Friday 27 January 2017

நம்புவீர்களா... இந்த 10 வயது விவசாயிகள் செய்த வேலையை?!

விவசாயம்

“இளமையில் கல்வி, பசுமரத்தாணி”, என்று ஒரு பழமொழி உண்டு. எதனைக் கற்க வேண்டும் என்றாலும் அதனை சிறு வயதிலேயே கற்று தேற வேண்டும் என்பதே அதன் பொருள். இதனை முன் வைத்து, விவசாயம் பற்றிய தகவல்களும் நுணுக்கங்களும் அடுத்த தலைமுறைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் “Grow Your Own Veggies” என்ற அமைப்பும் சென்னை , சோழிங்கநல்லூரில் உள்ள காரனை எச்.எல்.சி. பள்ளியும் சேர்ந்து ஒரு மாதிரி பண்ணையை உருவாக்கி, அதில் அனைத்துக் களப்பணிகளையும் மாணவர்களே செய்யும் அளவுக்குப் பயிற்சியும் அளித்து வருகின்றன. இதனைப் பற்றி Grow Your Own Veggies ஒருங்கிணைப்பாளர் அல்லாடி மகாதேவனிடம் பேசினேன். 
“நான் 1995-ம் ஆண்டு முதல் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நிலம் இருந்ததால் என்னால் சுலபமாக விவசாயம் செய்ய முடிந்தது. இயற்கையாக விளைவிக்கப்படும் பொருட்கள் என்பதால் எங்கள் பண்ணையின் காய்கறிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதனை அடுத்து மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே விளைய வைத்துக்கொள்ளும் வகையில் பயிற்சி தரக்கூடிய ஒரு குருப்பை முகநூலில் உருவாக்கினேன். அது தான் ‘Grow Your Own Veggies’.
எங்களின் முகநூல் பக்கம் விரிவடைந்து இன்று 62000 பேர் அதில் சேர்ந்துள்ளனர். இதனையடுத்து இந்த விழிப்பு உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல நினைத்தோம். இன்றைய தலைமுறை பிள்ளைகள் முன்னர் இருந்தவர்கள் போல செடி  கொடி மரங்களுடன் பாசத்துடன் இருக்கின்றனரா என்பது கேள்விக் குறி தான். விஞ்ஞான வளர்ச்சி அடைந்த இந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு போனில் விளையாடவே நேரம் சரியாக உள்ளது.
அவ்வாறு அல்லாமல் அவர்களின் மூளையைக் களப்பணியில் செலுத்தினால் அவர்களது சிந்தனை ஓட்டம் சீராகி அவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை அது தரும். இயற்கையோடு சேர்ந்து வாழும் மகிழ்ச்சி அவர்களை சென்றடையும். என் மகள் பயிலும் பள்ளி இது. பள்ளியின் நிர்வாகத்துடன் இதனைப் பற்றி பேசிய போது என் யோசனைக்கு அவர்கள் செவி சாய்த்தனர். ‘ஷாஷ்வதம்’ என்று பெயரிட்டு இந்த நிகழ்வை தொடங்கினோம். விவசாயத்தை எவ்வாறு கல்வி முறையில் சேர்ப்பது என்று ஆலோசனை செய்தோம்.
விவசாயம் என்று கூறும்பொழுது, விதைகள், காய்களை பற்றி படிக்க வேண்டியிருக்கும். அது தாவரவியல். உரங்களைப் பற்றி படித்தால் அது வேதியியல். எந்த விதைக்கு எவ்வளவு ஆழம் தோண்ட வேண்டும், எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்று அளவிடும் முறை கணக்கு. இவ்வாறு விவசாயத்தின் பல்வேறு பிரிவுகளை பாடங்களுடன் சேர்த்துள்ளோம்”
இதனைத் தொடர்ந்து மூன்று முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆர்வத்துடன் என்னை தங்களின் பண்ணையைப் பார்க்க அழைத்துச் சென்றனர். அவர்களின் கண்ணில், எதையோ சாதித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி. அதனை எனக்கு காண்பிக்கப் போகிறோம் என்ற ஒரு உற்சாகம். என்னை தங்கள் பண்ணையில் ஒரு டூருக்கு அழைத்துச் சென்றனர்.
Grow Your Own Veggies
“அண்ணா, அண்ணா இது தான் எங்க ஃபார்ம். எப்பவும் ஃபார்மர்ஸ் எல்லாம் அவங்களோட ஃபார்முக்கு வெளில இருந்து தான் தண்ணி கொண்டு வருவாங்க. ஆனா நாங்க எங்க ஃபார்முக்கு நடுல ஒரு பாண்ட் (குட்டை) பண்ணி இருக்கோம். மகாதேவன் சார் சொன்ன மாதிரி பாண்ட் சுத்தி சன் (சூரியன்) டிசைன்ல கிராப்ஸ் வளத்துருக்கோம். அதாவது எந்த செடிக்குலாம் நிறைய தண்ணி வேணுமோ அதெல்லாம் பாண்ட் பக்கத்துல. இந்த செடிலாம் மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி அறுவடை செய்வோம். கொஞ்சம் தள்ளிப் போனா ஆறு மாசத்துல அறுவடை பண்ற கிராப்ஸ். அப்பறம் ஒரு வருஷம், ரெண்டு வருஷம் அந்த மாதிரி. இதுனால என்ன ஆகும்னா தண்ணியும் சத்து பொருட்களும் தேவையான அளவுக்கு எல்லா கிராப்ஸுக்கும் கிடைக்கும். மண்ணும் நல்ல ஸ்ட்ராங் ஆகும். இது தவிர இயற்கை மேநியூர் (உரம்) செய்ய ஒரு குழி தோண்டி இருக்கோம். அது மட்டும் இல்லாம எங்க ஃபார்மோட ஸ்பெஷாலிட்டி என்னனா நாங்க ஃபுல்லா இயற்கையான பொருட்கள் மட்டும் தான் யூஸ் பண்ணுவோம்”

இவர்கள் பண்ணையின் புகைப்படங்களை காண க்ளிக் செய்யவும்

அழகான முறையில் எனக்கு தங்களின் பண்ணையைக் காண்பித்த குழந்தைகளின் முகத்தில் குறையாத ஆனந்தம். குழலென்றும், யாழென்றும் கூறுவார் மழலைச் சொல் கேளாதார் என்று கூறுவார்கள். உண்மை தான் என உணர்ந்தேன். நகரத்தை விட்டு சற்று தள்ளி இருக்கும் அந்த பள்ளியில் மழலையுடன் மழலையாக சேர்ந்து விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசைக்கிடையே, நகரம் என்னை வேலை நிமித்தமாக அழைக்க, நிறைந்த மனதுடனும், தீராத ஆசையுடனும் திரும்பினேன்.
                                                          நன்றி
                                                        விகடன்

No comments: