Sunday 11 June 2017

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வராமல் என் உயிர் போகாது: தமிழிசை பேச்சு



தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வராமல் என் உயிர் போகாது: தமிழிசை பேச்சு
நெல்லை:
பா.ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் தாமிரபரணி நதியை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி பாபநாசத்தில் இருந்து தாமரை யாத்திரை தொடங்கப்பட்டது. தாமிரபரணி கரையோர பகுதிகள் வழியாக இந்த யாத்திரை சுற்றி நேற்று மாலை நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் யாத்திரை முடிவடைந்தது. நிறைவு நிகழ்ச்சியில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
அவர் பெண்களுடன் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் மங்கள ஆரத்தி எடுத்து, மலர் தூவி தாமிரபரணி ஆற்றுக்கு வழிபாடு செய்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க., காலூன்ற முடியாது. புறவாசல் வழியாக வரமுடியாது என கூறுகிறார்கள். அவர்கள் முடியாது என சொல்வதன் மூலம் இன்னும் ஆழமாக வேரூன்றி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு எல்லாம் தி.மு.க.தான் காரணம். தாமிரபரணியை தூர்வார வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளியது தி.மு.க.தான். ராகுல் எந்த இடத்திற்கு எல்லாம் செல்கிறாரோ அந்த மாநிலங்களில் எல்லாம் காங்.,கட்சி தோல்வியடையும்.
தமிழகத்தில் இன்னும் அதிகமாகவே தோல்வியடையும். தமிழகத்தில் காங்., கட்சி எங்கே உள்ளது. திருநாவுக்கரசர் இருக்கிறார். எந்த கட்சி அவருக்கு எம்.பி., பதவி கொடுக்கிறதோ அந்த கட்சிக்கு அவர் தாவிவிடுவார். தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்துக்கு அங்கீகாரம் கொடுத்ததே தி.மு.க.தான். இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமானால் அது பாஜ.க.,வால் மட்டுமே முடியும். கல்வியில் இந்தியை திணிக்க மாட்டோம்.
அதேநேரத்தில் மொழியை வைத்து மக்களை வஞ்சித்தது தி.மு.க.தான். எத்தனை வெடிகுண்டு பார்சல் வந்தாலும், தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வராமல் என் உயிர் போகாது என சபதம் செய்கிறேன். தமிழகத்தில் பா.ஜ.க. துணையில்லாமல் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அஸ்திவாரத்தை பலப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
யார் ஊழல் செய்தாலும் திகார் சிறைக்கு செல்லவேண்டியது தான். இன்னும் சில மாதங்களில் 2 ஜி ஊழல் தீர்ப்பு வரவுள்ளது. இந்த தீர்ப்பிற்கு பிறகு தான் திகார் முன்னேற்ற கழகமா? திராவிட முன்னேற்ற கழகமா என்பது தெரியும். டெல்லி செங்கோட்டையில் மலர்ந்த தாமரை, ஜார்ஜ் கோட்டையிலும் மலரும். இன்னும் 3 மாதத்தில் தமிழக அரசியல் சூழ்நிலையை மாற்றிக் காட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் தூர்வார வேண்டும்.ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து, கிடப்பில் உள்ள நதிநீர் மேம்பாட்டு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், அரசியல் லாபத்துக்காக குளங்களை தூர்வாரும் பணியை மேற்கொள்கிறார். தி.மு.க. சரியான எதிர்கட்சியாக செயல்படவில்லை. தமிழகத்தை நெடுங்காலமாக ஆண்ட திராவிட கட்சிகள் நீர்நிலைகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருவதால் எனக்கு மிரட்டல் வரலாம் என்று கருதுகிறேன். அதுபற்றி நான் கவலைப்பட வில்லை. எனது தீவிர அரசியல் பயணம் வழக்கம்போல் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: