Thursday 29 March 2018

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் - களத்தில் இறங்கி பணியாற்ற ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் - களத்தில் இறங்கி பணியாற்ற ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு

















அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், புதிய கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரையில் 26 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குமரி, நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ரஜினி காந்த் வீடியோ மூலமாக பேசியதாவது:-


இந்த கூட்டம் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க தயாராகுங்கள்.

நீங்கள் அனைவரும் ஒரு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும். அதன் மூலமே நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்காக நீங்கள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்ற வேண்டும். பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தை பார்த்து வியக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

மக்கள் மன்றத்தில் பொறுப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை உரிய நேரத்தில் அது தேடி வரும். அதே நேரத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒற்றுமையுடன் நாம் பணியாற்றினால் நல்லதே நடக்கும். ஆண்டவன் நம்மோடு இருக்கிறார். எல்லாவற்றிக்கும் மேலாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு மேல் நான் இருக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.


முன்னதாக மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் பேசும் போது, திராவிட கட்சிகள் போல் இல்லாமல் நாம் தனித்து செயல்பட வேண்டும். அந்த கட்சிகளில் வட்டத்திற்கு ஒரு செயலாளர் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். ஆனால் நாம் வாக்குச்சாவடிக்கு ஒரு செயலாளரை நியமிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரஜினிகாந்த் ஒப்புதலுடன் கீழ்க்கண்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர்- கே.அன்பழகன், இணை செயலாளர் ஆர். வெங்க டேசன்(எ) ரஜினி பாபு, துணை செயலாளர்கள் - இ.ராஜமூர்த்தி, டி.கல்யாண குமார், வி.முருகன்.

மகளிர் அணி செயலாளர் - விஜயலட்சுமி டொமினிக் ராபர்ட், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நவீன் குமார்.

இந்த நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர் களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Rajinikanth #RajinikanthPoliticalEntry

No comments: