Friday 27 January 2017

தமிழகம்

மெடிக்ளெய்ம்… தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?

டந்த பத்து ஆண்டுகளில், சந்தையில் கிடைக்கப் பெறும் காப்பீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. எந்தவொரு நபருக்கும் ரிஸ்க் இல்லாத வாழ்க்கையை வாழும் எண்ணமே இருக்கும். தனது குடும்பத்துக்கான முழுமையான காப்பீட்டுத் திட்டத்தைப் பெற அனைவரும் விரும்புவார்கள் என்றாலும், அதிகப்படியான தேர்வுகள் கிடைக்கப் பெறுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கிறது. எனவே, திட்டங்கள், பாலிசிகள், உத்தரவாதங்கள், பிரீமியம்கள் என பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொண்டு சரியான முடிவினை மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
கவர்ச்சிகரமான பாலிசிகள் உஷார்!

குறைவான பிரீமியம் கொண்ட பாலிசி கவர்ச்சிகரமானதாக இருப்பினும், சில முக்கிய செலவுகள் மற்றும் பொதுவான கிரிட்டிக்கல் இல்னெஸ்களை இது கவர் செய்யாமல் இருக்கலாம்.
எனினும், பாலிசி எடுக்கும்முன் அதுபற்றி நன்கு ஆய்வுசெய்வது மற்றும் சிறப்பான ஆலோசனைகளைப் பெறுவது மிக முக்கியம். இந்தியாவில் மிகக் குறைவானவர்கள் காப்பீடு எடுக்கக் காரணம், அது தொடர்பாக போதிய அறிவு இல்லாதது மற்றும் தவறான நம்பிக்கைகளே.

 மருத்துவச் செலவு!
முன்னேறிய நாடுகளில் மருத்துவக் காப்பீடுகளில் முதலீடு மேற்கொள்வது ஒரு வழக்கமாக இருப்பினும், இந்தியாவில் அது இன்னும் வழக்கத்துக்கு மாறான விஷயமாகவே திகழ்கிறது. உலக சுகாதார  அமைப்பின் படி, மருத்துவச் செலவுகளுக்காக கையில் இருக்கும் பணத்தைச் செலவு செய்வது இந்தியாவில் 85 சதவிகிதமாக உள்ளது. இதுவே இங்கிலாத்தில் 21 சதவிகிதமாகவும், அமெரிக்காவில் 53 சதவிகிதமாகவும் இருக்கிறது. 
அவசர  கால செலவுகளைத் திட்டமிடுதல் சிரமமானது என்றாலும், அவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அத்தியாவசியம். மேலும், அதிகரித்துவரும் மருத்துவ செலவுகளில் இருந்து குடும்பத்தினரைக் காக்க இது மிகவும் முக்கியம்.
சரியான மருத்துவக்  காப்பீட்டு திட்டத்தில், சரியான நேரத்தில் முதலீடு செய்யும் முடிவு மற்றும் விழிப்பு உணர்வு நமது குடும்பத்தை உடல்நலக் குறைபாடுகளில் இருந்தும், எதிர்பாராத அபாயங்களில் இருந்து காக்க உதவும்.
தவறான நம்பிக்கைகள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரிவில், மெடிக்ளெய்ம் மிகப் பிரபலமான திட்டமாகத் திகழ்கிறது. ஆயுள் காப்பீட்டுக்கு சமமாக பலர் அதைக் கருதினாலும், இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டினைப் பலரும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. மெடிக்ளெய்ம் குறித்த தவறான நம்பிக்கைகள் பலவிதங்களில் உள்ளன. அதன் சாதக மற்றும் பாதகமான அம்சங்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. 
மெடிக்ளெய்ம் குறித்த சில தவறான நம்பிக்கைகளையும், அவற்றுக்கான தீர்வையும் பார்க்கலாம்.
வருவாய் இழப்பு கிடைக்கும்!
மெடிக்ளெய்ம் என்பது அனைத்து நோய்கள், உடல்நலக் குறைபாடுகளுக்கும் பொருந்தும் என பலரும் நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. உடல்நலக் குறைபாடு களுக்கான சிகிச்சைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். அதன் காரணமாக உண்டாகும் வருவாய் இழப்புகளுக்கு இது பொருந்தாது.

உதாரணமாக, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக காலமும் செலவும் ஆகும். பல ஆண்டுகளுக்குப் பணியாற்ற முடியாத நிலை உண்டாகும். சிகிச்சை செலவுக்கு மெடிக்ளெய்ம் பாலிசியில் க்ளெய்ம் கிடைக்கும். ஆனால், பணிக்குச் செல்ல முடியாத காலத்துக்கு இழப்பீடு கிடைக்காது. மேலும், பால்வினை நோய் போன்றவை தொடர்பான பிற நோய்களும் இதன் கீழ் வராது.

அனைத்துச் செலவுகளும் திரும்பக் கிடைக்கும்!

மருத்துவமனையில் சேர்ந்தபின் செய்யப்படும் அனைத்துச் செலவுகளுக்கும் மருத்துவக் காப்பீட்டின் மூலம் க்ளெய்ம் கிடைக்கும் என பலரும் நினைக்கிறார்கள். இதுவும் உண்மை அல்ல.  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான செலவுகள், மருந்து, ரத்தம், ஆக்சிஜன், நோயறிதல் போன்ற செலவுகள் மற்றும் எக்ஸ்-ரே, கீமோதெரபி, ரேடியோதெரபி, பேஸ்மேக்கர், உறுப்பு மாற்றத்தின்போது கொடையாளிக்கான செலவுகள் போன்ற 30 நாள் வரையிலான செலவுகளுக்கு (இந்தச் சிகிச்சை காலத்தில் ஏற்படும் வருமான இழப்புக்கு இழப்பீடு பெற முடியாது)  மருத்துவமனைக்கு நேரடியாக பணம் செலுத்தும் அல்லது கட்டணம் செலுத்தும் செலவுகளுக்கு மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும்.
எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் இழப்பீடு கிடைக்கும்!
பெரும்பாலான மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளில் மருத்துவமனை செலவுகளில் ஓர் அளவுக்குதான் கிடைக்கும். குறிப்பிடத்தக்க  தொகையை கையிலிருந்தே செலவழிக்க வேண்டி இருக்கும்.
அறை வாடகை, ஐசியு செலவீனங்கள், மருத்துவர் கட்டணங்கள், மயக்க மருந்து நிபுணர்  செலவீனம், ஆம்புலன்ஸ் கட்டணம், மருந்து, ஆக்சிஜன், ரத்தம், எக்ஸ்-ரே போன்ற நோயறிதல் சோதனைகள் போன்றவற்றுக்கான மீது துணை அளவு (சப் லிமிட்) உள்ளன. 
குறிப்பாக, காப்பீட்டுத் தொகையில் 1% அறை வாடகையாகவும், 2% ஐசியு கட்டணமாகவும் வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவீனங்களின் மீதும் துணை அளவுகள் உள்ளன.
சிகிச்சையின் போது எத்தனை மருத்துவமனைகள் மாறினாலும் இழப்பீடு கிடைக்கும்!
இதுவும் உண்மை அல்ல. மேல் சிகிச்சை மேற்கொள்ள வேறு மருத்துவமனையில் அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்கிறபோது மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். அதுவும் டிபிஏ அனுமதியுடன் மருத்துவமனையை மாற்றினால் மட்டுமே கிடைக்கும்.
மெடிக்ளெய்ம் என்பது கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசி போன்றதே!
மெடிக்ளெய்ம் எனப்படுவது மருத்துவமனை செலவீனங்களை கவர் செய்வது. கிரிட்டிக்கல் இன்னெஸ் பாலிசி என்பது, தீவிர உடல் நலக்குறைவு காரணமாக ஒருவரின் வருமானம் பாதிக்கப்படும் நிலையில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும். மருத்துவமனை செலவுகள் எவ்வளவாக இருந்தாலும், கவரேஜ் தொகை முழுமையாக வழங்கப்படும்.
மெடிக்ளெய்ம் ஆயுள் காப்பீடு போன்றதே!
உண்மையில், மெடிக்ளெய்ம் பாலிசி, ஆயுள் காப்பீட்டு பாலிசியைக் காட்டிலும் அதிக செலவு கொண்டது. காரணம், இறப்பதைக் காட்டிலும் உடல்நலக் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். எனவே, இதன் வரையறைகளும் பெரிதும் மாறுபடுகின்றன.

மெடிக்ளெய்ம் பாலிசியை முழுமையாகப் புரிந்துகொள்வது,  அனைத்து நிபந்தனைகளையும் நன்கு அறிந்துகொள்வது போன்றவை மூலமே சரியான பாலிசியைத் தேர்வு செய்ய முடியும்.

No comments: