Sunday, 5 March 2017

கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி?

கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் அடையலாம் என்று காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் விவசாயிகளுக்கு கூறிய அறிவுரை:
  • கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், 1 ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த இலைகள் கிடைக்கின்றன.
  • 5-ஆவது, 7-ஆவது மாதமானலும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற இலைகளை நீக்கும் பருவம் ஆகும்.
  • உலர்ந்த இலையில் 28.6 சதவீதத்தில் கரிமச் சத்தும், 0.35 முதல் 0.42 சதவீதம் தழைச்சத்தும், 0.04 முதல் 0.15 சதவீதம் மணிச்சத்தும், 0.40 முதல் 0.50 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளது.
  • எனவே, உலர்ந்த கரும்புத் தோகையை மக்கிய உரமாக்கி மண்ணில் இடுவதால், மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் தன்மை மேம்படுகிறது.
  • இதனால், மண்ணின் மின் கடத்தும் திறன் குறைந்து, நீரைத் தக்க வைக்கும் திறன் அதிகரிக்கிறது. மேலும், மண்ணின் அங்ககத் தன்மை அதிகரித்து ஊட்டச்சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.
 Courtesy: Dinamani
தயாரிக்கும் முறை:
  • உலர்ந்த கரும்புத் தோகைகளை ஒன்றாக சேகரித்து மக்கிய உரம் தயாரிக்கும் இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
  • மக்கிய உரம் தயாரிப்பதற்கு குழி எடுக்கத் தேவையில்லை. மண்ணின் மேற்பரப்பிலேயே தயாரிக்கலாம்.
  • உலர்ந்த கரும்புத் தோகையை சிறுசிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். 1 டன் கரும்புத் தோகைக்கு 2 கிலோ பயோ மினரலைசர் என்ற நுண்ணுயிரிகளின் கூட்டுக் கலவையைப் போட வேண்டும்.
  • 1 டன் தோகைக்கு 50 கிலோ சாணத்தை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • மேலும், 5 கிலோ ராக் பாஸ்பேட்டை ஒரு டன் கழிவுக்கு சேர்ப்பதால் மணிச்சத்தின் அளவு உயர்த்தப்படுகிறது.
  • அனைத்து இடுபொருள்களையும் இட்டபின், கழிவுகளை குவியல்களால் உருவாக்க வேண்டும்.
  • இது 4 அடி உயரத்துக்கு இருந்தால் நல்லது. குவியல் கழிவுகளை 15 நாள்களுக்கு ஒரு முறை கிளரிவிட வேண்டும்.
  • காற்றோட்டம் இருந்தால் மட்டுமே நன்றாக மக்கும். குவியல் கழிவுகளில் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
  • ஈரப்பதம் குறைந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் அனைத்தும் இறந்து விடும்.
  • குறைவான அளவு, மண் வாசனை, பழுப்பு கலந்த கருமை நிறம் இவை மக்குதல் முதிர்வை கண்டறிய உதவும்.
  • இந்த நிலை அடைந்தவுடன், மக்கிய உரத்தைப் பிரித்து உலர விட வேண்டும். மக்கிய உரத்துடன் நுண்ணுயிர்களான அசட்டோபாக்டர், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் கலப்பதால் அவை மேலும் ஊட்டமேற்றப்படுகின்றன.
இந்த செறிவூட்டப்பட்ட மக்கிய உரத்தை ஹெக்டருக்கு 5 டன் என்ற அளவில் கரும்புப் பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
நன்றி: தினமணி

No comments: