Wednesday 13 June 2018

பெண்களை அதிகம் பாதிக்கும் மனஅழுத்தம்

பெண்களை அதிகம் பாதிக்கும் மனஅழுத்தம்

















இன்று பெண்களுக்கு வீட்டு வேலை, அலுவலக வேலை, பொது இடங்களில் பயணம் செய்வது, குடும்ப உறவுகளை கையாளுவது, நட்புகளை கையாளுவது, குழந்தைகளை வளர்ப்பது.. போன்ற அனைத்தின் மூலமும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் உருவாகாமல் தடுக்க தேவையான அளவு தூக்கம் மிக அவசியம்.

பெண்கள் தூக்கத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ‘எவ்வளவு நேரம் தூங்கினாலும் காலையில் எழுந்திருக்க முடியாத அளவுக்கு சோம்பேறித்தனம் இருந்தால்- கண்களை திறக்க முடியாமல், அப்படியே மணிக்கணக்கில் படுத்திருக்கலாம் என்று தோன்றினால்- எப்போதும் கசப்பான சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால்- எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள், என் வாழ்க்கை மட்டும்தான் இவ்வளவு மோசமாக இருந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணத்துக்குள்ளே உழன்று கொண்டிருந்தால்- நீங்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கலாம். 

இதில் இருந்து மீள நீங்கள் மனோதத்துவ நிபுணரை அணுகுவதற்கு முன்னால், உடல் நலத்தை பரிசோதிக்க டாக்டரை சந்திக்கவேண்டும். ஏன்என்றால் மேற்கூறிய அறிகுறிகளில் பெரும்பாலானவை பெண்களின் உடல்நலத்தோடும் சம்பந்தப்பட்டவை. ஆரோக்கியமான மன நலத்திற்கு ஆரோக்கியமான உடல் நலமும் அவசியம்.

மனஅழுத்தத்திற்கு உட்பட்டிருந்தால் அதில் இருந்து மீள சில எளிய வழிகள்:



* மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் சிந்தனையை திசை திருப்பவேண்டும். அதற்கு சுயிங்கம் துணைபுரியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அதனால் சுயிங்கத்தை வாயில்போட்டு நிதானமாக மெல்லுங்கள்.

* எல்லா விஷயங்களையும் சீரியஸ் ஆக்குவதை கைவிடவேண்டும். ‘இதெல்லாம் சாதாரணம் அப்படியே விட்டுவிடுவோம்! சரி.. நடந்தது நடந்துபோச்சு அதுக்கு என்ன செய்ய முடியும்!’ என்று நினைத்து சிறிய விஷயங்களை மனதில் போட்டுவைக்காமல் அப்போதே அப்புறப்படுத்திவிடுங்கள்.

* நான் ரொம்ப சுத்தமானவள். அதனால் என்னைப் போல் நீங்களும் சுத்தமாக இருக்கவேண்டும். நான் ரொம்ப நல்லவள். அதுபோல் நீங்களும் நல்லவராக இருக்கவேண்டும். நான் கடும் உழைப்பாளி. அதுபோல் நீங்களும் உழைக்கவேண்டும்’ என்று உங்கள் கொள்கைகளை மற்றவர்கள் மீது திணித்து, அவர்களும் அதுபோல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

* பிடித்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசியுங்கள். அவைகளை வாசிக்கும்போது உங்கள் உலகத்தில் இருந்து விடுபட்டு அந்த புத்தகத்தின் கருத்து உலகத்திற்கு நுழைந்துவிடுங்கள். நாய், பூனை போன்று உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பிராணியை வளருங்கள். அதனுடன் பொழுதை செலவிடுங்கள். தினமும் தியானம் மேற்கொள் ளுங்கள்.

No comments: