Sunday 20 May 2018

நல்ல மகசூல் தரும் புதிய ரகங்கள்!

மிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 8 புதிய பயிர் ரகங்கள் குறித்த விவரங்கள் இங்கே...
‘ஏ.டீ.டி-51’ (ADT-51) ரக நெல் 

இது 150-160 நாள்கள் வயது கொண்ட பயிர். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6,500 கிலோ மகசூல் கிடைக்கும். பீ.பி.டீ 5204 (BPT 5204), மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகிய ரகங்களிலிருந்து உருவாக்கப்பட்டது. சம்பாப்பட்டத்துக்கு ஏற்ற ரகம். தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிட ஏற்றது. இலைச்சுருட்டுப் புழு, தண்டுத் துளைப்பான் மற்றும் புகையான் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. குலை நோய்க்கும் எதிர்ப்புத்திறன் கொண்டது. இலையுறை கருகல் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் ஆகிய நோய்களுக்கு மிதமான எதிர்ப்புதிறன்கொண்டது.

‘வம்பன்-3’ (VBN-3) ரகத் தட்டைப்பயறு 

இது 75-80 நாள்கள் வயதுகொண்ட பயிர். ஒரு ஹெக்டேர் நிலத்தில் மானாவாரியில் 1,000 கிலோ மகசூல் கிடைக்கும். டி.எல்.எஸ் 38 (TLS-38), வி.சி.பி 16-1 (VCP 161) ஆகிய ரகங்களிலிருந்து உருவாக்கப்பட்டது. புரட்டாசிப்பட்டத்தில் விதைக்க ஏற்றது. தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர, மீதி அனைத்து மாவட்டங்களிலும் பயிர் செய்ய ஏற்றது. காய்த்துளைப்பான் மற்றும் நாவாய்ப் பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. துரு நோய், ஆந்த்ரக்னோஸ் (Anthracnose) நோய் மற்றும் தேமல் நோய்களுக்கு எதிர்ப்புதிறன்கொண்டது.

‘டீ.எம்.வி-14’(TMV- 14) ரக நிலக்கடலை 

இது 95-100 நாள்கள் வயது கொண்ட பயிர். மானாவாரியில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2,100 கிலோ அளவும், இறவையில் 2,300 கிலோ அளவும் மகசூல் கிடைக்கும். வி.ஆர்.ஐ (ஜிஎன்) 6 (VRI (Gn) 6), ஆர் 2001-2 (R2001-2) ஆகிய நிலக்கடலை ரகங்களிலிருந்து உருவாக்கப்பட்டது. அனைத்துப் பருவங்களுக்கும் ஏற்றது. விதைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் உரிப்புத்திறன் 70.6 சதவிகிதம். எண்ணெய்ச் சத்து 48 சதவிகிதம். புரோட்டீனியா, இலைப்பேன் மற்றும் இலைச்சுருள் பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் இதில் குறைவு. இலைப்புள்ளி மற்றும் துரு நோய்களுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்டது.

‘கோ.எச்- 3’ (COH-3) ரகச் சூரிய காந்தி 

மானாவாரியில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 1,600 கிலோ அளவும் இறவையில் 1,800 கிலோ அளவும் மகசூல் கிடைக்கும். இறவையில் மூன்று பருவங்களுக்கும் இந்த விதை ஏற்றது. தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்றது. ஒற்றைப் பூக்கொண்டையுடைய உயரமான செடி இது. எண்ணெய்ச்சத்து 42 சதவிகிதம் கொண்டது. சன்பிரட் 275 மற்றும் கோ.எச்-2 வீரிய ஓட்டு ரகங்களைவிட அதிக மகசூலைக் கொடுக்கும். இதன் வயது 90-95 நாள்கள். இலைப்பேன், இலைத்தத்துப்பூச்சி மற்றும் அமெரிக்கக் காய்ப்புழு ஆகியவற்றின் தாக்குதல் இதில் குறைவு. இலைக்கருகல், இலைப்புள்ளி மற்றும் சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புதிறனைக் கொண்டது.

‘கோ.ஜி-6’(COG- 6) ரகக் கரும்பு 

ஒரு ஹெக்டேர் நிலத்தில் 180 டன் மகசூல் கிடைக்கும். மறுதாம்பில் 136 டன் மகசூல் கிடைக்கும். உப்புத்தன்மை அதிகம் கொண்ட மண் உள்ள பகுதிகளில் பயிரிட ஏற்றது. தண்டுத்துளைப்பான் தாக்குதலுக்கு மிதமான எதிர்ப்புத்திறனும், கரிப்பூட்டை நோய்க்கு எதிர்ப்புத்திறனும், செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறனும் கொண்டது. இதன் வயது 11 மாதங்கள். தைப்பட்டத்தில் நடவு செய்ய ஏற்றது. எச்.ஆர் 83-144 (HR 83-144), கோ.எச் 1199 (COH 119) ஆகிய இனங்களிலிருந்து உருவாக்கப்பட்ட ரகம் இது.

‘கோ-06022’ (CO 06022) ரகக் கரும்பு 

ஒரு ஹெக்டேர் நிலத்தில் 140 டன் மகசூல் கிடைக்கும். மறுதாம்பில் 131 டன் மகசூல் கிடைக்கும். புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்ற ரகம் இது. தைப்பட்டத்தில் நடவு செய்ய ஏற்றது. இதன் வயது பத்து மாதங்கள். ஜி.யு 82-275  (GU 92-275), கோ-86249  (CO 86249) என்ற ரகங்களிலிருந்து கலப்பினம் செய்யப்பட்ட ரகம். தண்டுத்துளைப்பான் தாக்குதலைத் தாங்கி வளரக்கூடியது. செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புதிறன் கொண்டது.

‘கோ.எச்-1’(COH- 1) ரகப் பீர்க்கங்காய் 

கலப்பின வீரிய ஒட்டு ரகம் இது. தை மற்றும் ஆடிப் பட்டங்களில் இறவையில் பயிரிட ஏற்றது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் 34 டன் மகசூல் கிடைக்கும். 140-150 நாள்கள் வயது கொண்டது. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பயிரிட ஏற்றது. காய்ப்புழுத் தாக்குதலுக்கு ஓரளவு எதிர்ப்புத்திறன் கொண்டது. சாம்பல், அடிச்சாம்பல் மற்றும் ஆந்த்ரக்னோஸ் நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும்.

எம்.டி.பி- 2 (MTP - 2)  ரக மலைவேம்பு 

இது கலப்பின ரகம். மரக்கூழ் உபயோகத்துக்கு நட்ட 24-36 மாதங்களில் அறுவடை செய்யலாம். ஒட்டுப்பலகை உபயோகத்துக்கு நட்ட 60-72 மாதங்களில் அறுவடை செய்யலாம். பருவமழைக் காலங்களிலும், இறவைப் பாசனத்திலும் பயிர் செய்ய ஏற்றது. 24-36 மாதங்களில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 100 டன் வரை மகசூல் கிடைக்கும். 60-72 மாதங்களில் 120 டன் மகசூல் கிடைக்கும். மணல் கலந்த வண்டல் மண் பகுதிகளுக்கு ஏற்றது. 24 மாதங்களில் 12 மீட்டர் வரை வளரக்கூடியது. வேரழுகல் மற்றும் இலைக்கருகல் நோய்கள் குறைவாகத்தான் தாக்கும்.

தொடர்புக்கு:

பயிர் ரகங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு...

இயக்குநர், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். தொலைபேசி: 0422 6611215.

No comments: