Sunday 7 May 2017

88 ஆயிரம் பேர் பங்கேற்பு: தமிழகத்தின் 8 நகரங்களில் ‘நீட் தேர்வு’ தொடங்கியது

88 ஆயிரம் பேர் பங்கேற்பு: தமிழகத்தின் 8 நகரங்களில் ‘நீட் தேர்வு’ தொடங்கியது

















சென்னை:

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு) மூலம் நிரப்பப்படுகின்றன.

அந்தவகையில் பிளஸ்–2 படிப்பு முடித்த மாணவர்கள் 2017–2018–ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கு, நடப்பாண்டு முதல் ‘நீட் நுழைவு தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தேர்வு எழுத நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று நாடு முழுவதும் உள்ள 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடக்கிறது.

தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள்பை ஆகிய எதையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.


கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட விதிவிதமான தங்க ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், பாக்கெட் வகை நொறுக்கு தீனி போன்றவைகளையும் தேர்வு அறைக்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை.

‘ஹாப் ஸ்லீவ்ஸ்’ என்ற அரை கை உடை, மெல்லிய ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். பெரிய பொத்தான், பேட்ஜ், பெரிய அளவிலான ரப்பர் பேண்டுகள், தலையில் அணியும் கிளிப்புகள், பூ போன்ற சிறப்பு அலங்கார ஆடைகளை அணிய கூடாது. சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வர வேண்டும்.

புடவை கட்டி வரும் பெண்கள், வளையல்கள், பர்தா, பைஜாமா குர்தா ஆகியவை அணிந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். மாணவர்கள் ஷூ, சாக்ஸ் முழுக்கை சட்டை, டி–சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர்கண்ணாடி போன்றவை அணிய கூடாது. சாதாரண வகை பேண்ட், அரைக்கைசட்டை போன்ற ஆடைகளை மட்டும் அணிய வேண்டும் என்று நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் உள்ள மையங்களில் நடக்கும் தேர்வில் 88 ஆயிரத்து 478 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு பகல் 1 மணி வரை நடக்கிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 8–ந்தேதி வெளியாகிறது.

No comments: