Saturday 20 May 2017

பணத்தை மிச்சப்படுத்தும் பாரம்பரிய பயிர் சாகுபடி தொழில் நுட்பம்



 

பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வரும் சில பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பெரும் பலனை கொடுத்து வந்துள்ளன. தற்போதும் கூட சில இடங்களில் விவசாயிகள் இவற்றை பின்பற்றி பயிரிடுகின்றனர். இது பற்றி பார்க்கலாம்.
விதை நேர்த்தி


விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பரப்புகளில் விவசாயிகள் விதை நேர்த்தி செய்து நல்ல விளைச்சலை காண்பதுண்டு. அதன்படி, விதைகளை மாட்டு சாண கரைசலில் ஊறவைத்து நேர்த்தி செய்தல் முறையில் விதைகளை நேர்த்தி செய்து பின்னர் விதைக்கின்றனர். முதலில் அரை கிலோ மாட்டுச்சாணத்திற்கு 1 லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து மாட்டுச்சாணக்கரைசலை தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த கரைசலில் பீர்க்கு, பாகல், புடலை, சுரை மற்றும் பூசணி போன்ற காய்கறி பயிர்களின் விதைகளை மாட்டுச்சாண கரைசலில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை விதைகளை மாட்டுச்சாண கரைசலிலிருந்து எடுத்து, பின்பு விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். மாட்டுச்சாண கரைசலில் விதைகளை ஊறவைத்து நேர்த்தி செய்வதால் விதைகளின் முளைப்புதிறன் 90 சதவீதம் இருப்பது உறுதியானது.


பூச்சி விரட்டி தெளித்தல்



கோயம்புத்தூர் பகுதியில் இயற்கை பூச்சி விரட்டி கரைசலை தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். புங்கம், துளசி, நொச்சி, எருக்கு மற்றும் வேப்பிலை போன்ற ஐந்து வகையான இலைகளை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு, அதனை உரலில் இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் மாடுகளின் கோமியத்தை சேர்க்க வேண்டும். அதாவது 10 கிலோ இலைகளுக்கு 100 லிட்டர் கோமியம் என்ற அளவில் சேர்க்க வேண்டும். இந்த கலவையை 10 லிருந்து 15 நாட்கள் வரை ஊறவைத்தல் வேண்டும். தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் இந்த கலவையை நன்றாக சில நிமிடங்கள் கலக்கி விட வேண்டும். 10 நாட்கள் கழித்து இந்த கலவையிலிருந்து துர்நாற்றம் வீசும். இதுவே கலவை நன்றாக நொதித்து விட்டதற்கான அடையாளமாகும். பின்பு கலவையிலிருந்து தெளிந்த நீரை வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்க பயன்படுத்தலாம். இந்த கரைசலானது, அனைத்து வகை பயிர்களுக்கும், பல்வேறு நிலையில் உள்ள பயிர்களுக்கும் தெளிக்கப்படுகின்றது.
இந்த கரைசலை தெளிப்பதால், கரைசலின் துர்நாற்றம் மற்றும் கசப்பு தன்மையின் காரணமாக சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், தத்துப்பூச்சி, இலைத்துளைப்பான், வண்டுகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுகின்றன. பயிர்கள் செழித்து வளர்கின்றன. இயற்கை சார்ந்து இந்த தொழில் நுட்பத்திற்கு எந்த செலவும் இல்லை.


வெண்டை பயிருக்கு மோர் தெளித்தல்



வெண்டை பயிருக்கு முக்கிய எதிரியாக இருப்பது வெள்ளை ஈ என்னும் சாறு உறிஞ்சும் பூச்சியாகும். இந்த பூச்சியானது தேமல் நோயை பரப்புகிறது. வெண்டை நோயில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவது முக்கியமானது. இதற்கு, 10 லிட்டர் மோரை 2 நாட்களுக்கு புளிக்க வைக்க வேண்டும். பின்பு 1 லிட்டர் மோருக்கு 9 லிட்டர் தண்ணீர் வீதம் தெளிப்பானில் நிரப்பி வெண்டை நடவு செய்து 25 நாட்களுக்கு பிறகு கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு மோர் கரைசலை தெளிப்பதால் தேமல் நோயை பரப்பும் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த முறையில் வெள்ளை பூச்சியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 80 ரூபாய் தான் செலவு ஆகும் என்கிறார்கள்

.
பருத்தியில் காய்ப்புழு கட்டுப்பாடு


பருத்தி சாகுபடியில் காய்ப்புழுக்களால் மிகவும் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு பூச்சி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்¬கான பாரம்பரிய முறையில் காய்ப்புழுக்களை விரட்ட முடியும். இதற்கு, 15 லிட்டர் தயிரை 15 லிட்டர் தண்ணீருடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு 5 கிலோ அளவு வேப்பிலைகளை சேகரித்து தண்ணீர் விட்டு இடித்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேப்பிலை சாற்றை தயிர் கரைசலுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை 15 நாட்கள் வரை ஊற வைத்தல் வேண்டும். தினந்தோறும் இந்த கலவையை மரக்குச்சியினால் காலை அல்லது மாலை வேளையில் கலக்கி விட வேண்டும். 15 நாட்களுக்கு பின் இந்த கரைசலை வடித்து, தெளிந்த கரைசலை எடுத்து பருத்தி செடிகளில் நன்றாக படும்படி தெளிக்க வேண்டும். தயிர் மற்றும் வேப்பிலை சாறு கலவையை தெளிப்பதால் பருத்தியில் 60 சதம் காய்ப்புழுக்கள் கட்டுப்படுத்தப்படுவதாக அனுபவ விவசாயிகள் கூறுகின்றனர். இந்த தொழில் நுட்பத்தை பின்பற்ற ஒரு ஏக்கர் பருத்தி சாகுபடி பரப்பிற்கு அதிகபட்சம் ரூ.150 மட்டுமே செலவாகும் என்கிறார்கள்.

No comments: