Saturday 28 January 2017

வாய் திறந்து பேசலாம்…!

பேசும்போது வாயில் இருந்து ஏற்படும் துர்நாற்றம், பேசும் விஷயத்தை மறந்து பேசுபவரை மதிப்பிழக்க வைக்கிறது. வாய்ச் சொற்களுக்கு எந்த பலனும் இல்லாது, துர்நாற்றம் மட்டுமே மற்றவர்கள் மனதில் நிற்கும் இந்தத் துயரம் நீங்குவதற்கு, உங்களுக்கான டிப்ஸ் இதோ…
வாய் துர்நாற்றம் ஏன்?
* வயிற்றுக்கோளாறுகள் ஏற்படும்போது, வயிற்றில் உள்ள அமிலங்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அசிடிட்டி, அல்சர், கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கக்கூடும்.
* உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதும், நாக்கில் எச்சில் சுரக்காமல் இருக்கும்போதும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
* தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பி, சுரத்தலில் தடைகள் ஏற்பட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
வாய் துர்நாற்றம் நீங்க…
* மருத்துவர் பரிந்துரையுடன் மவுத் வாஷ் பயன்படுத்தி, துர்நாற்றத்தைப் போக்கலாம்.
*  பழைய முறையான வேப்பங்குச்சியை வைத்து பல்துலக்கலாம். பல்துலக்கும்போது, வெளிவரும் வேப்பங்குச்சியின் சாறு, ஈறுகளுக்கு நல்லது.
* தினசரி காலையில் வெதுவெதுப்பான நீருடன் உப்பு சேர்த்து, வாய் கொப்பளிக்க, வாய் துர்நாற்றம் நீங்கும்.
* பல்சொத்தை உள்ள சமயங்களில் மட்டும் கிராம்பை மென்று வாயில் சிறிது நேரம் வைத்திருக்கலாம்.
* அல்சர் உள்ளவர்கள், நான்கு டம்ளர் நீரைத் தொடர்ந்து பருகலாம். வயிற்றில் நீர் இருப்பதால், அமிலங்களின் தாக்கம் குறையும்.
தவிர்க்க… தடுக்க!
* காலை, இரவு என இருவேளைகளிலும் பல் துலக்க வேண்டும்.
* பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை நீக்க, நூலை வைத்து சுத்தப்படுத்தும் ஃப்ளாசிங் (Flossing) முறையைப் பின்பற்றலாம்.
* புளிப்பு மற்றும் கார உணவுப் பொருட்களை அதிக நேரம் வாயில் வைத்திருக்க வேண்டாம்.
* காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* உணவு உண்ட பிறகு,  பல்துலக்க வேண்டும்.
* வாய் துர்நாற்றம் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

No comments: