Thursday 11 May 2017

முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் தாழ்வு மனப்பான்மை

முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் தாழ்வு மனப்பான்மை
















தம்மால் மற்றவர்களை போல வாழ முடியாது? நமக்கு வழிகாட்ட யாரும் இல்லை’ என்று நம்மை நாமே குறைத்து மதிப்பீடு செய்து கொள்ளக் கூடாது. மனிதனின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விஷயங்களில் தாழ்வு மனப்பான்மைக்கு முக்கிய இடமுண்டு. மற்றவர்களுடன் தம்மை ஒப்பிட்டுப் பார்த்து தம்மைத்தாமே தாழ்த்திக்கொண்டிருப்பார்கள். பிறருடைய பொருளாதாரம், உறவு, நண்பர்கள் வட்டத்தை மதிப்பீடு செய்து பார்த்து மனக்கவலை கொள்வார்கள். ஏற்றத்தாழ்வுகளை கணக்கிட்டு வருந்துவார்கள்.

தாழ்வுமனப்பான்மை மனச்சிறைக்குள் சிறைபிடித்துவிடும். அதற்குள் வாழ முடியாது. மனதை பலகீனப்படுத்திவிடும். அகண்ட வானில் சிறகடித்து பறக்கும் பறவைகளை போல மனம் விசாலப்பட வேண்டும். எந்த விஷயத்தையும் பரந்த மனதுடன் எதிர்நோக்கும் பக்குவம் கொண்டிருக்க வேண்டும். ‘தம்மால் மற்றவர்களை போல வாழ முடியாது? நமக்கு வழிகாட்ட யாரும் இல்லை’ என்று நம்மை நாமே குறைத்து மதிப்பீடு செய்து கொள்ளக் கூடாது.

எல்லோரிடத்திலும் திறமைகள் புதைந்துகிடக்கிறது. அதை வெளியே கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து மற்றவர்கள் செய்யும் காரியங்களை மலைப்பாக பார்த்துவிட்டு தம்மால் அதுபோல் முடியாது என்று தாழ்வு மனப்பான்மையால் முடங்கி கிடப்பதில் அர்த்தமில்லை. பெரிதாக எதையும் சாதிக்காவிட்டாலும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக்கூட தடைவிதித்துக் கொண்டு நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது நமக்கு நாமே எதிரியாக மாற வித்திடும். வாழ்க்கையை நரகமாக்கிவிடும். 



இன்று நிறைய பேர் தாழ்வு மனப்பான்மையால் தன்னுடைய சுய மதிப்பை இழந்துகொண்டிருக்கிறார்கள். படிப்பில் குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களையும் தாழ்வுமனப்பான்மைதான் தடுமாற வைக்கும். அதை பெற்றோர்கள் கண்டறிந்து தன்னம்பிக்கையூட்ட வேண்டியது அவசியம். அவர்களை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால் தாழ்வு மனப்பான்மை அவர்களை வளரவிடாது. 

படிப்பு மட்டும்தான் அறிவை கூர்தீட்டும் என்று நாம் தீர்மானிக்க முடியாது. அறிவு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. படிப்பில் ஆர்வம் குறைந்த மாணவர்கள் வேறு எதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்களின் திறமையை வளர்க்கவேண்டும். அதைவிட்டு விட்டு மற்ற மாணவர்களோடு அவர்களை ஒப்பிட்டு மட்டம் தட்டினால் அது அவர்களை தாழ்வு மனப்பான்மை என்ற குழிக்குள் தள்ளிவிடும்.

எந்த வயதினருக்கும் தாழ்வு மனப்பான்மை வரலாம். சுற்றி இருக்கும் சூழலே இதற்கு காரணம். அதற்கு இடம் கொடுக்காமல் சிந்தித்து செயல்பட வேண்டும். தாழ்வு மனப்பான்மையில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தன்மை உண்டு. அது என்னவென்று அறிந்து செயல்பட வேண்டும். நம்மை நாமே நேசிக்கவேண்டும். நம்மை நாமே திருத்திக்கொள்ளவேண்டும். நமக்கு நாமே ஆசான்.

நம் திறமைகளை பாராட்ட வேண்டும் என்ற நோக்கம் மற்றவர்களுக்கு இல்லாமல் போகலாம். அதை நாம் எதிர்பார்க்க தேவையில்லை. ஆனால் நம்முடைய திறமைகளின் தாக்கம் நிச்சயம் மற்றவர்களை சலனப்பட செய்யும். அதுவே நம் சாதனையாக இருக்கவேண்டும்.

No comments: