Sunday 20 May 2018

பலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்... 1.25 ஏக்கர், ரூ 80 ஆயிரம்...

யற்கை விவசாயிகள் பலரும் தங்கள் தோட்டத்தையே பரிசோதனைக்கூடமாக மாற்றி ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சென்னகேசவன். ஆடு, மாடு வளர்ப்பில் தனி யுக்தியைக் கடைப்பிடித்து வெற்றி நடை போடும் சென்னகேசவன், மலைப்பயிரான பீட்ரூட்டைச் சமவெளிப்பகுதியில் முருங்கைத் தோட்டத்தில் ஊடுபயிராகச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்திருக்கிறார்.  கடந்த 10.02.17-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் வெளியான ‘மண்ணுக்கேற்ற மாடுகள்... பாரம்பர்ய வைத்தியம்..!’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலம் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான் சென்னகேசவன்.  
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னமலைக்குன்று கிராமத்தில் உள்ளது, சென்னகேசவனின் தோட்டம். பீட்ரூட் அறுவடைப்பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்த சென்னகேசவனைச் சந்தித்தோம்.  

நம்மைச் சந்தோஷமாக வரவேற்றுப் பேசிய சென்னகேசவன். “இது மொத்தம் 23 ஏக்கர் கரிசல் மண் தோட்டம். 5 ஏக்கர் நிலத்துல செடி முருங்கை இருக்கு. 4 ஏக்கர் நிலத்துல வேம்பு, தீக்குச்சி, குமிழ்னு மரப்பயிர்கள் இருக்கு. 2 ஏக்கர் நிலத்துல சீனி அவரை இருக்கு. ஒண்ணே முக்கால் ஏக்கர் நிலத்துல வேலிமசால் இருக்கு. 9 ஏக்கர் நிலத்துல மக்காச்சோளம் போட்டு அறுவடை முடிஞ்சுடுச்சு. மீதி நிலத்தை விதைப்புக்காக ஓட்டி வெச்சிருக்கேன். செடிமுருங்கை இருக்கிற 5 ஏக்கர் நிலத்துல பீர்க்கன், பாகல், கத்திரி, தக்காளி, வெள்ளைப்பூசணி, நிலக்கடலை, கொத்தமல்லினு நிறையப் பயிர்களை ஊடுபயிராச் சாகுபடி செஞ்சுருக்கேன். அதுல ஒரு முயற்சியாத்தான் பீட்ரூட்டையும் சாகுபடி செஞ்சு பார்த்தேன்.   
இதுக்குப் பெரிசா செலவில்லை. தனியாகப் பராமரிப்பு செய்ய வேண்டியதில்லை. நோய்த்தாக்குதலும் இல்லாம நல்லா விளைஞ்சு வந்தது. சந்தையில நல்ல விற்பனை வாய்ப்பும் இருக்கு. அதனால, நாலு வருஷமா தொடர்ந்து பீட்ரூட் சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். போன போகத்துல ஒண்ணேகால் ஏக்கர் நிலத்துல ஊடுபயிரா பீட்ரூட் போட்டிருந்தேன். அதுதான் இப்போ அறுவடையாகிட்டுருக்கு” என்ற சென்னகேசவன் தொடர்ந்தார்...  
“இதுவரைக்கும் உள்ளூர்ல விற்பனையானது போக மீதியைக் கோவில்பட்டி, எட்டயபுரம் மார்க்கெட்கள்ல கொண்டு போய் விற்பனை செஞ்சுட்டுருந்தேன். அங்கே இயற்கை பீட்ரூட்டுங்கிறதுக்காகத் தனி விலையெல்லாம் கிடைக்கலை. சமீபத்துல கோவில்பட்டியில் ‘தென்னக மானாவாரி உற்பத்தியாளர் சங்கம்’ சார்பா, கோவில்பட்டி உழவர் சந்தையில் இயற்கைக் காய்கறிகள் விற்பனைக்காகக் கடைகள் ஆரம்பிச்சுருக்கோம். அடுத்த போகத்துல இருந்து அங்கதான் விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இன்னும் ரெண்டு மூணு நாள்ல மொத்த அறுவடையும் முடிஞ்சுடும். முடிஞ்சதும் வருமானக்கணக்கு பத்தி சொல்றேன்” என்று சொல்லி விடைகொடுத்தார், சென்னகேசவன்.   
சில நாள்கள் கழித்து நம்மை அழைத்துப் பேசிய சென்னகேசவன், “ஒண்ணேகால் ஏக்கர் பரப்புல, 8,424 கிலோ பீட்ரூட் மகசூலாகியிருக்கு. ஒரு கிலோவுக்கு 6 ரூபாயில் இருந்து 14 ரூபாய் வரை விலை கிடைச்சது. மொத்தம் 8,424 கிலோ விற்பனை மூலம் 87,644 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. உழவு முதல் அறுவடை வரை மொத்தமா 18,650 ரூபாய்ச் செலவாகியிருக்கு. அதுபோக, 68,994 ரூபாய் லாபமாகக் கிடைச்சிருக்கு” என்றார். 

தொடர்புக்கு, சென்னகேசவன், செல்போன்: 98423 48915

No comments: