும், உலக்கையும் இன்று ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில் மட்டுமே காண முடிகிறது. ஆட்டுரலில் உலக்கையால் குத்தி குத்தி சமன் படுத்துவது ஒரு தெளிந்த நடனம் போலிருக்கும். வீட்டு பெண்கள் அதை அவ்வளவு நளினமாக செய்வர். ராகி, கம்பை சமன் செய்வதற்கு மட்டுமல்லாமல் அது பெண்களுக்கு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகக்கூட இருந்தது.
இவையெல்லாம மட்டுமில்லாமல் இன்னும் இன்னும் எத்தனையோ பழமைகளை நாம் மறந்தும், தொலைத்தும் இருக்கிறோம். மிச்சம் இருக்கும் சிலவற்றையும் தொலைக்க இருக்கிறோம். அரிக்கேன் விளக்குகள், சாய்வு மர நாற்காலிகள், மண் அடுப்புகள், பாண்டி, பல்லாங்குழி விளையாட்டு ஆகியவற்றை கிட்டத்தட்ட தொலைத்தே விட்டோம். அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆகியவை விளிம்பு நிலையில் இருக்கின்றன. கொஞ்சம் சிரத்தை எடுத்து இவற்றையேனும் காத்தால், படங்களாக மட்டுமின்றி பொருட்களாகவும் இனியேனும் காண முடியும். இன்று மக்கள் அனைவைரும் துவண்டு விட்டனர். இந்த அவசர உலக போக்கும், சுரத்தே இல்லாத வாழ்வும் மறுபடியும் அவர்களை பழமைகளையும், பாரம்பர்யத்தையைும் நோக்கி திருப்பியிருக்கிறது. அந்த வெளிப்பாடுதான் இந்த ஜல்லிக்கட்டு எழுச்சிக்கும் காரணமாக இருக்கலாம். தெளிவான சிந்தனையைும், தீர்க்கமான பார்வையும் கொண்டால் மட்டுமே பழமையான பாரம்பர்யங்களை மீட்டெடுக்க முடியும். 
                                                                                           நன்றி
                                                                                         விகடன்

No comments: