Monday 11 June 2018

தீவனப்பயிர் பதப்படுத்துதல் அல்லது ஊறுகாய் புல்



காற்றுப்புகாத இடத்தில் பசுந்தீவனத்தை பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்திய பின் கிடைக்கும் தீவனம் ஊறுகாய் புல் எனப்படும்.
தயாரிக்கும் முறை: 
                      இதைத் தயாரிக்க துளையில்லாத் தண்டைக்கொண்ட தீவனப்பயிர்கள் மிகவும் சிறந்தது. ஊறுகாய்ப்புல் தயாரிக்க தீவனப்பயிர்களின் ஈரத்தன்மை அதிகமாகவோ அல்லது மிகக்குறைந்த அளவோ இருக்கக்கூடாது. ஈரத்தன்மை 70-75 சதம் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த நிலத்திலேயே உலர விடவேண்டும். 4-5 செ.மீ நீளமுள்ள துண்டுகளாக உலர்ந்த தீவனத்தை வெட்ட வேண்டும். 
                         ஊறுகாய் புல் தயாரிப்பதற்காகவே செய்யப்பட்ட சிமெண்ட் தொட்டி அல்லது மரத்தினால் ஆன பாத்திரத்தில் வெட்டிய தீவனத்தை அடுக்கடுக்காக நிரப்பவேண்டும். ஒவ்வொரு அடுக்கிலும் 15 செ.மீ உயரத்திற்கு வெட்டிய தீவனத்தை போட்டு அதன் மீது வெல்லப்பாகு மற்றும் சாப்பாட்டு உப்பு 1 சதம் தெளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை அடுக்கும் போதும் காற்றை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு தொட்டியின் உயரம் வரை வெட்டிய தீவனத்தை அடுக்க வேண்டும். 
                      தொட்டியை நிரப்பியவுடன் பாலித்தீன் தாளை விரித்து அதன் மேல் மண்ணைக்கொட்டி காற்றுப்புகாமல் பூச வேண்டும். மழைநீர் தொட்டியில் படாமல் இருக்குமாறு கூரை அமைத்தல் அவசியம். பூசிய மண்ணில் விரிசல் ஏற்பட்டு காற்று உள்ளே புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் வரை அப்படியே விட்டுவிட வேண்டும். 
                      மூன்று மாதங்களுக்குப் பிறகு இத்தீவனம் கால்நடைகளுக்கு கொடுப்பதற்கு உகந்ததாக இருக்கும். ஊறுகாய் புல் தயாரிக்கும் போது தானிய வகை அல்லது புல்வகைத் தீவனப்பயிர்களுடன் பயறு வகைத்தீவனப்பயிரையும் 3:1 என்ற விகிதத்தில் கலந்து தயாரிப்பதன் மூலம் அதன் சத்தின் அளவை அதிகரிக்கலாம்.
குறிப்பு: மழை நாட்களில் இதை தயாரிக்கக்கூடாது.

1 comment:

Kartook said...

மேல்நாடுகளிலும்,நம் நாட்டின் வடமேற்கு, மத்திய மாநிலங்களிலும் கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்தும் அளவிற்கு நம் தமிழக கால்நடை வளர்ப்போர்கள் சைலேஜ் என்று அழைக்கப்படும் பதனப்படுத்தப்பட்ட பச்சை புல் அல்லது ஊறுகாய் புல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில்லை.இது மற்றுமொருமுறை

https://www.pannaiyar.com/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4/